பல மாத எதிர்பார்ப்புக்கு பின் வந்த புதிய கார் அறிமுகங்கள்! வாங்குவதாக இருந்தால் இதில் ஒன்றை வாங்க பாருங்க!
2026ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், இந்த மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட அனைத்து கார் நிறுவனங்களில் இருந்தும் புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது நேரடியாக இந்தியாவில் கார்கள் விற்பனையில் எதிரொலித்துள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் இந்தியாவில் சுமார் 13 இலட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2025ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் விற்பனையான கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் 16% அதிகமாகும். இதற்கு காரணமான புதிய கார் அறிமுகங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris): கடந்த 2026 ஜனவரி மாதத்தில் வெளியான இந்த அளவில் பெரியதான மாருதி எஸ்யூவி (SUV) ரக கார் முதல் மாதத்தில் 15,240 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டது. அதன்பின், பிப்ரவரிக்குள் விக்டோரிஸ் காருக்கு 75,000 முன்பதிவுகள் மற்றும் சுமார் 35,000 டெலிவரிகள் (Deliveries) நிகழ்ந்தன.

ரெனால்ட் டஸ்டர் (Renault Duster): 4 வருடங்களுக்கு பிறகு கடந்த மார்ச் மாதத்தில் மீண்டும் களமிறங்கிய புதிய டஸ்டர் ஆனது அதன் 3ஆம் தலைமுறை மாடல் ஆகும். பெரும் வரவேற்பைப் பெற்றுவரும் இது ரெனால்ட்டின் மார்ச் மாத விற்பனையில் முக்கிய பங்காற்றியது. எந்த அளவிற்கு என்றால், 2025 மார்ச் மாதத்தை காட்டிலும் கடந்த மார்ச்சில் இந்தியாவில் ரெனால்ட் கார்களின் விற்பனை எண்ணிக்கை 77.3% அதிகரித்துள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV 7XO): விக்டோரிஸ் காரை போன்று, ஜனவரி தொடக்கத்தில் அறிமுகமான இந்த புதிய மஹிந்திரா காரின் டெலிவிரிகள் கடந்த ஜனவரி மாதத்திலேயே துவங்கப்பட்டுவிட்டன. ஆனால், இந்த காரின் விலை குறைவான வேரியண்ட்களை புக் செய்தவர்களுக்கு டெலிவிரிகள் இந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே துவங்குகிறது. ஜனவரி 14 பொங்கல் பண்டிகை (Pongal Festival) சமயத்தில் இந்த கார் மற்றும் எக்ஸ்இவி 9எஸ் (XEV 9s) என இரண்டிற்கும் சேர்த்து கிட்டத்தட்ட சுமார் 94,000 முன்பதிவுகள் கிடைத்தன.

ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் (Skoda Kushaq Facelift): 2026ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே வந்த இந்த கார், கடந்த 2023இல் அறிமுகம் செய்யப்பட்ட குஷாக் காரின் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வெர்சனாகும். இதன் அறிமுகத்தின் மூலமாகவே முதல்முறையாக 3 மாத காலக்கட்டத்தில் ஸ்கோடா அதன் அதிகபட்ச விற்பனை எண்ணிக்கையான 20,028 யூனிட்களை எட்ட முடிந்தது. இது முந்தைய ஆண்டை விட 17% அதிகமாகும்.
புதிய கியா செல்டோஸ் (New Kia Seltos): 2019ஆம் ஆண்டில் செல்டோஸ் மூலமாக இந்திய சந்தையில் நுழைந்த கியா நிறுவனம், அதன்பின் செல்டோஸ் காரின் புதிய 2ஆம் தலைமுறை மாடலை கடந்த ஜனவரி 2ஆம் தேதிதான் அறிமுகப்படுத்தியது. அதாவது, கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பின் அடுத்த தலைமுறை வெர்சனில் அறிமுகமாகிய புதிய செல்டோஸ் துவக்க மாதத்திலேயே 10 ஆயிரத்து 639 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டது.
மாருதி சுஸுகி இ-விட்டாரா (Maruti Suzuki eVitara): மாருதி சுஸுகியின் முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) என்பதினாலேயே கடந்த சில வருடங்களாகவே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இ-விட்டாரா ஒருவழியாக கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முதல் மாருதி எலெக்ட்ரிக் காரின் வருகையின் காரணமாகவே கடந்த பிப்ரவரி மாதத்தில் பெரியதாக எந்த முக்கிய கார் அறிமுகமும் இல்லை.
நிசான் கிராவைட் (Nissan Gravite): ரெனால்ட் டிரைபர் (Renault Triber) காரின் அடிப்படையில் நிசான் உருவாக்கிய காரான கிராவைட் பிப்ரவரி 17ஆம் தேதி மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சில வாரங்களிலேயே புக் செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட்டு விட்டாலும், இதுவரையில் எத்தனை கிராவைட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்கிற விபரம் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாம் கடந்த ஆண்டில் எதிர்பார்த்ததை போல், 2026ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே பல முக்கிய கார் அறிமுகங்கள் நிகழ்ந்துள்ளன. ஏனெனில், எப்போதுமே வருடத்தின் துவக்கத்தில்தான் முக்கியமான கார்களை அறிமுகம் செய்ய எந்தவொரு கார் நிறுவனமும் விரும்பும். இந்த தொகுப்பில் நாம் பார்த்தவை மட்டுமின்றி, ஃபோக்ஸ்வேகன் டைரோன் ஆர்-லைன் (Volkswagen Tayron R-Line) உள்பட சில விலையுயர்ந்த சொகுசு கார்களும் இந்த மூன்று மாதங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும், டாடா பன்ச் (Tata Punch) மற்றும் பன்ச் இவி கார்களின் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வெர்சன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








