மார்ச் மாதம் வெளியான புதிய கார்கள் இவை தான்.. வாங்குறதுக்கு ஷோரூம்ல கூட்டம் அலைமோதுது
இந்த மார்ச் மாதம் இந்திய ஆட்டோமொபைல் சந்தை பல புதிய கார் வெளியீடுகளைப் பார்த்திருக்கிறது. சில புதிய கார்கள் மற்றும் பல அப்டேட்கள் என மார்ச் களைகட்டியது. இதில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த பல்வேறு கார் மாடல்களும் அடங்கும். மார்ச் மாதம் இந்தியாவில் வெளியான புதிய மற்றும் அப்டேட் செய்யப்பட்ட கார் மாடல்கள் எவை எவை என்பதைப் பார்க்கலாம்.
ரெனோ டஸ்டர்: பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் விற்பனை நிறுத்தப்பட்ட டஸ்டர் மாடலை மீண்டும் கடந்த மாதம் வெளியிட்டது ரெனோ. முன்பை விட மேம்பட்ட அம்சங்களுடன், கிளாஸி மற்றும் ரக்கட்னஸ் இணைந்த டிசைனில் புதிய மூன்றாம் தலைமுறை டஸ்டர் மாடல் வெளியானது. ஒரு காலத்தில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் ஒரு மிட்-சைஸ் எஸ்யூவி மாடலாக டஸ்டர் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்தக் எஸ்யூவி மாடலை ரூ.10.49 லட்சம் முதல் ரூ.18.49 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது ரெனோ. தற்போது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளை இந்தக் காருக்குக் கொடுத்திருக்கிறது அந்நிறுவனம். விரைவில் 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் தேர்வைும் கொடுக்கவுள்ளது.
ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிப்ட்: மேலே நாம் பார்த்த டஸ்டருக்கு போட்டியாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்கோடாவின் மிட்-சைஸ் எஸ்யூவி கார் குஷாக். இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை மார்ச் மாதம் இந்தியாவில் வெளியிட்டது ஸ்கோடா. ரூ.10.69 லட்சம் முதல் ரூ.18.99 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியானது இந்த மிட்-சைஸ் எஸ்யூவி மாடல்.

புதிய குஷாக்கின் விளக்குகள், பம்பர்கள் மற்றும் அலாய் வீல்கள் ஆகியவை மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருக்கும் நிலையில், காரின் உள்ளே கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகளை மேம்படுத்தியிருக்கிறது ஸ்கோடா. அப்டேட் செய்யப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன், முன்பை விட சற்று பெரிய டிரைவர்ஸ் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. பின்இருக்கை பயணிகளுக்கு மஸாஜிங் வசதியும், முன்இருக்கையில் வென்டிலேஷன் வசதியும் கூட கொடுக்கப்பட்டிருக்கிறது.
மெக்கானிக்கலாக குஷாக் ஃபேஸ்லிட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதே 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் தான் புதிய குஷாக்கிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 1.0 லிட்டர் இன்ஜினுடன் முன்பு கொடுக்கப்பட்டு வந்த 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு மாற்றாக, புதிய மாடலில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைக் கொடுத்து ஸ்கோடா அப்டேட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹூண்டாய் எக்ஸ்டர் ஃபேஸ்லிப்ட்: இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் கார் மாடல்களில் ஒன்றாக இருக்கும் டாடா பன்ச்சுக்கு மாற்றாக விற்பனை செய்யப்பட்டு வரும் மைக்ரோ எஸ்யூவி மாடலான எக்ஸ்டரை கடந்த மாதம் அப்டேட் செய்துள்ளது ஹூண்டாய். வேரியன்ட் லைன்-அப்பில் மாற்றம் செய்திருப்பதுடன், உட்புறமும் வெளிப்புறமும் புதிய நிறங்களுடன், டிசைனிலும் சில மாற்றங்களைச் செய்துள்ளது அந்நிறுவனம்.
ரூ.5.80 லட்சம் முதல் ரூ.9.57 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது புதிய எக்ஸ்டர். சிங்கிள் பேன் சன்ரூஃப், 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 4 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்டு சிஸ்டம் உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளது எக்ஸ்டர்.
இந்தக் காரிலும் மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இல்லை. முந்தைய மாடலில் பயன்படுத்தப்பட்டு வந்த அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல்+CNG ஆகிய பவர்ட்ரெயின் தேர்வுகள் தான். பயணிகள் பாதுகாப்பிற்காக இந்தக் காரில் 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா சென்சார்களுடன் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிப்ட்: செடானுக்கு தற்போது இந்தியாவில் பெரிய அளவில் வரவேற்பு இல்லையென்றாலும், தங்களுடைய மிட்-சைஸ் செடான் மாடலான வெர்னாவை அப்டேட் செய்துள்ளது ஹூண்டாய். இந்த அப்டேட்டில் டிசைனில் பெரிய அளவில் அந்நிறுவனம் கவனம் செலுத்தவில்லை. மாறாக கூடுதல் வசதிகளைக் கொடுத்திருப்பதோடு, வேரியன்ட் லைன்-அப்பையும் மாற்றியமைத்துள்ளது.
