9- 10 லட்ச ரூபாயில் வந்துச்சுனா ஷோரூமில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது! ரெனால்ட் உருவாக்கும் கார்!
ரெனால்ட் இந்தியா (Renault India), நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு தனது புதிய டஸ்டர் (Duster) எஸ்யூவி காரை சமீபத்தில் வெளியீடு செய்தது. இந்த நிலையில், இந்த எஸ்யூவி காரின் விலைகள் வருகிற மார்ச் 17 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு புதிய டஸ்டர் அறிமுகம் செய்யப்படும் என ரெனால்ட் நிறுவனம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. புதிய டஸ்டருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலோ அல்லது அருகிலுள்ள டீலர்ஷிப் (Dealership) மூலமாகவோ தங்கள் முன்பதிவை மேற்கொள்ளலாம். முன்பதிவுக்கான ஆரம்பத் தொகையாக ரூ.21,000 முதல் ரூ.25,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய டஸ்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9- 10 லட்சம் அளவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ரெனால்ட் டஸ்டர், இந்திய சந்தையில் வலுவான போட்டியை உருவாக்கும் நோக்கில் களமிறக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, மாருதி சுஸுகி விக்டோரிஸ், டாடா சியரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் ஹோண்டா எலிவேட் போன்ற பல பிரபலமான மிட்-சைஸ் எஸ்யூவி கார் மாடல்களுக்கு இது நேரடி போட்டியாக அமைகிறது.
புதிய ரெனால்ட் டஸ்டர் மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்களுடன் அறிமுகமாகிறது. முதல் என்ஜின், 1.0 லிட்டர், 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் ஆகும். அதிகப்பட்சமாக 100 பிஎஸ் ஆற்றலையும், 160 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கிடைக்கும்.

இதில் இல்லாமல், 1.3 லிட்டர், 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உடனும் புதிய டஸ்டர் காரை வாங்கலாம். இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 163 பிஎஸ் ஆற்றலையும், 280 என்.எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இதனை 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிசிடி (டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன்) அல்லது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் பெறலாம்.
இந்த இரண்டு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் மட்டுமே தற்போதைக்கு இந்த காரில் கிடைக்கின்றன. புதிய 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் (Strong Hybrid) பெட்ரோல் என்ஜின் ஒரு சிறப்பு அம்சமாக 2026 தீபாவளி சமயத்தில் புதிய டஸ்டரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெரிய என்ஜின் 109 எச்பி பெட்ரோல் என்ஜின் உடன், 49 எச்பி எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 20 எச்பி ஹைப்ரிட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் (HSG) உடன் செயல்படக்கூடியதாக இருக்கும்.
இது 1.4 kWh (280 வோல்ட்) பேட்டரி தொகுப்புடன் வரும். இந்த ஹைப்ரிட் அமைப்பு ஒருங்கிணைந்து, அதிகப்பட்சமாக 160 எச்பி ஆற்றலையும், 172 என்.எம் டார்க் திறனையும் வழங்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்ட்ராங் ஹைப்ரிட் பவர்டிரெய்ன், மேம்பட்ட எரிபொருள் திறனை வழங்குவதோடு, நகரப் பயன்பாட்டில் 80 சதவீதம் வரை மின்சாரத்தில் இயங்கும் திறனை வழங்குகிறது.
புதிய டஸ்டரின் வடிவமைப்பைப் பொறுத்தவரை, ரெனால்ட் உலகளாவிய மூன்றாம் தலைமுறை டஸ்டர் மாடலின் ஒட்டுமொத்த தோற்றத்தை தக்க வைத்துக்கொண்டு, இந்தியாவிற்கான சில குறிப்பிட்ட மாற்றங்களை செய்துள்ளது. புருவம் போன்ற வடிவத்தில் எல்இடி பகல்நேர விளக்குகளுடன் (DRL) மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஹெட்லேம்ப்கள், டர்ன் இண்டிகேட்டர்களாகவும் செயல்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்திய காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் சந்தையில் வரவேற்பைப் பெற்ற டஸ்டர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் புதிய அவதாரத்தில் களம் இறங்குகிறது. வெளிநாட்டு பதிப்பை விட இந்தியாவிற்கான இந்த புதிய மாடல் முற்றிலும் மறுவேலை செய்யப்பட்டுள்ளது. டர்போ பெட்ரோல் மற்றும் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் முதல்முறையாக வழங்கப்படுவதால் கவனத்தை ஈர்த்துள்ள புதிய டஸ்டரின் வெற்றிக்கு அதன் சரியான விலை நிர்ணயம் முக்கியமானதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









