ரூ.1.95 கோடியில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், i7 கார்கள் இந்தியாவில் அறிமுகம்... முழு விபரம்!
இந்தியாவின் ஆடம்பர கார் சந்தையில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் முக்கிய மாடலாக இருந்து வருகிறது. இந்த நிலையில், டிசைன், வசதிகள் என அனைத்து விதத்திலும் மேம்படுத்தப்பட்ட 7 சீரிஸ் செடான் சொகுசு காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன் 7 சீரிஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனான ஐ7 காரும் இன்று விற்பனைக்கு வந்துள்ளது.
புதிய 7 சீரிஸ் மற்றும் ஐ7 மாடல்களின் ரூ.1.95 கோடி எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து நான்காவது ஆண்டு காலத்தில் கிடைக்கும் இந்த இடைக்கால அப்டேட் மாடலில் வெளிப்புற வடிவமைப்பு மட்டுமின்றி, காருக்குள் வழங்கப்படும் தொழில்நுட்ப வசதிகளிலும் பிஎம்டபிள்யூ நிறுவனம் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்துள்ளது.

புதிய தோற்றத்தில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்
புதிய 7 சீரிஸ் காரின் முன்பகுதியில் அடையாளமான சிறுநீரக வடிவிலான கிரில் தற்போது விளக்கொளியுடன் கூடிய illuminated treatment உடன் வழங்கப்படுகிறது. இதனுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட கிரிஸ்டல் ஹெட்லைட்டுகள் காரின் பிரீமியம் தோற்றத்தை மேலும் அதிகரிக்கின்றது.
இந்த விலை உயர்ந்த சொகுசு செடான் கார் 5.3 மீட்டர் நீளமும், 3.25 மீட்டர் வீல்பேஸும் கொண்டதாக வந்துள்ளது. இதனால், பின்புற பயணிகளுக்கு அதிக இடவசதியை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய பிஎம்டபிள்யூ லோகோ மற்றும் மாற்றியமைக்கப்பட்ட விளக்குகளும் வெளிப்புறத்தில் கவனம் பெறுகின்றன.
பவர்ஃபுல் மாடல்
இந்தியாவில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் தொடர்ந்து 740ஐ வேரியண்ட்டில் கிடைக்கிறது. இதில் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 400பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இதனுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்டன் இணைக்கப்பட்டுள்ள இந்த பவர்டிரெயின் பின்புற சக்கரங்களுக்கு சக்தியை வழங்குகிறது. 0-100 கி.மீ வேகத்தை 5.4 வினாடிகளில் எட்டும் திறன் கொண்ட இந்த கார் அதிகபட்சமாக 250 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய i7 எலெக்ட்ரிக் காரில் பவர்ஃபுல் வேரியண்ட்
பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் காரில் புதிய i7 M70 xDrive என்ற வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, இந்த புதிய எம்70 எக்ஸ்டிரைவ் வேரியண்ட்டில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து 680பிஎச்பி பவரையும் 1,100என்எம் டார்க்கையும் வழங்கும்.
இந்த மாடல் வெறும் 3.8 வினாடிகளில் 0-100 கி.மீ வேகத்தை எட்டும். WLTP சான்றிதழின்படி ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 686 கி.மீ வரை பயணிக்கும் திறன் இருப்பதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது. இந்த பவர்ஃபுல்லான புதிய வேரியண்ட்டிற்கு ரூ.2.65 கோடி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், ஏற்கனவே உள்ள i7 eDrive50 வேரியண்ட்டில் அதிக திறன்வாய்ந்த 112.5kWh பேட்டரி பேக் கொடுத்து புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் WLTP சோதனைநிலை அடிப்படையில் 728 கிமீ வரை ரேஞ்ச் வழங்கும் என பிஎம்டபிள்யூ தெரிவிக்கிறது. பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் காரின் eDrive50 வேரியண்ட் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் நிலையில், M70 xDrive வேரியண்ட்டானது இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.
காருக்குள் சினிமா தியேட்டர் போல வசதி
புதிய 7 சீரிஸ் மற்றும் ஐ7 கார்களின் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்று அவற்றின் இன்டீரியர் தொழில்நுட்ப அம்சங்களை கூறலாம். முன்பக்க பயணிக்காக 14.6 அங்குல திரையும், ஓட்டுனருக்கு பனரோமிக் விஷன் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே அமைப்பும் உள்ளது.
பின்புற பயணிகளுக்காக 31.3 அங்குல அளவிலான மிகப்பெரிய 8K தியேட்டர் திரை அமைப்பு வழங்கப்படுகிறது. போவர்ஸ் அண்ட் வில்கின்ஸ் பிரிமீயம் ஆடியோ சிஸ்டத்துடன் இணைந்து இது நீண்ட பயணங்களின்போது தனிப்பட்ட சினிமா அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இந்த கார்கள் ஓட்டுனர் அமர்த்தி இயக்கப்படுவதால், பின்புறத்தில் அமரும் உரிமையாளருக்காக Executive Lounge இருக்கைககள் கவனமாக மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன. இருக்கையை அதிகபட்சமாக 43 டிகிரி வரை சாய்த்துக்கொள்ள முடியும். இந்த காரில் Soft close வசதியுடன் தானியங்கி கதவுகள், ஆம்பியன்ட் லைட்டிங், உயர்தர லெதர் இருக்கைகள் மற்றும் வேலைப்பாடுகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மற்றும் ஐ7 ஆகியவை பிரீமியம் லக்சுரி செடான் பிரிவில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் EQS போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இது நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் பல்வேறு அம்சங்களை பெற்றுள்ளதால், அதற்கு ஈடாக வரவேற்பையும் பெறும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications


