ஆகஸ்டில் அறிமுகமாகும் புதிய கார்கள்... ஆயத்தமாகும் மஹிந்திரா, ஸ்கோடா, எம்ஜி மோட்டார் !!
பண்டிகை காலத்தின் அறிகுறியமாக கடந்த மாதமே புதிய கார் மாடல்களின் அறிமுகத்துடன் சில நிறுவனங்கள் பிள்ளையார் சுழி போட்டன. மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட், 9வது தலைமுறை டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக், நிஸான் டெக்டான் மற்றும் ஹோண்டா இசட்ஆர்வி ஆகிய மாடல்கள் கடந்த மாதத்தில் முக்கிய மாடல்களாக அமைந்தன. இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட்டிலும் புதிய கார் மாடல்கள் விற்பனைக்கு தயாராகி வருகின்றன. குறிப்பாக, மஹிந்திரா, ஸ்கோடா, எம்ஜி மோட்டார் நிறுவனங்களின் புதிய மாடல்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
வரும் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ஸ்கார்ப்பிடோ என் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு மூன்று நாட்கள் கழித்து ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தனது புதிய ஸ்லாவியா செடான் காரை களமிறக்க உள்ளது. அதேபோன்று, ஜேஎஸ்டபிள்யூ- எம்ஜி கூட்டணி நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் கார் மற்றும் பிளக் இன் ஹைப்ரிட் கார் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

(Representative Image - Current Scorpio N)
புதிய ஸ்கார்ப்பியோ என்
ஆண்டுதோறும் சுதந்திரத் தினத்தன்று மஹிந்திரா நிறுவனம் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அன்றைய தினத்தில் புதிய மாடல்களை வெளியிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில், வரும் 15ந் தேதி மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய ஸ்கார்ப்பியோ என் எஸ்யூவி மாடலை வெளியிட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
எஞ்சின் விஷயங்களில் மாற்றம் இருக்காது என்று தெரிகிறது. அதேநேரத்தில், தோற்ற வசீகரத்தை கூட்டும் விதமாக புதிய டூயல் டோன் அலாய் சக்கரங்கள் இடம்பெறும். உட்புறத்தில் புதிய சென்ட்ரல் கன்சோல் அமைப்புடன் ஏசி வென்ட்டுகள் இடப்பெயர்ச்சி செய்யப்பட உள்ளன. அத்துடன், தார் ராக்ஸ் எஸ்யூவியில் இருப்பது போல டேப்லெட்டை நினைவூட்டும் விதத்தில் 10.25 அங்குல புதிய டிரைவர் டிஸ்ப்ளே அமைப்பு இடம்பெறும்.
சிறிய மாற்றங்களுடன் ஸ்கார்ப்பியோ என் மாடல் வருவது போலவே புதிய பொலிவுடன் BE6 எலெக்ட்ரிக் காரும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று திரைகள் கொண்ட டேஷ்போர்டு அமைப்பு கொடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. புதிய வண்ணத்தில் அப்ஹோல்ட்ரியுடன் மாற்றம் காண உள்ளது.
மூன்றாவதாக விஷன் எஸ் கான்செப்ட் காரின் தயாரிப்புக்கு உகந்த நிலையை எட்டிய மாடலையும் மஹிந்திரா அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது. அடுத்த ஆண்டு பண்டிகை காலத்தில் இந்த மாடல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மஹிந்திராவின் புதிய வடிவமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு வருவதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

(Representative Image - Current Slavia)
ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட்
புதிய பொலிவுடன் ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரும் 18ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடந்த 2022ம் ஆண்டுக்கு பிறகு ஸ்லாவியா காரில் மாற்றங்கள் செய்யப்பட்டு வர இருக்கிறது. முன்புறத்தில் புதிய க்ரில் அமைப்பு, எல்இடி விளக்குகள், லேசான மாற்றங்கள் செய்யப்பட்ட பம்பர்கள், புதிய அலாய் சக்கரங்களும் இடம்பெற இருக்கின்றன. முன்புறத்திலும் பார்க்கிங் சென்சார்கள் கொடுக்கப்பட உள்ளன.
புதிய ஸ்கோடா ஸ்லாவியா காரில் புதிய அப்ஹோல்ஸ்ட்ரி, 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மசாஜ் வசதியுடன் பின்புற இருக்கைகள் இடம்பெறுகின்றன. இந்த மாடலில் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்கள் தக்க வைக்கப்படும். அதேநேரத்தில், குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலைப் போன்று இந்த காரிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட உள்ளது முக்கிய விஷயமாக இருக்கிறது.

(Representative Image - Wuling Starlight 560)
ஜேஎஸ்டபிள்யூ-எம்ஜி மோட்டாரின் புதிய மாடல்
இந்த பண்டிகை காலத்தை அலங்கரிக்கும் விதத்தில் ஜேஎஸ்டபிள்யூ-எம்ஜி கூட்டணியும் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. சீனாவில் வூலிங் ஸ்டார்லைட் எஸ்யூவி அடிப்படையிலான மாடல் இந்தியாவில் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவியின் எலெக்ட்ரிக் மற்றும் பிளக் இன் ஹைப்ரிட் மாடல்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.
சீனாவில் விற்பனை செய்யப்படும் ஸ்டார்லைட் எஸ்யூவியில் 69kWh பேட்டரியும் 201பிஎச்பி பவரையும், 310 என்எம் டார்க்கையும் வழங்கும் மின்மோட்டாரும் உள்ளன. இந்த மாடல் சோதனை நிலைகளின் அடிப்படையில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 600 கிமீ வரை பயணிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அடுத்து ஹைப்ரிட் மாடலில் 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் தொழில்நுட்பத்துடன் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 105எச்பி பவரையும், 130 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இத்துடன் 195எச்பி பவரை வழங்கும் மின் மோட்டாரும் இடம்பெறும். இந்த காரில் 20.5kWh LFP பேட்டரி உள்லது. எலெக்ட்ரிக் மோடில் மட்டும் 125 கிமீ தூரம் செல்லும் இந்த மாடல் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் என சேர்த்து மொத்தமாக 1,000 கிமீ தூரம் ரேஞ்ச் செல்லும் வாய்ப்பை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications
