சாலையில் மிதந்து செல்லும் கப்பலாக புதிய BMW கார்! இன்னும் கூடுதல் நீளத்தில் அறிமுகமாகுது!
BMW நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய தலைமுறை எக்ஸ்5 SUV காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, புதிய எக்ஸ்5 கார் ஆனது இந்தியாவில் லாங் வீல்பேஸ் வெர்சனாக களமிறக்கப்பட உள்ளது. இந்த புதிய BMW காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ஜெர்மனியை சேர்ந்த BMW நிறுவனம் ஐரோப்பாவில் அடுத்ததாக iX5 என்கிற எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய உள்ளது. இது, புதிய தலைமுறை எக்ஸ்5 காரின் எலெக்ட்ரிக் வெர்சன் ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரில் BMW iX3 மற்றும் i3 எலெக்ட்ரிக் கார்களில் உள்ளதை போன்று நியு க்ளாசே டிசைன் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த iX5 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும். ஏனெனில், எக்ஸ்5 காரின் லாங் வீல்பேஸ் வெர்சன் தான் முதலாவதாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இன்னும் சொல்லப்போனால், புதிய எக்ஸ்5 லாங் வீல்பேஸ் இன்னும் சர்வதேச சந்தையிலேயே இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை.
லாங்-வீல்பேஸ் வெர்சனாக எக்ஸ்5 காரை மாற்றுவதற்கு BMW நிறுவனம் கொஞ்சம் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு, பின்னர் இந்தியாவில் இந்த கார் அறிமுகம் செய்யப்படுவதற்கு எங்களுக்கு தெரிந்தவரையில் இன்னும் 1 வருடமாகும். அதாவது, 2027ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தான் புதிய எக்ஸ்5 லாங்-வீல்பேஸ் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் BMW நிறுவனத்தின் லாங்-வீல்பேஸ் காருக்கு பஞ்சமே இல்லை. 3-சீரிஸ், 5-சீரிஸ் மற்றும் iX1 உள்ளிட்ட BMW கார்கள் லாங்-வீல்பேஸ் ஆக விற்பனை செய்யப்படுகின்றன. இந்த BMW லாங்-வீல்பேஸ் கார்கள் முக்கியமாக சீன நாட்டு சந்தைக்காக உருவாக்கப்பட்டவை ஆகும். ஆனால், தற்போது இந்திய சந்தையிலும் இத்தகைய நீளமான BMW கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த வரிசையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள எக்ஸ்5 லாங்-வீல்பேஸ் காரும் சீனாவிற்கான மாடலை ஒத்தே இருக்கும். லாங்-வீல்பேஸ் கார்களில் அதிகப்படியான நீளத்தால், உட்புறத்தில் கூடுதல் இடவசதி கிடைக்கிறது. இந்தியாவில் சொகுசு கார்களை குறைவான நீளத்தில் வாங்க இங்குள்ள பணக்காரர்கள் விரும்புவதில்லை. இதனால் லாங்-வீல்பேஸ் கார்களுக்கு மார்க்கெட் பெரியதாகி வருகின்றன.
புதிய தலைமுறை BMW X5 காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இதன் படங்கள் சில மாதங்களுக்கு முன்னர் தான் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. முன்பக்கத்தில், ஹெட்லேம்ப்களுக்கான கருப்பு நிற ஹவுசிங்குகள் மற்றும் செங்குத்தாக பொருத்தப்பட்ட ஒளிரக்கூடிய 'கிட்னி' வடிவ க்ரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. காரின் பின்பக்கத்தில், சறுகலான மேற்கூரை மற்றும் அகலமான வ்ராப் அரவுண்ட் LED டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேபோல், புதிய எக்ஸ்5 காரின் உட்புறத்தையும் முழுவதும் புதிய லே-அவுட் ஆக எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய கால புதிய BMW கார்களில் வழங்கப்படுவதை போன்று பெரிய தொடுதிரை, பெரிய பனோராமிக் சன்ரூஃப் மற்றும் குவாட்-ஸ்போக் ஸ்டீயரிங் சக்கரம் உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றன. இவற்றுடன், இதுவரையில் உருவாக்கப்பட்ட BMW எலெக்ட்ரிக் கார்களிலேயே இது அளவில் பெரியதான பேட்டரி உடன் வர உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய தலைமுறை BMW எக்ஸ்5 ஆனது பெட்ரோல், டீசல் மற்றும் பிளக்-இன் ஹைப்ரீட் என்ஜின் ஆப்ஷன்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்றாலும், அதேநேரம் முன்பு கூறியதை போன்று iX5 எலெக்ட்ரிக் காரும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் BMW நிறுவனத்தின் லாங்-வீல்பேஸ் கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், புதிய எக்ஸ்5 வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications