கியா காருக்கு போட்டியாக தூத்துக்குடி ஆலை நிறுவனம் களமிறக்கும் 7-சீட்டர் கார்! உங்க பட்ஜெட்டிற்கு எதை வாங்குவது
இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் 7-சீட்டர் எலெக்ட்ரிக் எம்பிவி (MPV) கார்கள் சந்தையில் வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 (VinFast VF MPV 7) மற்றும் கியா கேரன்ஸ் கிளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) ஆகிய இரண்டு முக்கிய கார் மாடல்கள் களமிறங்கியுள்ளன. கியா கேரன்ஸ் காரின் பிரீமியம் எலெக்ட்ரிக் பதிப்பாக கேரன்ஸ் கிளாவிஸ் இவி கிடைத்து வரும் வேளையில், வின்ஃபாஸ்ட் மாடல் சற்று பெரியது மற்றும் அதிக சக்தி வாய்ந்தது.
இது தனிப்பட்ட மற்றும் வணிக ரீதியான பயன்பாடுகளையும் இலக்காகக் கொண்டு லிமோ க்ரீன் என்கிற பெயரிலும் விற்பனைக்கு வருகிறது. வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7, தனது சிறப்பான செயல்பாடு மற்றும் விசாலமான உட்புற இடவசதி மூலம் தனித்து நிற்கிறது. இது கியாவின் கேரன்ஸ் கிளாவிஸ் இவி காரின் 169 பிஎச்பி-ஐ விட கணிசமான அதிகமான 201 பிஎச்பி பவரையும், 280 என்.எம் டார்க் திறனையும் வழங்குகிறது.

இது முழு சுமையுடன் செல்லும் போதும் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்த உதவியாக இருக்கும். 4,740மிமீ நீளமும், 2,840மிமீ வீல்பேஸ் நீளமும் கொண்ட வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7, கியா மாடலை விட பெரியது. இதனால், மூன்று இருக்கை வரிசைகளிலும் அதிக காலி இடவசதி கிடைக்கும்.
இன்றைய கால தொழில்நுட்ப அம்சங்களாக, மிதக்கும் எஃபெக்ட்டில் பெரிய சென்ட்ரல் டச் ஸ்கிரீன் கொண்ட மினிமலிஸ்டிக் டாஷ்போர்டு, V-வடிவ எல்இடி விளக்குகள் மற்றும் 19 இன்ச் ஏரோ அலாய் சக்கரங்கள் போன்றவை இதில் உள்ளன. மறுப்புறம், கியா கேரன்ஸ் கிளாவிஸ் இவி ஆனது குடும்பத்துடன் பயணிப்பதற்கு ஏற்ப பிரீமியம் அம்சங்கள் மற்றும் கூடுதல் திறன் கொண்ட பேட்டரி ரேஞ்ச் ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்துகிறது.

வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் காரில் ஒரு பேட்டரி ஆப்ஷன் மட்டுமே தற்போதைக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கியா 42 kWh மற்றும் 51.4 kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களை வழங்குகிறது. இதனால் வெவ்வேறு பட்ஜெட்களுக்கு ஏற்ப விலையில் இது கிடைக்கிறது. கியாவின் உட்புறத்தில் 26.62 இன்ச்சில் இரு பனோரமிக் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
இவை, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கு ஒன்று, இன்ஃபோடெயின்மென்ட் திரைக்கு ஒன்றாகும். 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் சிங்கிள்-பெடல் 'i-Pedal' டிரைவிங் போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்துள்ளன. பாதுகாப்பு மற்றும் வசதிக்காக, இது லெவல்-2 ADAS (டாப் வேரியண்ட்களில் மட்டும்), காற்றோட்டமான வெண்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் தனித்துவமான பனிக்கட்டி வடிவிலான எல்இடி ஹெட்லேம்ப்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
வேகமான சார்ஜிங் திறனும் ஒரு முக்கிய வேறுபாடு ஆகும். வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 கார் ஆனது 80kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 10% முதல் 70% வரை 30 நிமிடங்களில் சார்ஜ் செய்யக்கூடியதாக உள்ளது. அதேசமயம், கியா மாடல் ஆனது 100kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 10% முதல் 80% வரை 39 நிமிடங்களில் சார்ஜ் செய்யக்கூடியதாக உள்ளது.
வின்ஃபாஸ்ட் விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம். ஏப்ரல் 15ஆம் தேதி இந்த புதிய வின்ஃபஸ்ட் எலெக்ட்ரிக் கார் அதிகாரப்பூர்வ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விலைகள் அறிவிக்கப்பட உள்ளது. கியா கேரன்ஸ் கிளாவிஸ் இவி ரூ.17.99 லட்சம் முதல் ரூ.24.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா கேரன்ஸ் கிளாவிஸ் இவி ஆனது ஏற்கனவே அதன் குறைவான விலை மூலமாக இந்திய சந்தையில் கவனத்தை ஈர்த்துள்ளது. இத்தகைய சூழலில் அதற்கு போட்டியளிக்கும் விதமாக விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் கார் களமிறக்கப்படுகிறது. இதன் விலை சற்று அதிகமாக எதிர்பார்க்கப்பட்டாலும், அதற்கேற்ப அதன் பரிமாண அளவுகளும், தொழிற்நுட்ப அம்சங்களும் அதிகமாக வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








