மிகவும் குறைவான விலையில் புதிய காரை களமிறக்கும் கொரிய நிறுவனம்... டாடா, மஹிந்திராவிற்கு நெருக்கடி...
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சொனெட் (Kia Sonet). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த கார், கடந்த 2020ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது விற்பனையில் இருப்பது கியா சொனெட் காரின் முதல் தலைமுறை மாடல் ஆகும்.
விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், கியா சொனெட் காரின் 2வது தலைமுறை மாடல் இன்னும் களமிறக்கப்படவில்லை. ஆனால் கியா நிறுவனம் கூடிய விரைவில் சொனெட் காரின் 2வது தலைமுறை மாடலை, இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டாவது தலைமுறை கியா சொனெட் கார் தற்போதைய நிலையில் QY2E என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படுகிறது. கியா சொனெட் காரின் 2வது தலைமுறை மாடல் புத்தம் புதிய பிளாட்பார்ம் அடிப்படையில் கட்டமைக்கப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது கியா சைரோஸ் (Kia Syros) கார் கட்டமைக்கப்பட்டுள்ள K1 பிளாட்பார்ம் அடிப்படையில்தான், 2வது தலைமுறை கியா சொனெட் கார் கட்டமைக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக 2வது தலைமுறை கியா சொனெட் காரின் வீல் பேஸ் நீளம் அதிகமாக இருக்கும். எனவே பயணிகளுக்கு, குறிப்பாக பின் இருக்கை பயணிகளுக்கு, மிகவும் சௌகரியமான பயணம் உறுதி செய்யப்படும்.

தற்போது விற்பனையில் உள்ள கியா சொனெட் காரில் லெவல் 1 அடாஸ் (Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு வழங்கப்படுகிறது. ஆனால் 2வது தலைமுறை கியா சொனெட் காரில், வெவல் 2 அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் தற்போது விற்பனையில் உள்ள கியா சொனெட் காரில் 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. ஆனால் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள 2வது தலைமுறை மாடலில் இதை காட்டிலும் அளவில் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அதே சமயம் தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் 10.25 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபையர், பாஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் போன்ற வசதிகள் (Features), அப்படியே 2வது தலைமுறை மாடலிலும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இவற்றுடன் ஒரு சில புதிய வசதிகளையும், 2வது தலைமுறை கியா சொனெட் காரில் நாம் கூடுதலாக எதிர்பார்க்க முடியும். அத்துடன் டிசைனிலும் (Design) நிறைய மாற்றங்கள் செய்யப்படும் என நாம் உறுதியாக நம்பலாம். ஆனால் இன்ஜின் ஆப்ஷன்களில் (Engine Options) மாற்றங்கள் செய்யப்படுமா? என்பது சந்தேகம்தான்.
அதாவது தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள்தான், 2வது தலைமுறை கியா சொனெட் காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதிக மைலேஜ் வழங்க கூடிய வகையில் புதிய ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் ஒன்று, 2வது தலைமுறை கியா சொனெட் காரில் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இதை நாம் கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா சொனெட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 7.32 லட்ச ரூபாயாக உள்ளது. ஆனால் 2வது தலைமுறை மாடலின் ஆரம்ப விலை அனேகமாக 7.50 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம்.
இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இதன் மூலம் இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களில் ஒன்று என்ற பெருமையை 2வது தலைமுறை கியா சொனெட் தொடர்ந்து தக்க வைத்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 2வது தலைமுறை கியா சொனெட் கார், அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனத்தின் தயாரிப்பான இதன் வருகை இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகளான டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) ஆகிய கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.
அத்துடன் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), ஸ்கோடா கைலக் (Skoda Kylaq), ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் போன்ற மற்ற சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கும், கியா சொனெட் காரின் 2வது தலைமுறை மாடலின் வருகை, விற்பனையில் மிக கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








