கொரியன் கம்பெனியில் இதைவிட கம்மியான விலையில் கார் இல்ல... வெளியே பார்த்து எடை போடாதீங்க!
கியா நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட கார்களுள் ஒன்று, புதிய தலைமுறை சொனெட் ஆகும். அதாவது, தற்சமயம் விற்பனையில் இருக்கும் சொனெட் காரின் அப்கிரேட் செய்யப்பட்ட புதிய மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய கியா சொனெட் கார் அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஸ்பை படங்கள் 'ஆட்டோ ஜார்னல்_இந்தியா' என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன. புதிய ஜென்ரேஷன் சொனெட் கார் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்படுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. ஆனால், இந்த முறை புதிய சொனெட்டின் தோற்றம் நமக்கு நெருக்கமாக கிடைக்க பெற்றுள்ளது.

குறிப்பாக, புதிய சொனெட்டின் பின்பக்க தோற்றம் முதல்முறையாக நமக்கு தெரிய வந்துள்ளது. அதன் மூலம் பார்க்கும்போது, புதிய டிசைனிலான டெயில்லைட்கள் புதிய சொனெட்டின் பின்பக்கத்தில் வழங்கப்பட உள்ளன. தற்போதைய சொனெட் காரில் உள்ளதை போன்று கிடைமட்ட டிசைனிலான டெயில்லைட்களாக இல்லாமல், செங்குத்தான டிசைனில் டெயில்லைட்கள் வழங்கப்பட உள்ளன.
பின்பக்க பூட் ஸ்பேஸ் கதவு, தற்போது உள்ளதை விட வெளியே நோக்கி தள்ளப்பட்டதாக வழங்கப்படலாம். இதனால், புதிய சொனெட் கார் பார்ப்பதற்கு கொஞ்சம் கிராஸ்ஓவர் வகையை சேர்ந்த காராகவும் காட்சியளிக்கலாம். இதேபோன்று, காரின் முன்பகுதியும் பெரிய அளவில் திருத்தி அமைக்கப்படும் என்பது உறுதி. ஹெட்லைட்களில் இருந்து பம்பர் வரையில் அனைத்தும் மாற்றியமைக்கப்பட உள்ளன.

இதன்படி, முன்பக்க க்ரில் மற்றும் பம்பரில் வழங்கப்படும் காற்றுத்துளைகள் உள்ளிட்டவை புதிய தோற்றத்தில் வழங்கப்படலாம். குறிப்பாக, முன்பக்க க்ரில் ஆனது தற்போதைய சொனெட் காரில் உள்ளதை காட்டிலும் இன்னும் தாழ்வாக வழங்கப்படும். ஹெட்லைட்கள் ஒவ்வொன்றும் இரண்டாக பிரிக்கப்பட்டதாக புதிய சொனெட்டில் கியா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சொனெட் காரின் பக்கவாட்டில் ஷோல்டர் லைன் ஆனது இப்போது உள்ளதை காட்டிலும் சற்று மேலாக வழங்கப்பட உள்ளது. இதனை தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களின் மூலமாக உறுதிப்படுத்த முடிகிறது. மேலும், 16 இன்ச்சில் புதிய டிசைனில் அலாய் சக்கரங்களை புதிய சொனெட் பெறவுள்ளதையும் தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படங்கள் வெளிக்காட்டுகின்றன.
இதேபோன்றதான டிசைனில் தான் புதிய செல்டோஸில் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அவை 17 இன்ச் அளவுக் கொண்டவை ஆகும். புதிய தலைமுறை சொனெட் காரின் உட்புறத்தையும் முற்றிலும் புதிய லுக்கில் எதிர்பார்க்கிறோம். இப்போது உள்ளதை விட நேர்த்தியான டிசைனில் எதிர்பார்க்கப்படும் புதிய டாஷ்போர்டில் முக்கிய அம்சமாக டிரினிட்டி பனோராமிக் டிஸ்பிளே வழங்கப்பட உள்ளது.
இதனுடன், புதிய ஸ்டீயரிங் சக்கரம், தற்போது உள்ளதை காட்டிலும் சிறந்த பொசிஷனில் சென்டர் கன்சோல் பகுதி மற்றும் மேலும் ஸ்டைலிஷான கதவு பேனல்கள் உள்ளிட்டவையும் எதிர்பார்க்கப்படுகின்றன. புதிய சொனெட்டில் வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி, செயற்கைகோள் மூலமாக பயணத்திற்கான வரைப்படம் உள்ளிட்ட தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய தலைமுறை கியா சொனெட் ஆனது தோற்றத்திலும், தொழிற்நுட்ப அம்சங்களிலும் மெருக்கேற்றப்பட்டதாக உருவாக்கப்படுகிறது. இருப்பினும், என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. 2029ஆம் ஆண்டில் தான் சொனெட்டில் ஹைப்ரீட் என்ஜின் ஆப்ஷனை வழங்க கியா திட்டமிட்டுள்ளது. புதிய கியா சொனெட் தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டாலும், இந்த காரின் அறிமுகம் 2027ஆம் ஆண்டில்தான் இருக்கும் என கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications