பல வருடங்களுக்கு பின் மீண்டும் வந்தது ரெனால்ட் டஸ்டர்! அடிமாட்டு விலையில் களமிறங்கியதால் மாருதி, டாடா நடுக்கம்
இந்திய சந்தையில் ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) கார் கடந்த 2012ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்திய சந்தையில் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட் தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருப்பதற்கு ஒரு வகையில் ரெனால்ட் டஸ்டர் காரும் காரணம்.
ஆனால் சுமார் 10 ஆண்டுகள் கழித்து, அதாவது கடந்த 2022ம் ஆண்டில், இந்திய சந்தையில் ரெனால்ட் டஸ்டர் காரின் விற்பனை நிறுத்தப்பட்டது. போட்டி அதிகரிப்பால் விற்பனை குறைந்தது போன்றவை இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களாக பார்க்கப்பட்டன. இருப்பினும் ரெனால்ட் டஸ்டர் கார் இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு, அதன் ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டேதான் இருந்தது.

ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்புகள் பொய் ஆகவில்லை. ஆம், வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் (New-gen Renault Duster), கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி இந்தியாவின் குடியரசு தினத்தன்று பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து மார்ச் 17ம் தேதி (இன்று) புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார், அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி சற்று நேரத்திற்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார், இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த கார் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options): புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 100 பிஎஸ் பவர் மற்றும் 160 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர 163 பிஎஸ் பவர் மற்றும் 280 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனையும், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) கொடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரில், 1.4 kWh பேட்டரி தொகுப்புடன் கூடிய 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வரும் தீபாவளி பண்டிகை சமயத்தில்தான் இந்த இன்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட்களின் (Variants) டெலிவரி (Delivery) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற 2 இன்ஜின்கள் பொருத்தப்பட்ட வேரியண்ட்களின் டெலிவரி அடுத்த மாதமே (ஏப்ரல்) தொடங்கப்படவுள்ளது.
வசதிகள் (Features): 26.03 செமீ டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 25.65 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் பனரோமிக் சன்ரூஃப், பிஎம் 2.5 ஃபில்டர் உடன் ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் டிஸ்ப்ளே, ஆட்டோமேட்டிக் ட்யூயல் ஸோன் ஏர் கண்டிஷன், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளை எல்லாம், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கொண்டுள்ளது.
மேலும் முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகளும் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரில் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ரிமோட் முறையில் காரை லாக்/அன்லாக் செய்வது மற்றும் காரில் ஏறுவதற்கு முன்பாகவே கேபினில் வெப்பநிலையை 'செட்' செய்வது போன்ற வசதிகளை எல்லாம் வழங்கும் கனெக்டட் கார் தொழில்நுட்பத்தையும், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கொண்டுள்ளது.
பாதுகாப்பு வசதிகள் (Safety Features): புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த பாதுகாப்பு தொகுப்பில், ஒட்டுமொத்தமாக 17 வசதிகள் இடம்பெற்றுள்ளன.
அத்துடன் 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் கொண்டுள்ளது.
முன்பதிவுகள் (Bookings): புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரை 'புக்கிங்' செய்து கொள்ளலாம். ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளம் அல்லது டீலர்ஷிப்கள் மூலமாக நீங்கள் முன்பதிவு செய்ய முடியும்.
விலை (Price): புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 10.49 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 18.49 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கருதப்படுகிறது.
ஆனால் ஏற்கனவே முன்பதிவு செய்து ஆர் பாஸ் (R Pass) பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், வேரியண்ட்களை பொறுத்து, 20 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை குறைவான விலையில், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரை வாங்க முடியும். வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், ஆர் பாஸ் முன்பதிவு திட்டத்தை, ரெனால்ட் நிறுவனம் வரும் மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இங்கே மற்றொரு விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும். தற்போதைய நிலையில் டர்போ பெட்ரோல் இன்ஜின் வேரியண்ட்களுக்கான விலைகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட்களின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அவற்றின் விலை அனேகமாக வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக மட்டுமே அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் வருகை, மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் டாடா சியரா (Tata Sierra) போன்ற கார்களுக்கு எல்லாம், விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.
அத்துடன் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஹோண்டா எலவேட் (Honda Elevate) மற்றும் எம்ஜி அஸ்டர் (MG Astor) போன்ற கார்களுக்கும் கூட, புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் வருகை, விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்ட்ரை தொடர்ந்து, அடுத்ததாக நிஸான் டெக்டான் (Nissan Tekton) கார் விற்பனைக்கு வரவுள்ளது. இது புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கார் ஆகும். பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் மற்றும் ஜப்பானை சேர்ந்த நிஸான் ஆகிய 2 நிறுவனங்களின் கூட்டணியின் மூலமாக இது சாத்தியமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








