டொயோட்டாவுக்கே சவால் விடும் புதிய எஸ்யூவியை வெளியிடும் நிறுவனம்.. வசதிகளைப் கேட்டா ஆடி போயிடுவீங்க!
இந்தாண்டு தொடங்கி வரும் ஆண்டுகளில் பல்வேறு புதிய நிஸான் கார் மாடல்கள் இந்தியாவில் வெளியிடப்படவுள்ளது. சமீபத்தில் தான் 7 சீட்டர் காரான கிராவைட்டை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்தது நிஸான். தொடர்ந்து பல்வேறு புதிய மாஸ் மார்க்கெட் கார்களை வெளியிடவும் திட்டங்கள் வைத்திருக்கிறது. கடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் மீண்டும் 'ஆக்டிவ்' ஆகியிருக்கிறது நிஸான்.
இந்த நிலையில் மாஸ் மார்க்கெட் பிரிவில் இல்லாமல் ப்ரீமியம் கார்கள் பிரிவில் புதிய கார் மாடல் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட அதிக ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அது வேறெதுவும் இல்லை, வெளிநாடுகளில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் பேட்ரோல் (Patrol) எஸ்யூவி தான். நிஸானின் ஃப்ளாக்ஷிப் காராக அறியப்படும் இதனை சில ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கு அந்நிறுவனம் கொண்டு வரலாம் எனத் தகவல்கள் வெளியாகி வந்தது.

அந்த நேரத்தில் தான் பேட்ரோல் எஸ்யூவிக்கு பதிலாக X-ட்ரையல் என்ற மற்றொரு எஸ்யூவி மாடலை இந்தியாவில் வெளியிட்டது அந்நிறுவனம். இதுவும் ப்ரீமியம் வகையைச் சேர்ந்தது தான். இந்த X-ட்ரையல் எஸ்யூவியை முழுவதுமாக இறக்குமதி செய்து ரூ.49.92 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டது அந்நிறுவனம். ஆனால், கடும் தோல்வியைச் சந்தித்தது இந்த ப்ரீமியம் எஸ்யூவி.
வெறும் 150 யூனிட்டுகள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் இப்போது வரையிலுமே சில யூனிட்டுகள் விற்பனையாகாமல் இருப்பதாக நமக்குத் தகவல்கள் வருகின்றன. கடந்த ஆண்டே ரூ.20 லட்சம் வரை குறைவான விலையில் இந்த எஸ்யூவி விற்பனை செய்யப்படத் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த X-ட்ரையல் ப்ரீமியம் எஸ்யூவி தோல்வியடைந்த போதிலும், பேட்ரோல் என்ற புதிய ப்ரீமியம் எஸ்யூவி மாடலை முழுவதுமாக இறக்குமதி செய்து CBU முறையில் இந்தியாவில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகிறது நிஸான்.

இந்தியாவில் ஒரு வாகனத்தை வெளியிடும் போது வாகன ஒப்புதல் சான்றிதழ் பெற வேண்டும். அந்தக் குறிப்பிட்ட கார் மாடல் இந்தியாவிற்கு ஏற்ற வகையில் இருக்கிறதா, இந்திய மோட்டார் வாகன சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதற்காக இந்த செயல்முறை இருந்து வருகிறது. இதனை ஹோமோலோகேஷன் செயல்முறை எனக் குறிப்பிடுகிறார்கள். இந்த செயல்முறை இல்லாமல் ஆண்டுக்கு 2,500 கார்கள் வரை ஒரு நிறுவனம் விற்பனை செய்ய முடியும்.
அந்த 2,500 கார்கள் கோட்டாவைப் பயன்படுத்தியே புதிய பேட்ரோல் எஸ்யூவியை இந்தியாவில் விற்பனை செய்ய நிஸான் விரும்புகிறது. இந்தப் புதிய எஸ்யூவி தொடர்பாக இந்தியாவில் தங்கள் டீலர்களிடம் பேசிய போது, அவர்களும் ஆர்வமாக இருப்பதாகவே தெரிவித்தருக்கிறது நிஸான். விலையைப் பற்றி பெரிதாகக் கவலைப்படாமல், அனைத்து விதமான மேம்பட்ட வசதிகளையும் கொண்ட காராக இதனை இந்தியாவில் களமிறக்குவதே நிஸானின் திட்டமாக இருப்பதாகத் தெரிகிறது.
1951ல் இருந்து தயாரிப்பில் இருக்கும் நிஸானின் பழமையான வாகனங்களில் ஒன்று பேட்ரோல் எஸ்யூவி. இதில் 3.8 லிட்டர், V6 பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜினானது 316 hp பவர் மற்றும் 386 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
இதனை விட பவர்ஃபுல்லான 3.5 லிட்டர், V6 ட்வின் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வும் பேட்ரோலில் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த இன்ஜினானது 425 hp பவர் மற்றும் 700 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இந்த இன்ஜினுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைக் கொடுத்துள்ளது நிஸான்.
ஸீரோ கிராவிட்டி சீட்கள், ஒவ்வொரு பயணிக்கும் தனிப்பட்ட கூலிங் ஸோன், பியோனோ பட்டன் இ-ஷிப்டர், பெரிய 28.6 இன்ச் டிஸ்பிளே, ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, கிளிப்ஸ்ச் ப்ரீமியம் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளைக் கொண்ட சொகுசு காராக இது இருக்கிறது. இந்தியாவில் வெளியாகும் பட்சத்தில், டொயோட்டா லேண்டு க்ரூஸர், லெக்சஸ் LX, மெர்சிடீஸ் GLS மற்றும் BMW X7 ஆகிய சொகுசு கார் மாடல்களுக்குப் போட்டியாக இந்த நிஸான் பேட்ரோஸ் எஸ்யூவி விற்பனை செய்யப்படும்.
விலையை மறந்து விட்டோமே. இந்த பேட்ரோஸ் எஸ்யூவியின் XE அல்லது SE வேரியன்ட்களை இந்தியாவில் நிஸான் வெளியிடும் பட்சத்தில், வாகன உற்பத்தி செலவு, இறக்குமதி வரிகள் எல்லாம் சேர்த்து எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ.2 கோடிக்கும் மேலாக இருக்கும். இதுவே பேட்ரோல் நிஸ்மோ அல்லச பேட்ரோல் ப்ரோ-4X என்ற உயர்நிலை வேரியன்ட்கள் என்றால் விலை ரூ.2.5 கோடி முதல் ரூ.3 கோடிக்கும் மேலாகக் கூட இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிஸானுக்கென்று தற்போது இந்தியாவில் தனித்த பிராண்டு அடையாளம் இல்லாமல் இருக்கிறது. விலை குறைவான கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனமாகவே அது பார்க்கப்படுகிறது. இந்த இமேஜை மாற்றவே புதிய பேட்ரோல் எஸ்யூவியை இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சி செய்வதாகத் தெரிகிறது. அனைத்து விதமான மேம்பட்ட வசதிகளையும் கொண்ட, சொகுசு கார்களுக்கு இணையான பேட்ரோல் எஸ்யூவி நிஸானுக்கு ப்ரீமியம் அந்தஸ்தைக் கொடுக்கும்.
அது வாடிக்கையாளர்களின் மனதிலும் பதிந்து, பட்ஜெட் கார்களின் விற்பனையில் எதிரொலிக்கும் என்பதே திட்டமாக இருக்கும். இதன் காரணமாகவே X-ட்ரையல் எஸ்யூவியையும் நிஸான் இந்தியாவில் வெளியிட்டிருக்கும். ஆனால் அது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. மாறாக பட்ஜெட் கார் நிறுவனம் வெளியிட்ட ப்ரீமியம் காராக ஆகிவிட்டது. நிஸான் எதிர்பார்ப்பதோ, ப்ரீமியம் காரை விற்பனை செய்யும் நிறுவனத்தின் பட்ஜெட் கார் என்ற பெயரையே.


Click it and Unblock the Notifications