ரூ.10.98 லட்சம் முதல் ரூ.18.25 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ளது மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் வெர்னா. காரின் வெளிப்புறம் முகப்பு விளக்கு கிளஸ்டர் மட்டும் புதிதாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது. உட்புறம், வென்டிலேஷன் வசதி கொண்ட பவர்டு முன்பக்க சீட்கள், ஆம்பியன்ட் லைட்டிங், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் சிங்கிள் பேன் சன்ரூஃப் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மெக்கானிக்கலாக முந்தைய மாடலில் இருந்த அதே 1.5 லிட்டர் NA பெட்ரோல இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளே புதிய மாடலிலும் இருக்கிறது. பாதுகாப்பிற்காக லெவல் 2 ADAS, 360 டிகிரி கேமரா, பிளைண்டு ஸ்பாட் மானிட்டரிங், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
லெக்சஸ் ES: மேம்படுத்தப்பட்ட எட்டாம் தலைமுறை ES சொகுசு செடான் மாடலை இந்தியாவில் ரூ.89.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது லெக்சஸ். வெளிப்புறம் சின்னச் சின்ன மாற்றங்களுடன், காரின் உட்புறமே அதிகளவிலான மேம்பாடுகளைச் சந்தித்துள்ளது. 14 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே, வென்டிலேட் செய்யப்பட்ட சீட்கள், மார்க் லெவின்சன் சவுண்டு சிஸ்டம் உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சொகுசு செடான் மாடல்.
முழுமையான எலெக்ட்ரிக் காரான இதில் 75 kWh பேட்டரி பேக்கும், 343 hp பவர் மற்றும் 438 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இரண்டை எலெக்ட்ரிக் மோட்டார்கள் கொண்ட பவர்ட்ரெயின் செட்டப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் பவர்ட்ரெயினானது 580 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுக்கும் திறனைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆடி SQ8: ஸ்டாண்டர்டான Q8 மற்றும் ஸ்போர்ட்டியான RSQ8 ஆகிய ஆடி கார்கள் ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் நிலையில், அவற்றுக்கு இடைப்பட்ட பெர்ஃபாமன்ஸ் அடிப்படையிலான ஒரு சொகுசு கார் மாடலாக புதிய sQ8-ஐ Fஇந்தியாவில் கடந்த மாதம் வெளியிட்டுள்ளது ஆடி. ரூ.1.78 கோடி என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தப் புதிய கார் இந்தியாவில் வெளியாகியுள்ளது.
பெரிய கிரில், ஸ்லீக்கியான முகப்பு விளக்குகள், ஸ்போர்ட்டியான பம்பர்கள் மற்றும் கூபே போலான ரூஃப்லைன் ஆகிய அம்சங்களுடன் மிகவும் அக்ரஸிவ்வான டிசைனைக் கொண்டுள்ளது இந்த பெர்ஃபாமன்ஸ் சொகுசு கார். இந்தக் காரில் 500 hp பவர் மற்றும் 770 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 4 லிட்டர், ட்வின் டர்போ, V8 பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜினானது 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆடியின் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் அம்சத்தையும் கொண்டுள்ளது.
மெர்சிடீஸ் பென்ஸ் V-கிளாஸ்: சொகுசு எம்பிவி கார் மாடல்களுக்கு இந்தியாவில் சமீபமாக மவுசு கூடியிருக்கிறது. லெக்சஸ், டொயோட்டா மற்றும் கியா ஆகிய நிறுவனங்களின் சொகுசு எம்பிவி கார்கள் இந்திய சந்தையில் சிறப்பாக செயல்படுவதைப் பார்த்து வருகிறோம். எனவே மெர்சிடீஸும் தங்களது V-கிளாஸ் எம்பிவி மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. ரூ.1.4 கோடி என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியுள்ளது இந்த சொகுசு எம்பிவி கார்.
இரண்டாம் வரிசை இருக்கை பிரதான சொகுசு வசதிகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த எம்பிவி கார் நல்ல இடவசதி கொண்டதாக இருப்பதோடு, பவர்டு ரெக்லைனிங் சீட்கள், ஆம்பியன்ட் லைட்டிங், 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மாற்றிக் கொள்ளும் வகையிலான சீட்டிங் லேஅவுட் ஆகிய அம்சங்களையும் கொண்டிருக்கிறது. இந்த சொகுசு எம்பிவி காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகையான இன்ஜின் தேர்வுகளுடன், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைக் கொடுத்துள்ளது மெர்சிடீஸ்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மார்ச் மாதம் சொகுசு பிரிவில் பல புதிய கார்கள் வெளியாகியுள்ளன. மாஸ் மார்க்கெட் பிரிவில் நிறைய கார்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. ரெனோ டஸ்டரின் வெளியீடு கொண்டாட்டமான ஒன்றாக வந்தமைந்திருக்கிறது. மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை வாங்க வாடிக்கையாளர்கள் விரும்பும் இந்த நேரத்தில் டஸ்டர் வெளியாகியிருப்பது சிறப்பான விஷயம். மேலும், பல புதிய கார் வெளியீடுகளை வரும் மாதங்களிலும் நாம் எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








