தீபாவளிக்கு முன் இந்தியாவில் களமிறங்கும் 9 புதிய கார்கள்!
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்திய கார் சந்தையில் புதிய மாடல்களின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக அக்டோபரில் சொகுசு கார்கள் முதல் பிரபலமான எஸ்யூவிகள், செடான்கள், ஹேட்ச்பேக்குகள் வரை பல புதிய கார்கள் களமிறங்க உள்ளன. இதில் தேதி உறுதி செய்யப்பட்ட மாடல்களும், அறிமுகமாகும் என்ற வலுவாக எதிர்பார்க்கப்படும் கார்களும் இங்கே இடம்பெற்றுள்ளன.
1. மெர்சிடிஸ் மேபக் எஸ் க்ளாஸ் (ஃபேஸ்லிஃப்ட்) - அக்டோபர் 5
Mercedes-Maybach S-Class உலகின் முன்னணி ஆடம்பர செடான்களில் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் கூடுதல் அப்டேட்டுகளுடன், புதுப்பிக்கப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரும் அக்டோபர் 5ந் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. புதிய வடிவமைப்பு, கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் மேபக் பிராண்டுக்கே உரித்தான ஆடம்பரமான கேபின் ஆகியவற்றுடன் இந்த கார் வரவுள்ளது.

புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ் க்ளாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் 3.0 லிட்டர் மற்றும் 4.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 48V மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம், பின்புற பயணிகளுக்கான சொகுசு இருக்கைகள், பெரிய டிஜிட்டல் திரைகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள் இடம்பெறலாம். இந்த கார் ரூ.3 கோடி ஆரம்ப விலையில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது.
2. வால்வோ EX90 அக்டோபர் 12
வால்வோ கார் நிறுவனத்தின் மிக உயரிய மின்சார எஸ்யூவி மாடல்களில் ஒன்றான EX90, அக்டோபர் 12ந் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. மூன்று வரிசை இருக்கைகளுடன் வரும் இந்த பிரீமியம் எஸ்யூவி, பாதுகாப்பு தொழில்நுட்பம், நீண்ட தூர பயணம் மற்றும் நவீன மின்சார கார் தொழில்நுட்பங்களுடன் வருகிறது.
இந்த புதிய EX90 மின்சார காரில் இரட்டை மின்மோட்டார், ஆல் வீல் டிரைவ் மற்றும் 111kWh பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிமீ தூரத்திற்கும் அதிகமாக பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். LiDAR பாதுகாப்பு அமைப்பு, பெரிய தொடுதிரை மற்றும் மேம்பட்ட ஓட்டுனர் உதவி வசதிகள் இடம்பெற்றிருக்கும். ரூ.1.5 கோடி ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

3. வால்வோ ES90 - அக்டோபர் 12
புதிய EX90 மின்சார எஸ்யூவி காருடன் சேர்த்து, வால்வோ நிறுவனம் ES90 சொகுசு மின்சார காரையும் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. செடான் மற்றும் எஸ்யூவி என இரண்டையும் கலந்த கிராஸ்ஓவர் வடிவமைப்பின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரீமியம் மாடல், ஆடம்பரமான கேபின், அதிக செயல்திறன் மற்றும் நீண்ட தூர மின்சார பயணத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து வருகிறது.
இந்த காரிலும் இரட்டை மின்மோட்டார் மற்றும் ஆல் வீல் டிரைவ் அமைப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய பேட்டரி, நீண்ட பயண தூரம், LiDAR, பெரிய மத்திய தொடுதிரை மற்றும் உயர்தர ஆடியோ அமைப்பு போன்ற வசதிகள் கிடைக்கலாம். இந்த காரும் ரூ.1.5 கோடி ஆரம்ப விலையில் வரும் வாய்ப்புள்ளது.
4. ஆடி க்யூ3 - அக்டோபர் 16
மூன்றாம் தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ள புதிய ஆடி க்யூ3 சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் அக்டோபர் 16ந் தேதி அறிமுகமாகிறது. புதிய தலைமுறை வடிவமைப்பு, நவீன கேபின் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் வரும் இந்த பிரீமியம் எஸ்யூவி, இந்தியாவில் ஆடி
நிறுவனத்தின் முக்கியமான மாடல்களில் ஒன்றாக மீண்டும் களமிறங்குகிறது.
புதிய Q3 காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் வழங்கப்படலாம். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பெரிய தொடுதிரை, இணைப்பு வசதிகள் மற்றும் ADAS பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும். இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுவதால், ரூ.50 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

