நவம்பரில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய கார்கள்! டென்ஸா முதல் இன்னோவா ஹைகிராஸ் வரை!
பண்டிகை காலத்தையொட்டி கடந்த இரு மாதங்களாக ஏராளமான புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், வரும் நவம்பரிலும் பல புதிய கார் மாடல்கள் இந்திய சந்தையில் களமிறங்க வரிசை கட்டி இருக்கின்றன.
நவம்பர் பட்டியலில் பிரிமீயம் ரக கார்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக மெர்சிடிஸ் பென்ஸ், பிஒய்டி நிறுவனத்தின் டென்ஸா பிராண்டின் சொகுசு கார்கள் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனங்களின் புதிய மாடல்கள் கவனம் ஈர்க்கின்றன. வரும் நவம்பரில் எதிர்பார்க்கப்படும் புதிய கார் மாடல்களின் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எலெக்ட்ரிக்
சொகுசு கார் மார்க்கெட்டிலும் மின்சார வகை கார்களுக்கான மவுசு கூடி வருகிறது. இதனை மனதில் வைத்து மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஜிஎல்சி எலெக்ட்ரிக் (Mercedes-Benz GLC Electric) கார் நவம்பர் 4ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ரூ.80 லட்சம் முதல் ரூ.85 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது.
இந்த மின்சார எஸ்யூவி காரில் 94KWh பேட்டரி இருக்கும். இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 715 கிமீ வரை சோதனை நிலை தரவுகளின்படி செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சக்திவாய்ந்த மின்சார காரில் இருக்கும் இரண்டு மின்சார மோட்டார்கள் 490 எச்பி பவரையும், 800 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வல்லமை கொண்டதாக இருக்கும். ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் முக்கிய அம்சமாக இருக்கும்.

டென்ஸா டி9 மற்றும் இசட்9 ஜிடி
சீனாவின் பிஒய்டி (BYD) நிறுவனத்தின் சொகுசு கார் பிராண்டான டென்சா (Denza), வரும் நவம்பர் 13ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த நிகழ்வில் டென்ஸா டி9 (D9) சொகுசு எலெக்ட்ரிக் எம்பிவி காரும் டென்ஸா இசட்9 ஜிடி (Z9 GT) என இரண்டு மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதில், டி9 மாடல் பெரிய குடும்பங்களுக்கான சொகுசு பயணத்தை வழங்கும். இதில், 103kWh பேட்டரி இருக்கும். முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்சார மோட்டார் 313 எச்பி பவரையும் 360 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதன் சர்வதேச WLTP கணக்கீட்டின்படி, ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 520 கிமீ வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.
அடுத்து இசட்9 ஜிடி ஒரு ஸ்போர்ட்டியான எலெக்ட்ரிக் ஷூட்டிங் பிரேக் வகை மாடலாக இருக்கும். இதில் 122.5kWh பேட்டரியும் மூன்று மின்சார மோட்டார்களும் உள்ளன. இவை இணைந்து 1,156 எச்பி பவரை வழங்கும். இதன் சர்வதேச WLTP சோதனை நிலை தரவுகளின்படி 600 கிமீ வரை ரேஞ்ச் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேஎஸ்டபிள்யூ காம்பேட்
இதுவரை ஸ்டீல், சிமென்ட் உள்ளிட்ட துறைகளில் ஜாம்பவானாக கோலோய்ச்சி வரும் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் பங்குகளை கைப்பற்றி கார் சந்தையிலும் இறங்கி இருக்கிறது. அடுத்து தனது சொந்த பிராண்டிலேயே கார்களை களமிறக்க உள்ளது.
இதற்காக சீனாவை சேர்ந்த செரி வாகன நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன்படி, தனது ஜேஎஸ்டபிள்யூ பிராண்டில் செரி நிறுவனத்தின் ஜேட்டூர் டி2 என்ற மாடலை காம்பேட் என்ற பெயரில் ரீபேட்ஜ் செய்து அறிமுகம் செய்ய இருக்கிறது. வரும் நவம்பர் 15ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஃபேஸ்லிஃப்ட்
டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Toyota Innova Hycross) காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் நவம்பரில் பெரும் கவனம் ஈர்க்கிறது. வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலானது வரும் நவம்பர் 26ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய மாடலில் முன்பக்க வடிவமைப்புடன், கிரில், ஹெட்லைட்டுகள் மற்றும் சில உட்புற வசதிகளில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. தற்போதைய 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் எஞ்சின் தேர்வுகள் தொடரும். ரூ.20 லட்சம் முதல் ரூ.34 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. E85 எரிபொருளுக்கு இணக்கமான மாடலும் அறிமுகம் செய்யப்படும் என்று ஆட்டோமொபைல் துறை பரபரக்கிறது.


Click it and Unblock the Notifications



