நவராத்திரி பண்டிகையின்போது ஒரு மில்லியனை கடந்த வாகன விற்பனை!நவராத்திரி 9 நாட நிமிடத்திற்கு 80 வாகனங்கள் பதிவு!
இந்தியாவில் பண்டிகைக் காலம் வந்துவிட்டாலே புதிய கார், பைக் வாங்குவதற்கான ஆர்வம் அதிகரித்துவிடும். குறிப்பாக, நவராத்திரி, ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு வாகனங்களை வாங்குவது இந்தியக் குடும்பங்களில் ஒரு முக்கியமான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நவராத்திரியின் முதல் ஒன்பது நாட்களில் இந்தியாவில் வாகன விற்பனை ஒரு மில்லியனை கடந்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு (FADA) வெளியிட்ட தரவுகளின்படி, நவராத்திரியின் முதல் ஒன்பது நாட்களில் நாடு முழுவதும் சுமார் 10.32 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதைக் கணக்கிட்டால், ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் வாடிக்கையாளர்களிடம் சென்றுள்ளன. மேலும், நிமிடத்திற்கு சராசரியாக 80 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்த விற்பனையில் அதிக பங்களிப்பை வழங்கியிருப்பது இருசக்கர வாகனங்கள்தான். முதல் ஒன்பது நாட்களில் மட்டும் சுமார் 7.60 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த வாகன விற்பனையில் இது 73.6 சதவீதமாகும். குடும்பப் பயன்பாடு, அலுவலகப் பயணம், குறைந்த பராமரிப்புச் செலவு போன்ற காரணங்களால் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகிறது.
குறிப்பாக, நகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் கடந்து செல்வதற்கும், அன்றாடப் பயணச் செலவைக் கட்டுப்படுத்துவதற்கும் இருசக்கர வாகனங்கள் பலருக்கு உதவுகின்றன. இதனால், புதிய பைக் அல்லது ஸ்கூட்டர் வாங்க நினைப்பவர்கள் பண்டிகைக் காலச் சலுகைகளைப் பயன்படுத்தி வாகனங்களை வாங்கி உள்ளனர்.

ஒட்டுமொத்த வாகன விற்பனை அதிகரித்திருந்தாலும், கார் மற்றும் எஸ்யூவி உள்ளிட்ட பயணிகள் வாகனங்கள் பிரிவில் நிலைமை சற்று மாறுபட்டுள்ளது. இந்த ஒன்பது நாட்களில் பயணிகள் வாகனங்களின் பதிவுகள் 1.72 லட்சமாக இருந்தன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 13.66 சதவீதம் குறைவாகும். அதாவது, இருசக்கர வாகனங்களின் வளர்ச்சி ஒட்டுமொத்த விற்பனையை உயர்த்தியிருந்தாலும், கார் சந்தையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதற்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட அதிக விற்பனை ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 2025-ல் சரக்கு மற்றும் சேவை வரி (GST) மாற்றங்களைத் தொடர்ந்து வாகனங்களின் விலைகளில் ஏற்பட்ட குறைவு காரணமாக பல வாடிக்கையாளர்கள் புதிய வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டினர். இதனால், கடந்த ஆண்டு விற்பனை ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு அதனுடன் ஒப்பிடும்போது வளர்ச்சியைப் பதிவு செய்வது சவாலாகியுள்ளது.
மற்ற பிரிவுகளைப் பொறுத்தவரை, வர்த்தக வாகனங்கள் விற்பனை 14.21 சதவீதம் அதிகரித்து 34,120 ஆகப் பதிவாகியுள்ளது. டிராக்டர் விற்பனை 8.87 சதவீதம் உயர்ந்து 20,912 ஆக இருந்தது. அதேநேரத்தில், மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 1.65 சதவீதம் சரிந்து 43,057 ஆகப் பதிவானது. இதனால், வாகனச் சந்தையின் வளர்ச்சி எல்லாப் பிரிவுகளிலும் ஒரே மாதிரியாக இல்லை என்பது தெளிவாகிறது.
நவராத்திரியின் முதல் ஒன்பது நாட்களில் வாகன விற்பனை கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை ஒப்பிடும்போது 1.95 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், வரும் தீபாவளி மற்றும் தந்தேராஸ் பண்டிகைக் காலத்தில் கிடைக்கும் விற்பனை அளவை பொறுத்து, இந்த ஆண்டின் இறுதிக்கட்ட வாகன விற்பனை நிலவரம் எவ்வாறு இருந்தது என்பதை தீர்மானிக்க முடியும்.


Click it and Unblock the Notifications


