புதிய கார் வாங்க திட்டமிடுகிறீர்களா? முன்பதிவு முதல் டெலிவரி வரை தேவையான ஆவணங்கள் விபரம்!!
வரும் பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்கும் கனவை நனவாக்கும் முனைப்பில் பலர் திட்டம் போட்டு வைத்திருப்பீர்கள். பிடித்த காரைத் தேர்வு செய்து ஷோரூமுக்குச் சென்ற பிறகு, தேவையான ஆவணங்கள் தயாராக இல்லை என்றால் முன்பதிவு முதல் டெலிவிரி மற்றும் வாகனப் பதிவு பணிகள் வரை தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
குறிப்பாக கார் லோன், பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்வது, ஆர்டிஓ பதிவு போன்றவற்றிற்கு முறையான ஆவணங்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்வது அவசியம். இதற்காக, புதிய காரை புக் செய்வதற்கு முன்பே எந்தெந்த ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வது முக்கியம். முன்பதிவு முதல் கார் டெலிவரி வரை பொதுவாகத் தேவைப்படும் ஆவணங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

முன்பதிவு ஆவணங்கள்
ஷோரூமுக்கு சென்று முதலில் கார் புக்கிங் செய்யும்போது, வாடிக்கையாளரின் அடையாளம் மற்றும் முகவரியை உறுதி செய்வதற்கான ஆவணங்களை டீலரில் உள்ள விற்பனை பிரதிநிதிகள் கேட்பார்கள். ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்றவை அடையாளச் சான்றாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
முகவரியை உறுதி செய்ய ஆதார் கார்டு, பாஸ்போர்ட், மின்சாரக் கட்டண ரசீது அல்லது ஏற்றுக்கொள்ளப்படும். இதனுடன் PAN கார்டும் மிக முக்கியமான ஆவணமாக இருக்கிறது. ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான எக்ஸ்ஷோரூம் விலை கொண்ட கார்களுக்கு 1 சதவீதம் டிசிஎஸ் வரி பிடித்தம் செய்யப்படும். குறிப்பிட்ட வாகனப் பரிவர்த்தனைகளில் PAN விவரம் தேவைப்படுவதால், முன்பதிவு செய்யும்போதே அதைத் தயாராக வைத்திருப்பது நல்லது. PAN இல்லாதவர்களுக்கு பொருந்தும் சூழலில் Form 60 போன்ற மாற்று ஆவணம் தேவைப்படலாம்.

புக்கிங் தொகையை செலுத்தியதும், புக்கிங் ரசீது மற்றும் ஆர்டர் ஃபார்ம் போன்ற ஆவணங்களை டீலரிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் தேர்வு செய்த மாடல், வேரியண்ட், நிறம், புக்கிங் தொகை உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை அப்போதே சரிபார்ப்பது பின்னர் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கும்.
பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்கிறீர்களா?
பழைய காரை கொடுத்து புதிய காரை வாங்கப் போகிறீர்கள் என்றால், புதிய காருக்கான ஆவணங்களுடன் உங்கள் பழைய வாகனத்தின் ஆவணங்களும் தேவைப்படும். குறிப்பாக RC கார்டு, இன்சூரன்ஸ் ஆவணம் மற்றும் மாசு உமிழ்வு சான்றிதழ் ஆகியவற்றை தயாராக வைத்திருப்பது அவசியம்.
பழைய காருக்கு இன்னும் லோன் போட்டு கணக்கு முடிந்திருந்தால், சம்பந்தப்பட்ட வங்கியிடமிருந்து NOC அல்லது கடன் முடிவடைந்ததற்கான தேவையான ஆவணங்கள் முன்கூட்டியே பெற்று வைத்திருப்பதும் அவசியம். மேலும், RC கார்டில் உள்ள உரிமையாளர் விவரங்கள் மற்றும் வாகனத்தின் உண்மையான விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதையும் எக்ஸ்சேஞ்ச் செய்வதற்கு முன்பு சரிபார்க்க வேண்டும்.

கார் லோன் போறீங்களா?
காரை முழுமையாக சொந்தப் பணத்தில் வாங்காமல் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் மூலம் லோன் பெறுகிறீர்கள் என்றால், உங்கள் வருமானத்தை நிரூபிக்கும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். சம்பளப் பிரிவினரிடம் பொதுவாக 3 மாதங்கள் முதல் 6 மாதங்களுக்கான சம்பளச் சான்று, வங்கி கணக்கின் பரிவர்த்தன அறிக்கை மற்றும் படிவம் 16 போன்றவை கேட்கப்படலாம்.
சுயதொழில் செய்பவர்களிடம் ITR சான்று, வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் தொழில் தொடர்பான ஆவணங்கள் கேட்கப்படும். வங்கி மற்றும் கடன் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப இந்தப் பட்டியல் மாறுபடும். சில சந்தர்ப்பங்களில் இணை விண்ணப்பதாரரின் வருமானம் மற்றும் அடையாள ஆவணங்களும் தேவைப்படலாம்.
அதனால், கார் புக்கிங் செய்வதற்கு முன்பே எந்த வங்கியில் லோன் பெறப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்து, அந்த நிறுவனத்திடம் தேவையான ஆவணங்களின் இறுதிப் பட்டியலைக் கேட்டு வைத்துக்கொள்வது சிறந்தது. மேலும், உங்களது சம்பளக் கணக்கு உள்ள வங்கிகளில் கார் வாங்குவதற்கு சிறப்புச் சலுகைகளில் கடன் வாங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று பார்த்து, அதற்கான முன்கூட்டியே ஒப்புதல் பெற்றுவிட்டால், காரை கூடிய விரைவில் டெலிவிரி பெறும் வாய்ப்பும் உள்ளது.
RTO பதிவு ஆவணங்கள்?
கார் வாங்கிய பிறகு அதை உங்கள் பெயரில் பதிவு செய்வது அடுத்த முக்கியமான கட்டமாகும். புதிய வாகனப் பதிவுக்கான பணிகளை பெரும்பாலும் டீலரே RTO அலுவலகத்துடன் ஒருங்கிணைத்து மேற்கொள்வார். இதில் படிவம் 20 என்ற வாகனப் பதிவு விண்ணப்பம், படிவம் 21 என்ற வாகனத்தை விற்பனை செய்ததற்கான சான்று, மற்றும் படிவம் 22 என்ற சாலையில் இயக்குவதற்கான தகுதியை தெரிவிக்கும் சான்று உள்ளிட்ட ஆவணங்கள் இடம்பெறும்.
காரை லோன் மூலம் வாங்கினால், வாகனத்தின் RC கார்டில் கடன் நிறுவனத்தின் விபரங்களைப் பதிவு செய்வதற்கான கூடுதல் ஆவணங்கள் தேவைப்படும். இதற்கான படிவங்கள் மற்றும் கையொப்பங்களை டீலர் மற்றும் வங்கி ஒருங்கிணைத்து பெறுவார்கள். மேலும், டெலிவரிக்கு முன்பே இன்சூரன்ஸ் பாலிசி செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மூன்றாம் நபர் காப்பீடு மற்றும் ஒருங்கிணைந்த இன்ஸ்யூரன்ஸ் திட்டங்களுக்கு இடையிலான வித்தியாசத்தையும் புரிந்துகொண்டு தேர்வு செய்வது நல்லது.
டெலிவரி எடுக்கும் முன்
கார் ஷோரூமுக்கு வந்துவிட்டது என்ற தகவல் கிடைத்தவுடன், அவசரப்பட்டு டெலிவரி எடுக்காமல் காரையும் ஆவணங்களையும் ஒருமுறை முழுமையாகச் சரிபார்க்க வேண்டும். குறிப்பாக இன்வாய்ஸ் சான்றில் இருக்கும் சேஸி மற்றும் எஞ்சின் எண்கள் காரின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களுடன் ஒத்துப் போகிறதா என்பதைப் பாருங்கள்.
அதேபோல், Invoice, RC மற்றும் Insurance ஆவணங்களில் உங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் சரியாக உள்ளதா என்பதையும் உறுதி செய்யுங்கள். நீங்கள் வாங்கிய ஆக்ஸசெரீகள், நீட்டிக்கப்பட்ட வாரண்டி அல்லது வேறு கூடுதல் சேவைகள் இருந்தால், அவற்றுக்கான பில் அல்லது சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
டீலரிடம் எழுத்துப்பூர்வமாக பெற வேண்டிய விபரங்கள்
கார் புக்கிங் செய்தவுடன் ரசீதை மட்டும் பெற்றுக்கொண்டு நிறுத்திவிடாமல், முழுமையான ஆன்ரோடு விலை குறித்த Break-up கேட்டு வாங்குவது மிகவும் முக்கியம். எக்ஸ்ஷோரூம் விலை, ஆர்டிஓ கட்டணம், வாகனத்திற்கான இன்ஸ்யூரன்ஸ், ஆக்சஸெரீகள், நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் பிற கட்டணங்கள் தனித்தனியாக குறிப்பிடப்பட்டுள்ளதாக என்பதையும் பார்ப்பது அவசியம்.
அதோடு புக்கிங் ரசீது, ஆர்டர் ஃபார்மில் எப்போது டெலிவிரி கொடுக்கப்படும் மற்றும் புக்கிங்கை ரத்து செய்தால் புக்கிங் தொகை திரும்ப பெறுவதற்கான விதிமுறைகள் குறித்த தகவல்களையும் எழுத்துப்பூர்வமாக வாங்கிவிடுவது நல்லது. மேலும், விலையில் பின்னர் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், ஏற்கனவே ஒப்புக்கொண்ட விபரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க இந்த ஆவணங்கள் உதவும்.


Click it and Unblock the Notifications


