வரும் ஏப்ரல் 20ல் அறிமுகம் செய்யப்படும் புதிய பென்ஸ் கார்! திரையில் படத்தை போட்டுவிட்டு பார்த்தப்படி செல்லலாம்
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் சர்வதேச சந்தையில் புதியதாக சி-கிளாஸ் இவி (C-Class EV) என்கிற புதிய எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்ய உள்ளது. வருகிற ஏப்ரல் 20 இந்த புதிய எலெக்ட்ரிக் பென்ஸ் கார் வெளியீடு செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்த புதிய காரின் உட்புறத்தை டீசர் ஒன்றின் மூலமாக மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் வெளிக்காட்டி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனையில் கடந்த சில வருடங்களாகவே முனைப்புக் காட்டி வருகிறது. இந்த வகையில் கடந்த சில வருடங்களில் பல புதிய எலெக்ட்ரிக் கார்கள் மெர்சிடிஸ் பிராண்டில் இருந்து களமிறக்கப்பட்டு உள்ளதை பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் அடுத்ததாக மார்க்கெட்டிற்கு சி-கிளாஸ் இவி கொண்டுவரப்படுகிறது.

இந்தியாவில் இந்த காரின் அறிமுகம் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகே இருக்கும் என கூறப்பட்டாலும், சர்வதேச சந்தையில் இந்த எலெக்ட்ரிக் கார் வருகிற ஏப்ரல் 20ஆம் தேதி களமிறக்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாக தற்போது இந்த காரின் கேபினின் டிசைன் புதிய டீசர்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த டீசர்களின்படி பார்க்கும்போது, லேட்டஸ்ட் பென்ஸ் கார்களை போன்று இந்த புதிய எலெக்ட்ரிக் காரிலும் பெரிய அளவிலான எம்பக்ஸ் ஹைப்பர்ஸ்க்ரீன் (MBUX Hyperscreen) ஆனது டாஷ்போர்டில் வழங்கப்பட்டுள்ளது. இதனால், மொத்த டாஷ்போர்டும் பெரிய அளவில் ஒரே டிஜிட்டல் டிஸ்பிளே ஆக உள்ளது. இந்த டாஷ்போர்டு டிஸ்பிளேவை பார்க்கும்போது, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி இவி (GLC EV) காரில் வழங்கப்படும் 39.1-இன்ச் டிஸ்பிளே நினைவிற்கு வருகிறது.

கிட்டத்தட்ட அதே அளவிலான மற்றும் டிசைனிலான டிஸ்பிளே ஆக இது உள்ளது. இந்த டிஸ்பிளே ஆனது ஏறக்குறைய 1 கோடி பிக்ஸல்ஸ் உடன் உயர்-தெளிவுத்திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், ஸ்டீயரிங் சக்கரம் மற்றும் செண்டர் கன்சோல் பகுதியில் அழுத்தக்கூடிய சில பொத்தான்களை பார்க்க முடிகிறது.
இந்த ஹைப்பர்ஸ்க்ரீன் ஆனது புதிய சி-கிளாஸ் இவி எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்களில்தான் வழங்கப்படும் என்றும், விலை குறைவான வேரியண்ட்களில் ட்ரிபிள்-ஸ்க்ரீன் செட்-அப் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சி-கிளாஸ் இவி காரின் கேபினுள் பல வண்ணங்களில் விளக்குகள் வழங்கப்பட உள்ளன. டாஷ்போர்டில் அதிகளவிலான திரைகள் உடன் வந்தாலும், மெர்சிடிஸ் சி-கிளாஸ் காருக்கு உண்டான இடவசதியையும், சவுகரியத்தையும் அதன் புதிய எலெக்ட்ரிக் வெர்சனிலும் எதிர்பார்க்கிறோம்.
முன் இருக்கைகள் இரண்டும் 4 விதங்களில் லம்பர் (Lumbar) அட்ஜெஸ்மெண்ட், வெண்டிலேஷன், மசாஜ் செயல்பாடுகள் மற்றும் 4டி ஆடியோ வசதி உடன் உள்ளன. காரினுள் இருக்கைகள், விளக்குகள் மற்றும் க்ளைமேட் செயல்பாடுகள் என மூன்றும் 'எனர்ஜிசிங் கம்ஃபர்ட்' (Energizing Comfort) என்கிற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
புதிய சி-கிளாஸ் இவி காரின் கேபின் முழுவதையும் விலங்கு-தோல் அல்லாத அப்ஹோல்ஸ்டரியில் மெர்சிடிஸ் நிறுவனம் வழங்கலாம். அதேநேரம், கூடுதல் விலை கொடுத்து வாங்குபவர்களுக்காக நப்பா லெதரில் கேபின் அலங்கரிக்கப்பட்டு வழங்கப்படலாம். இவற்றுடன், பனோராமிக் கண்ணாடி மேற்கூரை மற்றும் வெளிப்புற இரைச்சல் உள்ளே கேட்காத வண்ணம் சவுண்ட் இன்சுலேஷன் (Insulation) வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் இவி எலெக்ட்ரிக் கார் ஏப்ரல் 20ஆம் தேதி தென்கொரியாவில் இருந்து உலகளவில் வெளியீடு செய்யப்பட உள்ளது. சர்வதேச சந்தையில் பி.எம்.டபிள்யூ ஐ3 (BMW i3) போன்ற எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக விளங்கவுள்ள இந்த புதிய எலெக்ட்ரிக் பென்ஸ் கார் இந்தியாவில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தின் போது அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கிறோம். அதற்கு முன்னதாக தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த காரின் கேபின் டீசர்கள் புதிய சி-கிளாஸ் இவி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.


Click it and Unblock the Notifications








