கொரியாகாரன் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டான்! மாருதி, டாடா தலையில துண்ட போட்டுட்டு போக வேண்டியதுதான்!
இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) காருக்கு அறிமுகமே தேவையில்லை. இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) செக்மெண்ட்டின் 'கிங்' என ஹூண்டாய் க்ரெட்டாவை குறிப்பிடலாம். ஆனால் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் தற்போது போட்டி மிகவும் கடுமையானதாக மாறி கொண்டுள்ளது.
சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா சியரா (Tata Sierra) காருக்கு, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல் 2026 கியா செல்டோஸ் (2026 Kia Seltos) காரும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு விற்பனைக்கு களமிறக்கப்பட்டது. 2026 கியா செல்டோஸ் காருக்கும், உற்சாகமான வரவேற்பு கிடைத்துள்ளது.

எனவே ஹூண்டாய் நிறுவனமும் க்ரெட்டா காரை அப்டேட் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா காருக்கு ஃபேஸ்லிஃப்ட் (Facelift) அப்டேட்டை கொடுக்க போவதில்லை. மாறாக க்ரெட்டா காரின் புதிய தலைமுறை (New-generation) மாடலையே விற்பனைக்கு அறிமுகம் செய்து விடலாம் என ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக புதிய தலைமுறை க்ரெட்டா காரின் சோதனை ஓட்டத்தை ஹூண்டாய் நிறுவனம் அதன் தாய் நாடான கொரியாவில் தற்போது தொடங்கியுள்ளது. இதுகுறித்து ஆட்டோஇஸ்போர்ட்டி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவல், ஹூண்டாய் க்ரெட்டா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது விற்பனையில் உள்ள ஹூண்டாய் க்ரெட்டா கார் கே2 ப்ளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா கார் புதிய மூன்றாவது தலைமுறை கே3 ப்ளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதில், கே2 ப்ளாட்பார்மை விட கே3 ப்ளாட்பார்ம் மிகவும் சிறந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதுதவிர தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) உடன், புதியதாக 1.5 லிட்டர் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும், புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா காரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஹைப்ரிட் இன்ஜின் அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக இருக்கும். அதேபோல் ஏராளமான புதிய வசதிகள் (Features) மற்றும் பல்வேறு டிசைன் (Design) அப்டேட்களையும், புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா காரில் நாம் எதிர்பார்க்கலாம். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா கார், நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா காரின் வருகை மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) ஆகிய கார்ளுக்கு விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம் என நாங்கள் கருதுகிறோம். அத்துடன் டாடா சியரா, கியா செல்டோஸ் போன்ற கார்களுக்கும், புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா சவாலாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








