முற்றிலும் நவீன டிசைனுக்கு மாறுகிறது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்... டிச.1ல் அறிமுகம்
இந்தியாவில் அதிக வரவேற்பைப் பெற்ற பிரீமியம் எஸ்யூவி கார்களில் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு தனி இடம் உண்டு. கம்பீரமான தோற்றம், சக்திவாய்ந்த டீசல் இன்ஜின், கரடுமுரடான சாலைகளிலும் பயணிக்கும் திறன் எனப் பல காரணங்களால் இந்த கார் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது. இந்நிலையில், அடுத்ததாக வரவுள்ள புதிய ஃபார்ச்சூனர் குறித்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
டொயோட்டா நிறுவனம் புதிய ஃபார்ச்சூனர் எஸ்யூவியை வரும் டிசம்பர் 1ந் தேதி உலகளவில் அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து, இந்தக் கார் வரும் 2027ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்திய அறிமுகத்திற்கான சரியான தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

புதிய தோற்றம்
தற்போதைய ஃபார்ச்சூனர் நீண்ட காலமாகச் சந்தையில் விற்பனையில் இருந்து வரும் நிலையில், புதிய மாடலில் வெளிப்புற வடிவமைப்பில் கணிசமான மாற்றங்கள் இடம்பெறலாம். தாய்லாந்தில் சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட படங்கள், காரின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் புதிய வடிவமைப்பு அம்சங்கள் இடம்பெறுவது தெரிய வந்துள்ளது.
முன்புறத்தில் பெரிய கிரில், கூர்மையான வடிவமைப்பைக் கொண்ட ஹெட்லைட்டுகள், புதிய பம்பர் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன. உயரமான முன்பகுதி, பெரிய வீல் ஆர்ச்சுகள், கம்பீரமான தோற்றம் போன்ற ஃபார்ச்சூனரின் அடையாளங்கள் தொடர்ந்து தக்கவைக்கப்படும். பின்புறத்தில் புதிய டெயில்கேட் வடிவமைப்பு மற்றும் இணைக்கப்பட்ட எல்இடி விளக்குப் பட்டை இடம்பெற வாய்ப்புள்ளது.
உட்புறத்தில் மாற்றங்கள்
புதிய ஃபார்ச்சூனரில் வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்க்கும் மாற்றங்களில் ஒன்றாக உட்புற வடிவமைப்பு உள்ளது. தற்போதைய காரில் உள்ள வசதிகளைவிட மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளை வழங்கும் வகையில் புதிய டேஷ்போர்டு அமைப்பு இடம்பெறும். புதிய டொயோட்டா ஹைலக்ஸ் மாடலின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு உட்புறம் உருவாக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் இணைப்பு உள்ளிட்ட வசதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், மேம்படுத்தப்பட்ட இருக்கைகள், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், தானியங்கி அவசரகால பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட் போன்ற மேம்பட்ட ஓட்டுநர் உதவி வசதிகளும் (ADAS) உயர்நிலை வேரியண்ட்டுகளில் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
எஞ்சின் தேர்வுகள்
தற்போதைய 2.8 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் தொடர்ந்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் தொடர வாய்ப்புள்ளது. 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய மாடலில் தற்போதைய கட்டமைப்பைத் தொடர்ந்து பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. அதாவது, வலுவான லேடர் ஃபிரேம் அடித்தளத்தைத் தக்கவைத்துக்கொண்டு, வெளிப்புற வடிவமைப்பு, உட்புற வசதிகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் பெரிய மாற்றங்களை டொயோட்டா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய ஃபார்ச்சூனர் உலகளவில் டிசம்பர் 1ஆம் தேதி அறிமுகமாகவுள்ள நிலையில், இந்தியாவில் வரும் 2027ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா நிறுவனம் முதலில் இன்னோவா ஹைகிராஸ் காரின் புதுப்பிக்கப்பட்ட மாடலை அறிமுகப்படுத்திய பின்னர், புதிய ஃபார்ச்சூனரை இந்தியச் சந்தைக்குக் கொண்டுவரலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் ஃபார்ச்சூனருக்குப் போட்டியாக ஜீப் மெரிடியன், ஸ்கோடா கோடியாக் உள்ளிட்ட எஸ்யூவி கார்கள் உள்ளன. புதிய வடிவமைப்பு, கூடுதல் பாதுகாப்பு வசதிகள் மற்றும் நவீன உட்புறத் தொழில்நுட்பங்களுடன் ஃபார்ச்சூனர் வரும்பட்சத்தில், இந்தப் போட்டி மேலும் தீவிரமடையும்.
Source: Financial Express


Click it and Unblock the Notifications


