அக்.1 முதல் எலெக்ட்ரிக் கார்களில் AVAS சிஸ்டம் கட்டாயம்... விபத்துக்களை தவிர்க்க புதிய விதி!
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பாதுகாப்பு விதிகளில் முக்கிய மாற்றம் வரவுள்ளது. நாளை முதல் (அக்டோபர் 1, 2026) புதிதாக அறிமுகம் செய்யப்படும் மின்சார வாகனங்களில் செயற்கையாக சப்தம் எழுப்பும் வகையிலான Acoustic Vehicle Alerting System (AVAS) என்ற அமைப்பு கட்டாயமாகிறது.
பெட்ரோல், டீசல் வாகனங்களில் எஞ்சின் மற்றும் சைலென்சர் சப்தம் மூலம் இயற்கையாகவே ஒலி உருவாகிறது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களில் குறிப்பாக குறைந்த வேகத்தில் இயங்கும்போது இந்த ஒலி மிக மிக குறைவாக இருக்கும். இதனால் வாகனம் பின்னால் அல்லது அருகில் வருவதை பாதசாரிகள் கவனிக்காமல் போகும் சூழல் ஏற்படலாம்.

குறிப்பாக சாலையை கடக்கும் பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் போன்றவர்களுக்கு அருகில் வாகனம் வருவது தெரியாமல் போகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால், விபத்துக்களும் ஏற்படுகின்றன. இதனை கருத்தில்கொண்டு மின்சார வாகனங்கள் குறைவாக வேகத்தில் செல்லும்போது செயற்கை ஒலி எழுப்பும் அமைப்பை வழங்குவதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) வெளியிட்ட G.S.R. 07(E) என்ற அறிவிப்பின் மூலம் மத்திய மோட்டார் வாகனச் சட்டம், 1989ல் இந்த புதிய விதியை கொண்டு வந்துள்ளது. இதன்படி M மற்றும் N வகையை சேர்ந்த மின்சார வாகனங்களில் AVAS பொருத்தப்பட வேண்டும். இந்த அமைப்பு AIS-173 தரக் குறியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள செயற்கை ஒலி அமைப்பு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நாளை அக்டோபர் 1 முதல் இந்த புதிய விதியானது புதிதாக அறிமுகம் செய்யப்படும் மின்சார வாகன மாடல்களுக்கு மட்டுமே அமலுக்கு வருகிறது. ஏற்கனவே சந்தையில் விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் வாகன மாடல்களுக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் 1 முதல் கட்டாயமாக்கப்படுகிறது.
அதேபோன்று, M என்ற வகையில் குறிப்பிடப்படும் நான்கு சக்கர பயணிகள் வாகனங்களுக்கும்,N என்ற வகையில் குறிப்பிடப்படும் நான்கு சக்கர சரக்கு வாகனங்களுக்கும் மட்டுமே பொருந்தும். இருசக்கர வாகனங்களுக்கு ஏற்கனவே முன்மொழிவில் குறிப்பிடப்பட்டாலும், இந்த விதி இப்போதைக்கு பொருந்தாது.
இதற்கான ஒளி அளவு வரம்பு விதிகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதாவது, வாகனம் 20 கிமீ வேகம் வரை மட்டுமே இந்த செயற்கை ஒலி அமைப்பு மூலமாக சப்தத்தை வழங்கும். வாகனம் மணிக்கு 20 கிமீ வேகத்தை தாண்டும்போது இது தானியங்கி முறையில் அணைந்து விடும்.
மேலும், AIS-173 சோதனை விதிகளின்படி 10 கி.மீ வேகத்தில் ஒட்டுமொத்த குறைந்தபட்ச ஒலி அளவு 50 dB(A) ஆகவும், 20 கி.மீ வேகத்தில் 56 dB(A) ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னோக்கி செல்லும்போது அதிகபட்ச ஒலி அளவு 75 dB(A)-ஐ தாண்டக்கூடாது என்றும் தரநிலை கூறுகிறது. வாகனம் ரிவர்ஸ் எடுக்கும்போது இந்த செயற்கை ஒலி அமைப்பு செயல்படும்.
இந்தியாவில் பரபரப்பான நகரச் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் குழந்தைகள், முதியவர்கள் திடீரென குறுக்கே வரும்போது இந்த அம்சம் பெரும் விபத்துகளைத் தவிர்க்க உதவும். எலெக்ட்ரிக் வாகனங்களின் அமைதியான இயக்கம் இனி யாருக்கும் ஆபத்தாக மாறாது என்பதை இது உறுதி செய்கிறது.
வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய இவி மாடல்களில் இந்த ஒலி அமைப்பை பொருத்தும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. அக்டோபர் 1 முதல் விற்பனைக்கு வரும் அனைத்து புதிய எலெக்ட்ரிக் கார்களிலும் இந்த ஏவிஏஎஸ் அம்சம் தரநிலையாக இடம்பெற்றிருப்பது இனி கட்டாயமாகும்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் அதே வேளையில், சாலை பாதுகாப்பையும் பலப்படுத்த அரசு எடுத்துள்ள இந்த முடிவு மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. இது எதிர்கால இவி வாகனப் பயணத்தை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications


