இதுக்கு மேல என்ன நிரூபிக்கனும்? டாடா உருவாக்கினாலே அது பெஸ்ட் தான்... புதிய பன்ச்!!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், கார்களின் பாதுகாப்பு விஷயத்தில் தொடர்ந்து புதிய தரநிலைகளை நிர்ணயித்து வருகிறது. பாதுகாப்பான கார்களை உருவாக்குவதில் முன்னோடியாகத் திகழும் டாடாவின் பங்களிப்பு, இந்திய சாலைகளில் உறுதியான மற்றும் பாதுகாப்பான வாகனங்களுக்கு ஒரு புதிய அடையாளத்தை வழங்கியுள்ளது. 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்ற முதல் இந்திய உற்பத்தியாளர் என்ற பெருமையைத் தாங்கிய டாடா, இன்று (ஜன.13) பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்துள்ள தனது புதிய 'பன்ச்' (Punch) காரின் பாதுகாப்புத் திறனை ஒரு வித்தியாசமான முறையில் நிரூபித்துள்ளது.
மிக சமீபத்தில் வெளியாகி, ரூ.5.59 லட்சம் என்ற கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கும் புதிய டாடா பன்ச் காரின் பாதுகாப்புத் தரத்தை வெளிக்காட்ட லாரி ஒன்றுடன் காரை மோதவிட்டு டாடா நிறுவனம் சோதித்துள்ளது. புனேயில் உள்ள டாடாவின் மேம்பட்ட மோதல் சோதனை மையத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையை வீடியோவாக காட்சிப்படுத்தி, புதிய பன்ச் காரின் அறிமுக நிகழ்ச்சியிலும் டாடா மோட்டார்ஸ் திரையிட்டு காண்பித்தது.

இந்தச் சோதனையின்போது, பன்ச் கார் மணிக்கு 50 கி.மீ வேகத்தில், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது மோதவிடப்பட்டது. இந்த சோதனையில் பன்ச் காரின் முழு-முன்பகுதியும் லாரி மீது மோதியது. மோதிய அடுத்த நொடியே, பன்ச் காரின் ஏர்பேக்குகள் (Airbags) உடனடியாகத் திறப்பதை டாடா வெளியிட்ட வீடியோவில் காண முடிந்தது.
காரின் கேபினில் உள்ள 'ஏ-பில்லர்' பகுதியில் குறிப்பிடத்தக்க வகையில் எந்த சேதாரமும் இல்லை. மோதலுக்குப் பின்னரும் பயணிகள் அமரும் கேபின் அப்படியே இருந்ததுடன், லாரியின் எந்தப் பகுதியும் பன்ச் காருக்கு உள்ளே நுழையவில்லை. மிக முக்கியமாக, மோதலுக்குப் பின்னரும் காரின் அனைத்துக் கதவுகளையும் திறக்க முடிந்தது.

இந்தச் சோதனையில் உற்று நோக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான குறிப்பு, இதில் பயன்படுத்தப்பட்ட லாரியில் முறையான 'அண்டர்ரன் பாதுகாப்பு பார்' (Underrun Protection Bar) பொருத்தப்பட்டிருந்தது. ஆனால், இந்தியச் சாலைகளில் பல டிரக்குகளில் பயனுள்ள அண்டர்ரன் பாதுகாப்பு பார் இல்லாததால், கார்-டிரக் மோதல்களில் கடுமையான காயங்கள் ஏற்படுகின்றன.
இந்தச் சோதனையின் முழு விவரங்கள் இன்னும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படவில்லை என்றாலும், முன்பக்க மோதல்களில் பன்ச் சிறப்பான பாதுகாப்பை வழங்குகிறது என்பது தெளிவாகிறது. இதனை ஏற்கனவே இந்தியாவின் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் (Bharat NCAP Crash Test) உறுதி செய்துவிட்டது. பாரத் என்சிஏபி-இல் பெரியவர்கள் மற்றும் குழந்தை பயணிகள் என இருவரது பாதுகாப்பிலும் 5-நட்சத்திர மதிப்பீட்டைப் புதிய பன்ச் பெற்றுள்ளது.

மேலும், 2021ஆம் ஆண்டிலேயே குளோபல் (Global) என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்று, டாடா பன்ச் தனது பாதுகாப்பிற்கான நற்பெயரை அப்போதே நிலைநிறுத்திவிட்டது. அதி-வலிமையான எஃகு மற்றும் உயர்-வலிமையான எஃகு ஆகியவற்றால் புதிய பன்ச் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இது துரதிர்ஷ்டவசமான விபத்துக்களின்போதும் வாகனத்தை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது.
புதிய பன்ச் காரின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் (Anti-lock Braking System) மற்றும் இபிடி (Electronic Brakeforce Distribution), ISOFIX குழந்தை இருக்கை மவுண்ட்கள் மற்றும் 360° கேமரா ஆகியவை அடங்கும். மத்திய அரசின் தொடர் வலியுறுத்தலை அடுத்து அனைத்து கார்களிலும் 6 ஏர்பேக்குகள் சேர்க்கப்பட்டது, பன்ச் போன்ற அளவில் சிறியதான மற்றும் விலை குறைவான காரின் பாதுகாப்பு அம்சங்களில் ஒரு பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: குளோபல் மற்றும் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்களை தாண்டி, இந்த மோதல் சோதனை ஆனது புதிய பன்ச் கார் உண்மையான சாலை விபத்து சூழ்நிலைகளில் எவ்வாறு செயல்படும் என்பதை நிரூபிக்க டாடா மோட்டார்ஸ் ஒரு படி மேலே சென்றுள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்திய சாலைகளில் அடிக்கடி நிகழும் ஆபத்தான விபத்துகளில் ஒன்றான, நிலையாக நின்றிருக்கும் லாரி உடன் வாகனங்கள் மோதும் காட்சியை இது சித்தரிக்கிறது.


Click it and Unblock the Notifications









