சும்மா ஒரு போட்டோவ விட்டதுக்கே மொத்த சோஷியல் மீடியாவும் பத்திகிச்சு! லான்ச் மட்டும் ஆச்சுனா மாருதிலாம் காலி!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் ஐ20 (Hyundai i20). பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரகத்தை சேர்ந்த இந்த காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஹூண்டாய் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரை இந்திய சாலைகளில் சோதனை செய்யும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளன. அனேகமாக அடுத்த மாதம், புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார் பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து தீபாவளி பண்டிகை சமயத்தில் இதன் விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கெல்லாம் முன்னதாக புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரின் டீசர் புகைப்படத்தை (Teaser Image) ஹூண்டாய் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரின் டீசர் புகைப்படம் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை ஆகும். சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த டீசர் புகைப்படத்தில், புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரின் முன் பக்க விளக்குகளை நம்மால் பார்க்க முடிகிறது.
ஹூண்டாய் பிரேசில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் இந்த டீசர் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனம், புதிய தலைமுறை ஐ20 காரை, இந்தியா மட்டுமல்லாது, சர்வதேச அளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

தற்போது விற்பனையில் உள்ள ஹூண்டாய் ஐ20 காரில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளன. ஆனால் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரில் நீளமான ஒரே திரையில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் அமைப்புகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரை வளைந்தது போன்ற தோற்றத்தையும் கொண்டிருக்கலாம். அதேபோல் தற்போது விற்பனையில் உள்ள ஹூண்டாய் ஐ20 காரில் 360 டிகிரி கேமரா மற்றும் அடாஸ் (ADAS) பாதுகாப்பு தொகுப்பு போன்ற வசதிகள் (Features) எல்லாம் இல்லை. ஆனால் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரில் இந்த வசதிகள் எல்லாம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவை எல்லாம் தவிர, குரல் மூலம் கட்டுப்படுத்த கூடிய ஸ்மார்ட் சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்பிளே, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற வசதிகளையும் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இன்ஜின் ஆப்ஷன்களில் (Engine Option) எந்தவொரு மாற்றமும் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது போல் தெரிகிறது. அதாவது தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள்தான், புதிய தலைமுறை மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் எதிர்காலத்தில் புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 காரில் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் இந்திய சந்தையில் வரும் 2029-30ம் நிதியாண்டிற்குள் 8 ஹைப்ரிட் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், ஹூண்டாய் ஐ20 ஹைப்ரிட் காரும் ஒன்றாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் ஐ20 காரின் புதிய தலைமுறை மாடலின் வருகை, மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மற்றும் அதன் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனான டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) ஆகிய கார்களுக்கு எல்லாம் விற்பனையில் தலைவலியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) காருக்கும் இது விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications