தேசிய நெடுஞ்சாலை டோல் கட்டணத்தில் புதிய கணக்கீடு... எந்த சாலைகளில் கட்டணம் 50% வரை குறையும்?
தேசிய நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணத்தை கணக்கிடும் முறையை மத்திய அரசு மாற்றியுள்ளது. இதன் மூலம் சில சாலைப் பகுதிகளில் டோல் கட்டணம் 50 சதவீதம் வரை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இது அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் பொருந்தும் விதி அல்ல என்பது முக்கியமான விஷயம். சரி, தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த சாலைப் பகுதிகளில் இந்த கட்டணம் பாதியாக குறையும் என்பதை தொடர்ந்து விரிவாகப் பார்க்கலாம்.
தேசிய நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் வசூலிப்பு முறை குறித்து வாகன உரிமையாளர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், டோல் கட்டணம் கணக்கிடும் முறையில் மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. அதன்படி, பாலங்கள், சுரங்கப்பாதைகள், பறக்கும் பாலங்கள் (Flyover), உயர்த்தப்பட்ட சாலைப் பகுதிகள் (Elevated Stretches) அதிகம் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணத்தை கணக்கிடும் முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் சில சாலைப் பகுதிகளில் டோல் கட்டணம் 50 சதவீதம் வரை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இது அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் பொருந்தும் விதி அல்ல என்பது முக்கியமான விஷயம்.

பழைய கணக்கீடு முறை
இதுவரை, பாலம், சுரங்கப்பாதை அல்லது உயர்த்தப்பட்ட சாலை போன்ற கட்டமைப்புகள் உள்ள பகுதிகளுக்கு டோல் கட்டணம் கணக்கிடும்போது, அந்த கட்டமைப்பின் நீளத்தை 10 மடங்காக எடுத்துக்கொண்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் இத்தகைய சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அதிக டோல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது.
புதிய கணக்கீடு
புதிய கணக்கீட்டின்படி, டோல் கட்டணம் இனி இரண்டு முறைகளில் கணக்கிடப்படும். ஒன்று, கட்டமைப்பு பகுதியின் நீளத்தை 10 மடங்காகவும், மீதமுள்ள சாதாரண சாலையின் நீளத்தையும் சேர்த்து கணக்கிடுவது. மற்றொன்று, முழு சாலை நீளத்தின் 5 மடங்கு அடிப்படையில் கணக்கிடுவது. இந்த இரண்டில் எது குறைவோ அதையே டோல் கட்டணத்திற்கான அடிப்படையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக, ஒரு தேசிய நெடுஞ்சாலை முழுவதும் 40 கிலோமீட்டர் நீளமுள்ள உயர்த்தப்பட்ட சாலையாக இருந்தால், பழைய முறையில் அது 400 கிலோமீட்டராக (40 × 10) கணக்கிடப்பட்டு டோல் வசூலிக்கப்பட்டது. புதிய முறையில் அதே சாலைக்கு 200 கிலோமீட்டர் (40 × 5) மட்டுமே கணக்கிடப்படும். இதனால் அந்த வகை சாலைகளில் டோல் கட்டணம் கணிசமாக குறையும்.
கவனிக்க வேண்டிய விஷயம்
அதேநேரத்தில், சாதாரண தேசிய நெடுஞ்சாலைகள் அல்லது கட்டமைப்பு பகுதிகள் மிகக் குறைவாக உள்ள சாலைகளில் இந்த மாற்றத்தின் தாக்கம் மிகவும் குறைவாக இருக்கும். எனவே, இனி அனைத்து டோல் பிளாசாக்களிலும் 50% கட்டணம் குறையும் என்று எடுத்துக் கொள்ள முடியாது. இந்த சலுகை குறிப்பிட்ட சாலைப் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
சிறிய பாலங்களுக்கு விலக்கு
இந்த மாற்றம் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்தின் ஒரு பகுதியாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 60 மீட்டர் அல்லது அதற்கு குறைவான சிறிய பாலங்கள் அல்லது கட்டமைப்புகள் இந்த தனி கணக்கீட்டில் சேர்க்கப்படாது என்றும் புதிய விதிகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
யாருக்கு அதிக பலன்?
நீண்ட பாலங்கள், சுரங்கப்பாதைகள் அல்லது முழுவதும் உயர்த்தப்பட்ட சாலைகள் வழியாக அடிக்கடி பயணம் செய்பவர்கள் இந்த மாற்றத்தால் அதிக பலன் பெறலாம். குறிப்பாக எக்ஸ்பிரஸ்வே மற்றும் மலைப்பகுதி சாலைகளில் பயணம் செய்பவர்களுக்கு டோல் செலவு குறைய வாய்ப்பு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
இந்த புதிய விதிமுறை நிச்சயமாக சில தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு அதிக சேமிப்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. உண்மையில் மத்திய அரசு மாற்றியிருப்பது டோல் வசூல் செய்யும் கணக்கீட்டு முறை மட்டுமே. இதனால், எந்த சாலையில் பயணம் செய்கிறீர்கள் என்பதையே பொறுத்து பலன் மாறும். பாலங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் உயர்த்தப்பட்ட சாலைகள் அதிகம் உள்ள தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் பயணிப்பவர்களுக்குத்தான் இந்த மாற்றத்தின் பயன் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications