2027 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது புதிய கியா சொனெட்? பெரிய மாற்றங்களுடன் வருகிறது!
இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) பிரிவில் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வரும் கார்களில் கியா சொனெட்டும் ஒன்றாக உள்ளது. ஸ்டைலான வடிவமைப்பு, பிரீமியம் வசதிகள், பல்வேறு எஞ்சின் தேர்வுகள் என வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வரும் இந்த காரின் அடுத்த தலைமுறை மாடலை அறிமுகப்படுத்த கியா நிறுவனம் தயாராகி வருகிறது.
தற்போது இந்தியச் சாலைகளில் புதிய தலைமுறை சொனெட் கார் பல்வேறு கட்டமாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த புதிய எஸ்யூவி வரும் 2027ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கியா கார் பிரியர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

புதிய பிளாட்பார்ம்
தற்போதைய மாடலில் பயன்படுத்தப்படும் பிளாட்பார்மிற்கு பதிலாக புதிய தலைமுறை கியா சொனெட் கார் மேம்படுத்தப்பட்ட K1 பிளாட்பாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதே கட்டமைப்பு கியா சைரோஸ் மற்றும் புதிய ஹூண்டாய் வென்யூ கார்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் காரின் கட்டமைப்பு மற்றும் பயணிகளுக்கான இடவசதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்கும்.
குறிப்பாக, தற்போதைய சொனெட்டில் பின்புற இருக்கையில் இடவசதி சற்று குறைவாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனைச் சரிசெய்ய புதிய மாடலில் வீல்பேஸ் அதிகரிக்கப்படலாம். இதனால் பின்புறம் அமர்பவர்களுக்கு கால் வைப்பதற்கு கூடுதல் இடவசதியும், தோள்பட்டை நெருக்கடியான உணர்வை தராத அளவிற்கு இடவசதியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடிவமைப்பு மாற்றங்கள்
புதிய சொனெட்டின் வெளிப்புறத் தோற்றம் முற்றிலும் புதிதாக மாற்றப்பட்டு வருவதாகவும் சோதனை ஓட்ட படங்களின் அடிப்படையில் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி முன்பக்கத்தில் ஸ்பிளிட் ஹெட்லைட் அமைப்பு, புதிய கிரில், செங்குத்தான எல்இடி பகல்நேர விளக்குகள் இடம்பெற வாய்ப்புள்ளது. பின்புறத்திலும் புதிய எல்இடி டெயில் லைட்டுகள் வழங்கப்பட்டு இருக்கும்.
மேலும், புதிய அலாய் வீல்கள், மாற்றியமைக்கப்பட்ட பம்பர்கள், புதுப்பிக்கப்பட்ட பின்பக்க வடிவமைப்பு ஆகியவை இடம்பெறலாம். தற்போதைய சொனெட் காரை காட்டிலும் அகலமான மற்றும் கம்பீரமான தோற்றத்தை வழங்கும் வகையில் புதிய மாடலை கியா வடிவமைத்து வருவதாகத் தெரிகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ வடிவமைப்பு விவரங்கள் வெளியாகவில்லை.
இன்டீரியர்
புதிய தலைமுறை சொனெட் காரின் கேபினிலும் பல்வேறு மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, டேஷ்போர்டில் இரண்டு பெரிய திரைகள் கொண்ட டிஜிட்டல் அமைப்பு இடம்பெறும் என தெரிகிறது. இதில் 12.3 அங்குல அளவிலான இன்ஃபோடெயின்மென்ட் திரை மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
இதுதவிர, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, ஓவர் தி ஏர் அப்டேட் வசதி, பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன்பக்க இருக்கைகள், 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. பாதுகாப்பிற்காக லெவல் 2 அடாஸ் தொழில்நுட்பமும் இடம்பெற வாய்ப்புள்ளது.
எஞ்சின் தேர்வுகள்
புதிய தலைமுறை சொனெட் காரில் தற்போதைய பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகள் தொடர்ந்து வழங்கப்படலாம். அதன்படி, 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் பெரிய மாற்றம் இருக்காது எனத் தெரிகிறது.
இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 83 எச்பி பவரையும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 120 எச்பி பவரையும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 116 எச்பி பவரையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் தொடரலாம்.
ஹைபிரிட் எஞ்சின் தேர்வு
கியா நிறுவனம் சொனெட் காரில் ஸ்ட்ராங் ஹைபிரிட் எஞ்சின் தேர்வையும் உருவாக்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், வரும் 2028 அல்லது 2029ம் ஆண்டில்தான் ஹைபிரிட் மாடல் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய கியா சொனெட் கார் ரூ.7.41 லட்சம் முதல் ரூ.14.27 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய தலைமுறை மாடலில் வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் வசதிகள் அதிகரிக்கப்படுவதால் விலை சற்று அதிகமாகவே இருக்கும். இந்தியாவில் டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV 3XO மற்றும் ஸ்கோடா கைலாக் உள்ளிட்ட கார்களுக்குப் போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications


