மாசம் வெறும் ரூ.9,399 செலுத்தி இந்தக் காரைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.. புதிய திட்டம் அறிமுகம்!
இந்தியாவில் பல்வேறு வகைகளிலும் தங்களது வணிகத்தைப் பெருக்க முயற்சி செய்து வருகிறது நிஸான். அந்த வகையில் புதிய முயற்சியாக, இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கார் மாடல்களை லீஸ் (Lease) அல்லது சந்தா முறையில் வழங்கும் அம்சத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் தற்போது மேக்னைட் (Magnite) மற்றும் கிராவைட் (Gravite) ஆகிய இரண்டு மாஸ் மார்க்கெட் கார் மாடல்களை நிஸான் விற்பனை செய்து வருகிறது.
இந்த இரண்டு கார் மாடல்களையுமே லீஸ் அல்லது சந்தா முறையில் வாடிக்கையாளர்கள் வாங்கும் வகையிலான திட்டத்தை நிஸான் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய திட்டத்திற்காக ஆவிஸ் இந்தியா (Avis India) என்ற நிறுவனத்துடன் நிஸான் கைகோர்த்திருக்கிறது. லீஸ் அல்லது சந்தா மூலம் வாங்கப்படும் கார்களின் நடைமுறைகளை முழுவதுமாக ஆவிஸ் இந்தியா நிறுவனமே பார்த்துக் கொள்ளவிருக்கிறது.

இந்தியாவில் லீஸ் அல்லது சந்தா முறையில் கார்களை வழங்குவது புதிது அல்ல. பல்வேறு நிறுவனங்கள் மேற்கூறியதை் போல மூன்றாம் தரப்பு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இது போன்ற திட்டங்களை செயல்படுத்தியே வருகின்றன. ஆனால் நிஸானின் திட்டத்தில் ஒரு சிறிய குறிப்பு இருக்கிறது. இதனை தனிநபர் பயன்பாட்டிற்கான திட்டமாக அந்நிறுவனம் அறிவிக்கவில்லை. மாறாக வணிக நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு திட்டமாகவே அறிவித்துள்ளது.
ஆம், கார்ப்பரேட் பயன்பாட்டிற்காகவே இந்தப் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது நிஸான். இந்தியாவில் எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடை மேல்நிலை ஊழியர்களுக்கு கார்களை பயன்பாட்டிற்காகக் கொடுப்பது வழக்கம். அப்படி கொடுக்கப்படும் கார்கள் இது போன்ற லீஸ் அடிப்படையிலேயே கொடுக்கப்படும். அந்தப் பயன்பாட்டை முன்னிலைப்படுத்தியே புதிய திட்டத்தை நிஸான் கொண்டு வந்திருக்கிறது.

மேலே கூறியது போல மேக்னைட் அல்லது கிராவைட் மாடல்களை இந்தத் திட்டத்தின் கீழ் கார்ப்பரேட் நிறுவனங்கள் லீஸ் செய்து கொள்ள முடியும். அதிகபட்சமாக 60 மாதங்கள் வரை வாடிக்கையாளர்கள் தாங்கள் விருப்பப்படும் கால அளவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். லீஸ் எடுக்கப்படும் கார்களை 50,000 கிமீ வரை இந்தத் திட்டத்தின் கீழ் பயன்படுத்திக் கொள்ள முடியும். குறைந்தபட்சமாக மாதம் ரூ.9,399 என்ற கட்டணத்தில் இருந்து லீஸ் அல்லது சந்தா தொடங்குகிறது.
இந்தத் திட்டத்தில் காரைக் கொடுப்பது மட்டுமே நிஸானின் வேலை. அந்தக் காரை பெறுவதில் தொடங்கி, பதிவு செய்வது, இன்சூரன்ஸ் செய்வது, பராமரிப்பது உட்பட மற்ற அனைத்து சேவைகளையும் ஆவிஸ் இந்தியா நிறுவனம் பார்த்துக் கொள்ளும். 60 மாத காலத்தின் முடிவில் நிறுவனங்கள் அந்தக காரை சொந்தமாகவும் வாங்கிக் கொள்ளலாம் அல்லது லீஸ் காலத்தை முடித்துவிட்டு திரும்பக் கொடுத்தும் விடலாம்.
இந்தியாவில் நிறைய நிறுவனங்கள் சொந்தமாக கார்களை வாங்குவதைத் தவிர்த்து இது போன்ற லீஸ் அல்லது சந்தா முறையில் கார்களை பயன்படுத்துவதையே விரும்பத் தொடங்கியிருக்கின்றன. எனவே தான் நிஸானும் இந்தக் களத்தில் புதிதாகக் குதித்திருக்கிறது. இதன் மூலம் புதிய வகைகளில் தங்களது வணிகத்தை நிஸான் பெருக்க முடியும். அடுத்தடுத்து அந்நிறுவனம் வெளியிடும் புதிய கார் மாடல்களும் இந்தத் திட்டத்தில் இணைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிஸானின் இந்தப் புதிய திட்டம் வரவேற்கத்தக்ககது தான். இதனை நிறுவனங்களுக்கு மட்டுமின்றி தனிநபர் பயன்பாட்டிற்கும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கலாம். ஆனால் மேக்னைட் மற்றும் கிராவைட் ஆகிய கார்கள் மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
எனவே தனிநபர் பயன்பாட்டிற்கு இஎம்ஐ ஆப்ஷன் இன்னும் சிறப்பான தேர்வாக இருக்கும் எனக் கருதி அதற்கு இந்தத் திட்டத்தை நிஸான் அறிமுகப்படுத்தாமல் இருக்கலாம் எனத் தெரிகிறது. இந்தியாவில் மேக்னைட் எஸ்யூவியை ரூ.5.62 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கியும், கிராவைட் எம்பிவியை ரூ.5.65 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கியும் நிஸான் விற்பனை செய்து வருகிறது.
தலைப்பில் 'ரூ.ரூ.9,399' என்று தவறுதலாக இருந்தது 'ரூ.9,399' என்ற மாற்றப்பட்டது. அதேபோல் தலைப்பில் 'புதிய திட்டத்தை' என தவறுதலாக இருந்தது 'புதிய திட்டம்' என மாற்றப்பட்டது.


Click it and Unblock the Notifications