புதிய மஹிந்திரா தார் OG எஸ்யூவியில் வேரியண்ட் வாரியாக வசதிகள், விலை விபரம்!!
மஹிந்திரா தார் OG எஸ்யூவியின் அறிமுகம் ஏற்கனவே பலரது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இப்போது வாங்குபவர்கள் மத்தியில் அடுத்த கேள்வி எந்த வேரியண்ட்டை தேர்வு செய்வது என்பதுதான். புதிய தார் எஸ்யூவி AXT, LXT, ZXT என மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில், விலை, எஞ்சின் தேர்வுகளுக்கு தக்கவாறு பல்வேறு விதங்களில் தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது. எனவே, புக்கிங் செய்வோருக்கு வசதியாக எந்தெந்த வேரிண்ட்டுகளில் என்னென்ன வசதிகள் உள்ளன மற்றும் வேரியண்ட் வாரியான விலை விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இதில் ஆரம்ப நிலை AXT வேரியண்ட்டானது ஒ 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் பின்சக்கர டிரைவ் அமைப்புடன் கிடைக்கிறது. இதற்கு ரூ.10.32 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. தார் குடும்பத்தில் இணைய விரும்புபவர்களை மனதில் வைத்து இந்த ஆரம்ப விலை வேரியண்ட் தேர்வு வழங்கப்படுகிறது.

விலை குறைவாக இருந்தாலும் வசதிகளைப் பொறுத்தவரை AXT வேரியண்ட்டில் பல அத்தியாவசிய அம்சங்களுக்கு குறைவில்லை. எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், புஷ் பட்டன் ஸ்டார்ட், டியூவல் ஏர்பேக்குகள், அதிக நிலைத்தன்மையுடன் செல்ல உதவும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், கார் கவிழ்வதை எச்சரிக்கும் ரோல்ஓவர் மிட்டிகேஷன் வசதிகள் உள்ளன.
ஏதாவது ஒரு சக்கரம் சேறு, மணல் அல்லது பள்ளத்தில் சிக்கி சுழன்று கொண்டிருக்கும்போது, அந்த சக்கரத்தில் பிரேக் விசை அதன் சுழற்சியைக் கட்டுப்படுத்தும். இதனால் எஞ்சின் சக்தியானது பிடிப்பு உள்ள மற்ற சக்கரத்திற்கு செல்ல உதவும் தொழில்நுட்பமான பிரேக் லாக்கிங் டிஃபரென்ஷியல், எளிதாக ஏறி இறங்குவதற்கான சைடு ஃபுட்ஸ்டெப், உயரத்தை மாற்றக்கூடிய டிரைவர் இருக்கை மற்றும் பின்புற ஏசி வென்ட்டுகள் வழங்கப்படுகின்றன.
| வேரியண்ட் | முக்கிய வசதிகள் |
|---|---|
| AXT | Electric Power Steering, Push Button Start, Dual Airbags, ESP + Rollover Mitigation, Brake Locking Differential, R18 Steel Wheels, LED Tail Lamps, Height Adjustable Driver Seat, Rear AC Vents, Rear Demister |
| LXT | R18 Alloy Wheels, 26.03cm HD Touchscreen, Colour MID, Cruise Control, Android Auto & Apple CarPlay, Electrically Adjustable ORVMs, Rear Wiper & Washer, Electronic Locking Differential*, Terrain Modes*, Terrain Assist*, Adventure Statistics, Washable Floor with Drain Plugs* |
| ZXT | LXT வசதிகளுடன் R19 Alloy Wheels, LED Headlamps + C-shaped DRLs, LED Fog Lamps, Cornering Function, Wireless Charger, TPMS, Rear View Camera, Front Parking Sensors, 6 Airbags, Frequency Dependent Damping (FDD), Leatherette Seats, Leatherette-wrapped Steering Wheel |
குறிப்பு: *குறிப்பிட்ட வசதிகள் சம்பந்தப்பட்ட 4WD/RWD powertrain-களில் மட்டுமே கிடைக்கும்.
அதே நேரத்தில் LXT வேரியண்ட்டிற்கு செல்லும்போது வசதிகளின் பட்டியல் கணிசமாக அதிகரிக்கிறது. இசில், 18 அங்குல அலாய் வீல்கள், 26.03 செமீ HD தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வண்ணத் திரையுடன் MID, க்ரூஸ் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள் பின்புற வைப்பர் மற்றும் வாஷர், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்டவை இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட வேரியண்ட்டுகளில் எஞ்சின் சக்தியை அதிக தரைப்பிடிப்பு உள்ள சக்கரங்களுக்கு செலுத்தும் எலெக்ட்ரானிக் லாக்கிங் டிஃபரன்ஷியல் மற்றும் நிலப்பரப்புக்கு தக்கவாறு எஞ்சின் மற்றும் வாகனத்தின் இயக்கத்தை மாற்றிக்கொள்ளும் டெர்ரெயின் மோடுகள் ஆகியவையும் கிடைக்கின்றன.

நடுத்தர வசதிகள் கொண்ட LXT வேரியண்ட்டுகளில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் பல்வேறு டிரைவ் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் கிடைக்கிறது. நகரப் பயன்பாடு முதல் ஆஃப்ரோடு பயணம் வரை வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ப தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது. RWD அமைப்பில் குறிப்பிட்ட எஞ்சின் தேர்வுகளுக்கு Terrain Assist வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
அதிக வசதிகள் மற்றும் விலை உயர்ந்த ZXT வேரியண்ட்டில் கூடுதல் பிரீமியம் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில், 19 அங்குல பெரிய அலாய் வீல்கள், புதிய எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் C-வடிவ பகல்நேர விளக்குகள், LED பனி விளக்குகள், வயர்லெஸ் சார்ஜர், டயரில் காற்றழுத்த கண்காணிப்பு வசதி, பின்புற கேமரா மற்றும் முன்புற பார்க்கிங் சென்சார்கள் இதில் இடம்பெறுகின்றன.
பாதுகாப்பு வசதிகளிலும் ZXT வேரியண்ட் சிறப்பாக இருக்கிறது. முன்புறம் மற்றும் பின்புற பயணிகளுக்கான HPTS ஏர்பேக்குகள் உட்பட மொத்தம் ஆறு ஏர்பேக்குகள், நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் Frequency Dependent Damping என்ற சஸ்பென்ஷன் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. செயற்கை லெதர் கவருடன் இருக்கைகள் மற்றும் ஸ்டீயரிங் வீல் கவர் இந்த வேரியண்ட்டில் இடம்பெறுகின்றன.
| வேரியண்ட் | இன்ஜின் / டிரைவ் | கியர்பாக்ஸ் | எக்ஸ்ஷோரூம் விலை |
|---|---|---|---|
| AXT | 1.5L டீசல் / RWD | MT | ₹10.32 லட்சம் |
| LXT | 1.5L டீசல் / RWD | MT | ₹12.99 லட்சம் |
| ZXT | 1.5L டீசல் / RWD | MT | ₹13.99 லட்சம் |
| LXT | 2.0L பெட்ரோல் / RWD | AT | ₹14.77 லட்சம் |
| LXT | 2.0L பெட்ரோல் / 4WD | MT | ₹15.60 லட்சம் |
| ZXT | 2.0L பெட்ரோல் / RWD | AT | ₹16.09 லட்சம் |
| ZXT | 2.0L பெட்ரோல் / 4WD | MT | ₹16.60 லட்சம் |
| LXT | 2.0L பெட்ரோல் / 4WD | AT | ₹17.23 லட்சம் |
| LXT | 2.2L டீசல் / RWD | AT | ₹16.49 லட்சம் |
| ZXT | 2.2L டீசல் / RWD | AT | ₹17.49 லட்சம் |
| LXT | 2.2L டீசல் / 4WD | MT | ₹16.43 லட்சம் |
| ZXT | 2.2L டீசல் / 4WD | MT | ₹17.49 லட்சம் |
| LXT | 2.2L டீசல் / 4WD | AT | ₹18.00 லட்சம் |
| ZXT | 2.2L டீசல் / 4WD | AT | ₹18.99 லட்சம் |
குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள விலைகள் எக்ஸ்-ஷோரூம் விலைகள். அறிமுக விலை 30 நவம்பர் 2026 வரை டெலிவரி பெறும் வாகனங்களுக்கு பொருந்தும்.
இதனால் தார் OG எஸ்யூவியின் விலை மட்டுமல்லாமல், வேரியண்ட் மாறும்போது கிடைக்கும் வசதிகளிலும் கணிசமான வேறுபாடு உள்ளது. ஆரம்ப விலையில் தார் அனுபவத்தை பெற விரும்புபவர்களுக்கு AXT போதுமானதாக இருக்கும். கூடுதல் தொழில்நுட்பம் மற்றும் 4WD வசதிகளை எதிர்பார்ப்பவர்களுக்கு LXT, அதிகபட்ச வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை விரும்புபவர்களுக்கு ZXT என மூன்று நிலைகளில் தேர்வு செய்யும் வகையில் மஹிந்திரா இந்த புதிய வேரியண்ட் வரிசையை அறிமுகப்படுத்தி உள்ளது.
புதிய மஹிந்திரா தார் OG எஸ்யூவியின் விலை ரூ.10.32 லட்சத்தில் தொடங்கி ரூ.18.99 லட்சம் வரை செல்கிறது. எனவே, வேரியண்ட்டை தேர்வு செய்யும்போது விலையை மட்டும் பார்க்காமல், உங்களது தேவையை பொறுத்து வேரியண்ட்டை தேர்வு அவசியம். 4 வீல் டிரைவ் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்பட எந்த அளவிலான தொழில்நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் அவசியம் என்பதையும் கருத்தில் கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications


