புதிய ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் அதிகாரப்பூர்வ டீசர் வெளியீடு!
இந்தியாவில் செடான் கார்களை விரும்புவோர் மத்தியில் தனித்துவமான வரவேற்பைப் பெற்றுள்ள வோக்ஸ்வாகன் விர்ட்டஸ் கார் விரைவில் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக விற்பனைக்கு வரவுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில், முதல் அதிகாரப்பூர்வ டீசரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்மூலமாக, காரின் வெளிப்புற வடிவமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களை பார்க்க முடிகிறது.
கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகமான விர்ட்டஸ் காருக்கு தற்போதுதான் மாற்றங்கள் செய்யப்பட்டு வர இருக்கிறது. ஏற்கெனவே பலமுறை சோதனை ஓட்டத்தின்போது இந்த கார் கேமராவில் சிக்கியிருந்தது. தற்போது வெளியிடப்பட்ட டீசர் மூலம் புதிய காரின் தோற்றம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

புதிய மாற்றங்கள்
புதிய விர்ட்டஸ் காரின் முன்பக்கத்தில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர், புதுப்பிக்கப்பட்ட முகப்பு விளக்குகள் ஆகியவை இடம்பெறுகின்றன. எல்இடி பகல்நேர விளக்குகள் (DRL) புதிய அமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. கிரில் பகுதியில் ஃபோக்ஸ்வேகன் லோகோ மற்றும் சிவப்பு வண்ண ஜிடி பேட்ஜ் இடம்பெறுவது ஸ்போர்ட்டியான தோற்றத்தை மேலும் அதிகரிக்கிறது.
முன்பக்க பம்பரில் அகலமான காற்று உட்புகும் அமைப்பு, புதிய வடிவிலான அலங்காரங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பனி விளக்குகள் அமைக்கப்படும் பகுதியில் சிறிய வடிவிலான விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, தற்போதைய விர்ட்டஸை விட புதிய மாடல் கூடுதல் ஆக்ரோஷமான தோற்றத்தைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய அலாய் வீல்கள்
புதிய விர்ட்டஸ் காரின் பக்கவாட்டு வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் தெரியவில்ை. இருப்பினும், புதிய வடிவமைப்பிலான அலாய் வீல்கள் இடம்பெறுகின்றன. கருப்பு நிற அலாய் வீல்கள் ஜிடி வேரியண்ட்டில் இடம்பெறலாம். காரின் நீல வண்ண வெளிப்புற வண்ணமும் டீசரில் கவனத்தை ஈர்க்கிறது.
பின்பக்கத்தில் புதிய எல்இடி டெயில் லைட் வடிவமைப்பு இடம்பெறுகிறது. தற்போதைய விளக்குகளின் அமைப்பைத் தக்கவைத்துக் கொண்டு, உள்ளே இருக்கும் ஒளிரும் பகுதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பூட் லிட் பகுதியில் ஸ்பாய்லர் மற்றும் ஜிடி பேட்ஜ் ஆகியவை தொடர்ந்து இடம்பெறுகின்றன. பின்பக்க பம்பரிலும் சில மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
புதிய வசதிகள்
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இதுவரை புதிய விர்ட்டஸ் காரின் உட்புற வடிவமைப்பை வெளியிடவில்லை. இருப்பினும், ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் வோக்ஸ்வாகன் டைகன் கார்களில் இடம்பெற்றுள்ள புதிய வசதிகள் இதிலும் வழங்கப்படலாம். குறிப்பாக, பெரிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 360 டிகிரி கேமரா, புதுப்பிக்கப்பட்ட மென்பொருள் வசதிகள், மேம்படுத்தப்பட்ட குளிர்சாதன வசதி ஆகியவை புதிய மாடலில் இடம்பெறலாம். தற்போதைய காரில் இருக்கும் 10.1 அங்குல தொடுதிரை, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகளும் தொடர வாய்ப்புள்ளது.
எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ்
புதிய விர்ட்டஸ் காரில் தற்போதைய 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின்கள் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிகிறது. இதில், 1.0 லிட்டர் எஞ்சின் 115 எச்பி பவரையும் 178 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. அதேபோல், 1.5 லிட்டர் எஞ்சின் 150 எச்பி பவரையும் 250 என்எம் டார்க்கையும் வழங்குகிறது.
இதில் முக்கியமான மாற்றமாக, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் தற்போதுள்ள 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு மாற்றாக புதிய 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். 1.5 லிட்டர் எஞ்சினுடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தொடர்ந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது அறிமுகம்
புதிய ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி, விலை மற்றும் வேரியண்ட்டுகள் குறித்த அறிவிப்புகளை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. தற்போதைய விர்ட்டஸ் காரின் விலை ரூ.10.71 லட்சம் முதல் ரூ.19.20 லட்சம் வரை உள்ளது.
போட்டியாளர்கள்
ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஹோண்டா சிட்டி ஆகிய கார்களுடன் புதிய விர்ட்டஸ் கார் போட்டியிடும். புதிய வடிவமைப்பு, கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கியர்பாக்ஸ் ஆகியவை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்யூவி கார்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஸ்போர்ட்டியான செடான் கார்களை விரும்புவோருக்கு புதிய ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் சிறந்த தேர்வாக அமையும்.


Click it and Unblock the Notifications