5. ரெனோ டஸ்ட்டர் ஹைப்ரிட் - அக்டோபர் 17
இந்த பட்டியலில் அதிகமான வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள மாடல் புதிய ரெனோ டஸ்ட்டர் ஹைப்ரிட் மாடலாக இருக்கிறது. வரும் அக்டோபர் 17ந் தேதி இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய தலைமுறை வடிவமைப்பு, பிரீமியம் கேபின் மற்றும் வலுவான ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் டஸ்ட்டர் வருகிறது. ஏற்கனவே 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல்களில் கிடைக்கிறது.
இந்த நிலையில், அக்டோபர் 17ல் வரும் ஹைப்ரிட் மாடல் வாடிக்கையாளர்களிடத்தில் அதிக கவனம் பெற்றுள்ளதற்கு இந்த கார் 22 முதல் 25 கிமீ மைலேஜ் வழங்கும் என்ற தகவலும் முக்கிய காரணமாக உள்ளது. அடுத்து 160 எச்பி பவரை வழங்கும் சக்திவாய்ந்த 1.8 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரில் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் இரண்டு மின்மோட்டார்கள் இணைந்த E-Tech ஹைபிரிட் அமைப்பு இடம்பெறும். 360 டிகிரி கேமரா, பெரிய தொடுதிரை மற்றும் ADAS வசதிகள் கிடைக்கும். இந்த கார் ரூ.15 லட்சம் முதல் ரூ.16 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காருக்கான முதல் லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட கார்களுக்கு ஏற்கனவே முன்பதிவு முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
6. ஹூண்டாய் பேயான் - அக்டோபர் / பண்டிகை காலம்
ஹூண்டாய் நிறுவனத்தின் புத்தம் புதிய பேயான் எஸ்யூவி கார் வாடிக்கையாளர்களின் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த காருக்கான முன்பதிவு சில தினங்களுக்கு முன் ரூ.11,000 முன்பணத்துடன் துவங்கிவிட்டது. எனினும், அறிமுக தேதியை நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை. ஹூண்டாய் வென்யூ மற்றும் கிரெட்டா கார்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்படும்.
இந்த புதிய பேயான் எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த எஞ்சின் 120 எச்பி பவரை வழங்கும் வகையில் இருக்கும். 7 ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், சன்ரூஃப், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS போன்ற வசதிகள் இடம்பெற வாய்ப்புள்ளது. இந்தியாவில் ரூ.9 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.
7. ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் - அக்டோபர் முதல் வாரம்
வரும் பண்டிகை காலத்தில் எதிர்பார்க்கப்படும் முக்கிய மாடலாக ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் மாடல் உள்ளது. புதுப்பிக்கப்பட்ட வெளிப்புற வடிவமைப்பு, கூடுதல் வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேபினுடன் புதிய மாடல் வரவுள்ளது. இந்த கார் ஏற்கனவே வெளியிடப்பட்டு விபரங்களும் வழங்கப்பட்டன. இந்த நிலையில், விலை அறிவிப்புடன் டெலிவிரி கொடுக்கும் பணிகளை வரும் அக்டோபர் முதல் வாரத்தில் ஸ்கோடா துவங்கும் என தெரிகிறது.
புதிய ஸ்கோடா ஸ்லாவியா காரில் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் தொடர்ந்து வழங்கப்படும். 360 டிகிரி கேமரா, மேம்பட்ட தொடுதிரை, புதிய வசதிகள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் இடம்பெறலாம். தற்போதைய மாடலைவிட சற்று கூடுதல் விலையில் ரூ.11 லட்சம் முதல் ரூ.19 லட்சம் இடையிலான விலையில் நிலைநிறுத்தப்படும்.
8. டொயோட்டா க்ளான்ஸா ஃபேஸ்லிஃப்ட் - அக்டோபர்
அண்மையில் மாருதி பலேனோ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பல்வேறு புதிய அம்சங்களுடன் வந்துவிட்ட நிலையில், அதன் ரீபேட்ஜ் வெர்ஷனாக விற்பனை செய்யப்படும் டொயோட்டா க்ளான்ஸாவும் புதிய அப்டேட்டுகளுடன் அக்டோபரில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வெளிப்புற வடிவமைப்பு மற்றும் கூடுதல் தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் வரலாம். அக்டோபர் 14ந் தேதி அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், டொயோட்டா நிறுவனம் இன்னும் அந்த தேதியை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.
மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் போன்றே, இந்த காரிலும் புதிய 3 சிலிண்டர் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படும். புதிய எல்இடி விளக்குகள், அலாய் வீல்கள், பெரிய தொடுதிரை, 360 டிகிரி கேமரா மற்றும் மேம்படுத்தப்பட்ட கேபின் வசதிகள் சேர்க்கப்படலாம். இதன் விலை ரூ.7.5 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரை இருக்க வாய்ப்புள்ளது.
9. ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் - அக்டோபர்
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் மாடலும் அக்டோபர் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாடலின் அடிப்படையை தக்கவைத்துக்கொண்டு, முன்பக்க வடிவமைப்பு, விளக்குகள், அலாய் வீல்கள் மற்றும் கேபின் வசதிகளில் மாற்றங்கள் இடம்பெறலாம். வரும் அக்டோபர் 6ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானாலும், ஹோண்டா நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
புதிய எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் தற்போதைய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தொடர்ந்து பயன்படுத்தப்படும். 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் தேர்வுகளுடன், Honda Sensing ADAS, 360 டிகிரி கேமரா, பெரிய தொடுதிரை போன்ற வசதிகள் கிடைக்கலாம். ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபரில் பரபரப்பு அதிகரிக்கும்
இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பாக இந்திய கார் சந்தையில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த புதிய மாடல்கள் களமிறங்குகின்றன. பட்ஜெட் வாடிக்கையாளர்கள் முதல் பணக்காரர்களுக்கான விலைப் பிரிவுகளிலும், ரகத்திலும் பல புதிய மாடல்கள் வருகின்றன. இது நிச்சயமாக வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்கும் அம்சங்களை இந்த புதிய கார்கள் வழங்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications




