ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒரு புதிய எஸ்யூவி வெளியாகிறது.. இந்த ஜூலை மாதம்!
இந்த ஜூலை மாதம் அடுத்து வரும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒரு புதிய எஸ்யூவி இந்தியாவில் வெளியாகவுள்ளது. வழக்கமாக திரைப்படங்களைத் தான் வியாழக்கிழமை வெளியிடுவார்கள். இப்போது கார்களையும் அந்தக் கிழமையிலேயே வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள் போல. அந்த வகையில் அடுத்து வரும் மூன்று வியாழக்கிழமைகளிலும் மூன்று புதிய எஸ்யூவிக்களை இந்திய ஆட்டோமொபைல் சந்தை பெறவிருக்கிறது. அவை என்னென்ன கார்கள் என்பதைப் பார்க்கலாம்.
நிஸான் டெக்டான்:
புதிய எஸ்யூவிக்களின் வரிசையில் வரும் வியாழக்கிழமை, அதாவது ஜூலை 9ம் தேதியன்று புதிய டெக்டான் (Nissan Tekton) எஸ்யூவியை இந்தியாவில் வெளியிடுகிறது நிஸான். ஹூண்டாய் கிரெட்டா, மாருதி விக்டோரில் மற்றும் கியா செல்டோஸ் உள்ளிட்ட மிட்-சைஸ் எஸ்யூவிக்களுக்குப் போட்டியாக இந்தியாவில் வெளியாகிறது புதிய நிஸான் டெக்டான். இது இந்த 2026ம் ஆண்டு கிராவைட்டுக்குப் பிறகு நிஸான் வெளியிடும் இரண்டாவது புதிய காராகும்.

கிராவைட்டைப் போலவே ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ரெனோ காரை அடிப்படையாகக் கொண்ட புதிய டெக்டானும் உருவாக்கப்பட்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் வெளியான ரெனோ டஸ்டரை அடிப்படையாகக் கொண்டுள்ளது டெக்டான். எனவே புதிய எஸ்யூவியின் பவர்ட்ரெயின் தேர்வுகள், சீட் லேஅவுட், அளவுகள் எல்லாம் டஸ்டரைப் போலவே தான் இருக்கும். புதிய வடிவமைப்பில், கூடுதல் வசதிகளை மட்டும் இந்தப் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி கொண்டிருக்கும் எனத் தகவல்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஜி ஸ்டார்லைட் 560:
தொடர்ந்து அடுத்த வாரம் வியாழக்கிழமை, அதாவது ஜூலை 16ம் தேதியன்று இந்தியாவில் தங்களுடைய பிளக்-இன் ஹைபிரிட் எஸ்யூவியான ஸ்டார்லைட் 560-யை எம்ஜி வெளியிடவுள்ளது. இந்தியாவில் மாஸ் மார்க்கெட் பிரிவில் வெளியாகும் முதல் பிளக்-இன் ஹைபிரிட் காராக இதனை நாம் கூறலாம். ஸ்டார்லைட் 560 என்பது இந்தக் காருக்கு வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் பெயர். இந்தியாவிலும் இந்தப் பெயரிலேயே தான் இதனை எம்ஜி வெளியிடுகிறதா என்பதை நாம் அடுத்த வாரம் தெரிந்து கொள்ளலாம்.

வழக்கமான ஹைபிரிட் போல இல்லாமல், இந்த பிளக்-இன் ஹைபிரிட் காரில் சற்று பெரிய பேட்டரி பேக் கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் இதனை நாம் தனியே பிளக் செய்து சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். அதனால் தான் பிளக்-இன் ஹைபிரிட் எனப் பெயர். அதே நேரம் எரிபொருள் டேங்கும் இருக்கும். ஆனால் இந்த எரிபொருள் ஜெனரேட்டர் போல செயல்பட்டு பேட்டரியை சார்ஜ் செய்யவே பயன்படுத்தப்படும்.
பிளக்-இன் ஹைபிரிட் கார்கள் தயாரிப்பு செலவு பிடிக்கும் செயல் என்பதால் தான் நிறைய நிறுவனங்கள் இந்திய சந்தைக்கு இந்த வகை கார்களை பரிசீலனை செய்யாமல் இருந்து வந்தன. எம்ஜி மோட்டார் துணிந்து களமிறங்கியிருக்கிறது. இது ஒரு வகையில் எலெக்ட்ரிக் கார் தான் என்றாலும், எரிபொருள் பயன்பாடு இருப்பதால் இதற்கு எலெக்ட்ரிக் கார்களுக்குக் கொடுக்கப்படுவது போல வரிச்சலுகைகள் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எரிபொருள் காராகவே இதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிப்ட்:
அதற்கு அடுத்த வியாழக்கிழமை, அதாவது ஜூலை 23ம் தேதியன்று மாருதி சுஸூகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட பிரெஸ்ஸா ஃபேஸ்லிப்டை இந்தியாவில் வெளியிடவுள்ளது. இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் எஸ்யூவிக்களிலேயே குறைவான விலையில் வெளியாகும் ஒரு கார் என்றால் அது இது தான். புதிய ஃபேஸ்லிப்ட் வெர்ஷனில் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் அண்டர்பாடி CNG டேங்க் ஆகியவை மிகவும் எதிர்பார்க்கப்படும் அம்சங்களாக இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கப்படும் எஸ்யூவி வெளியீடுகள் இவை தான். 10 லட்சத்திற்கும் உள்ளே முதல் 30 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் இந்த எஸ்யூவிக்கள் வெளியாகவுள்ளன. இதில் பிரெஸ்ஸாவும், டெக்டானும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications