பென்ஸ் கார் இதைவிட குறைவான விலையில் வருவதற்கு வாய்ப்பில்ல... புக்கிங்கை போடும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய 'சிஎல்ஏ எலெக்ட்ரிக்' (CLA Electric) காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. முன்பு விற்பனையில் இருந்த சிஎல்ஏ காரின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக, எலெக்ட்ரிக் காராக இது கொண்டுவரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை நிறுத்தப்பட்ட ஏ-கிளாஸ் லிமௌசைன் (A-Class Limousine) மற்றும் இ.க்யூ.ஏ (EQA) மற்றும் இ.க்யூ.பி (EQB) கார்களின் இடத்தை நிரப்பும் பொருட்டும் இது விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மொத்தம் மூன்று விதமான வேரியண்ட்களில் ரூ.55 லட்சத்தில் இருந்து ரூ.64 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் (Ex-showroom Prices) புதிய சிஎல்ஏ எலெக்ட்ரிக் விற்பனைக்கு கிடைக்கும். இந்த மூன்று வேரியண்ட்கள் ஒவ்வொன்றிலும் என்னென்ன மாதிரியான அம்சங்களை பெறலாம் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

சிஎல்ஏ 200 ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் (Standard Range): புதிய சிஎல்ஏ எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலையான ரூ.55 லட்சத்தில் கிடைக்கும் இந்த எண்ட்ரி-லெவல் வேரியண்ட் ஆனது 58kWh பேட்டரி உடன் கிடைக்கும். குறைந்த விலையிலான வேரியண்ட் என்பதால், மற்ற வேரியண்ட்களில் பெரிய அளவிலான பேட்டரி வழங்கப்படும் நிலையில், இதில் சற்று சிறியதான 58kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 542கிமீ வரையிலான தொலைவிற்கு காரை இயக்கிச் செல்லலாம். இந்த வேரியண்ட்டில் கிடைக்கும் அதிகப்பட்ச இயக்க ஆற்றல் 224 எச்பி மற்றும் 335 என்.எம் டார்க் திறன் ஆகும். சிஎல்ஏ எலெக்ட்ரிக் காரின் இந்த வேரியண்ட்டில் 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 7.5 வினாடிகளில் எட்டிவிடலாம்.

சிஎல்ஏ 250+ லாங் ரேஞ்ச் (Long Range): பெயருக்கேற்ப இந்த வேரியண்ட்டில் அதிக ரேஞ்சை வழங்குவதற்காக அளவில் பெரியதான 85.5kWh பேட்டரி பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் சுமார் 792கிமீ தொலைவிற்கு சார்ஜ் செய்யாமல் இயங்கலாம் என்கிறது மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம்.
ரூ.59 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 272 எச்பி மற்றும் 335 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இதன் மூலமாக, 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.7 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த வேரியண்ட் விரைவான சார்ஜிங்கிற்காக 320 கிலோவாட்ஸ் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஏற்கக்கூடியதாக உள்ளது.
சிஎல்ஏ 250+ லான்ச் எடிஷன் (Launch Edition): மேலே கூறப்பட்ட சிஎல்ஏ 250+ லாங் ரேஞ்ச் வேரியண்ட்டின் அதே பேட்டரி மற்றும் ரேஞ்ச் தான் இந்த லான்ச் எடிஷனிலும் கிடைக்கும். இதனால் ரேஞ்ச், செயல்படுதிறனில் இரண்டிற்கும் இடையே வித்தியாசம் இல்லை. ஆனால், சிஎல்ஏ 250+ லான்ச் எடிஷனின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.64 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் விலைக்கேற்ப வெளிப்புறத்தில் முற்றிலும் கருப்பு நிறத்திலான பெயிண்ட் மற்றும் தனித்துவமான லெதர் அப்ஹோல்ஸ்டரி உள்ளிட்டவை இந்த ஸ்பெஷல் எடிஷன் வேரியண்ட்டில் கிடைக்கும். மேலும், அப்கிரேட் செய்யப்பட்ட 19-இன்ச் அலாய் சக்கரங்கள், டாஷ்போர்டின் முழு அகலத்திற்கும் மெர்சிடிஸ் சூப்பர்ஸ்க்ரீன் மற்றும் ஒளிரக்கூடிய டோர் சில்கள் உள்ளிட்டவற்றையும் இந்த வேரியண்ட்டில் மட்டும் பிரத்யேகமாக பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறைந்த விலையில் எப்படியாவது புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்ஏ எலெக்ட்ரிக் காரை வாங்கிவிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு சிஎல்ஏ 200 ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் வேரியண்ட்டே போதுமானதாக இருக்கும். விலை குறைவாக இருப்பினும், இந்த காரின் ரேஞ்சிலும், செயல்படுதிறனிலும் பெரிய அளவிற்கு குறைவில்லை. அதேநேரம், அதிக ரேஞ்சை எதிர்பார்ப்பவர்கள் சிஎல்ஏ 250+ லாங் ரேஞ்சையும், பிரத்யேகமான தோற்றத்தில் இந்த காரை எதிர்பார்ப்பவர்கள் லான்ச் எடிஷனையும் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications