போணி ஆகாத காரை பட்டி டிங்கரிங் பாத்து இந்தியர்களின் தலையில் கட்டிய கொரிய நிறுவனம்! விலையை கொறச்சது இதுக்குதானா
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சைரோஸ் (Kia Syros). கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட கியா சைரோஸ் காரின் விற்பனை ஆரம்பத்தில் மிகவும் சிறப்பாகவே இருந்து வந்தது. ஆனால் நாளடைவில் கியா சைரோஸ் காரின் விற்பனை மந்தமாக தொடங்கியது.
இதன் உச்சமாக நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 59 கியா சைரோஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. எனவே சைரோஸ் காரின் விற்பனை அதிகரிக்க வேண்டும் என கியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக அப்டேட் செய்யப்பட்ட 2026 கியா சைரோஸ் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2026 கியா சைரோஸ் காரின் டிசைனை (Design) பொறுத்தவரையில், முன் மற்றும் பின் பக்க பம்பர்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் புதிய 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் மற்றும் நியான் நிற பிரேக் காலிபர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் 3 புதிய கலர் ஆப்ஷன்களும் (Colour Options) வழங்கப்பட்டுள்ளன. அவை ஐவரி சில்வர் மேட், ஐவரி சில்வர் க்ளோஸ் மற்றும் மேக்மா ரெட் ஆகியவை ஆகும்.
அத்துடன் 2026 கியா சைரோஸ் காரில் 4 புதிய வேரியண்ட்களும் (Variants) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை HTE, HTE (O), HTK+ (O) மற்றும் HTX (O) ஆகியவை ஆகும். செயல்திறனை பொறுத்தவரையில் 2026 கியா சைரோஸ் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) கொடுக்கப்பட்டுள்ளன.

அவை 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும். இதில், பெட்ரோல் இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் டீசல் இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
வசதிகளை (Features) பொறுத்தவரையில், ட்யூயல்-பேன் பனரோமிக் சன்ரூஃப், 80க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் வசதிகள், முன் மற்றும் பின் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், 76.2 செமீ பனரோமிக் டிஸ்ப்ளே பேனல் மற்றும் ஓடிஏ அப்டேட்கள் போன்றவை எல்லாம், 2026 கியா சைரோஸ் காரின் மிக முக்கியமான அம்சங்கள் ஆகும்.
அத்துடன் பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் (Crash Test), இது 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5 Star Safety Rating) பெற்றுள்ளது. எனவே 2026 கியா சைரோஸ் காரில் நம்பிக்கையுடன் பயணம் செய்ய முடியும். சரி, விலை எவ்வளவு? என நீங்கள் கேட்பது புரிகிறது.
கியா சைரோஸ் காரின் பழைய மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 8.67 லட்ச ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது கியா சைரோஸ் காரின் விலை குறைந்துள்ளது. புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2026 கியா சைரோஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 8.40 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 2026 கியா சைரோஸ் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 15.80 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே கியா நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். 2026 மாடலின் வருகைக்கு பிறகாவது, கியா சைரோஸ் காரின் விற்பனை உயருமா? என்பதை நாம் சற்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் இந்திய சந்தையில் அடுத்ததாக சைரோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இன்னும் ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. கியா சைரோஸ் இவி (Kia Syros EV) எலெக்ட்ரிக் கார்தான், இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக இருக்கும். எனவே இதன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications








