கிரெட்டாவுக்குப் போட்டியாக வெளியாகும் நிஸான் 'பேபி பேட்ரோல்' எஸ்யூவி, மார்க்கெட்டையே ஒரு கலக்கு கலக்கப் போகுது
ஜூலை 9ம் தேதியன்று இந்தியாவில் புதிய மிட்-சைஸ் எஸ்யூவியான டெக்டானை (Tekton) வெளியிடவுள்ளது நிஸான். ரெனோ டஸ்டரின் அதே பிளாட்ஃபார்மிலேயே இந்தக் காரை உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், டஸ்டரின் காப்பியாக இருக்கக்கூடாது என ரொம்பவே மெனக்கெட்டு வருகிறது அந்நிறுவனம். இந்நிலையில், இந்தப் புதிய கார் தொடர்பான 20 நொடிகள் கிளிம்ஸ் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது அந்நிறுவனம். இந்த கிளிம்ஸ் வீடியோ வாடிக்கையாளர்களிடையே புதிய காருக்கு பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த கிளிம்ஸ் வீடியோவில் இரண்டு கார்களைக் காட்டியிருக்கிறது நிஸான். ஒன்று புதிதாக வெளியாகவிருக்கும் டெக்டான். இதனை முழுமையாகக் காட்டாமல், டிசைனை பெரும்பான்மையாக மறைத்து விளக்குகள் மட்டும் தெரியும் வகையில் நிழல் உருவத்தையே காட்டியிருக்கிறது. வீடியோவில் இந்தக் காருக்குப் பின்னால் நிஸானின் ஐகானிக்கான பேட்ரோல் (Patrol) எஸ்யூவி நிற்கிறது. இது தான் வாடிக்கையாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்த முக்கியக் காரணமாக இருக்கிறது.

காரணம், சர்வதேச அளவில் பேட்ரோல் எஸ்யூவிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்தியாவிலும் இந்த எஸ்யூவியை CBU முறையில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் நிஸானுக்கு இருக்கிறது. அப்படி வெளியாகும் பட்சத்தில் 2 கோடி ரூபாயை ஒட்டிய விலையையே அது கொண்டிருக்கும். அப்படியான ஒரு சொகுசு எஸ்யூவி தான் பேட்ரோல்.
அந்தப் பேட்ரோல் எஸ்யூவியின் டிசைனை அடிப்படையாக வைத்து, புதிய மிட்-சைஸ் மாஸ் மார்க்கெட் எஸ்யூவியான டெக்டானை நிஸான் வடிவமைத்திருப்பதாகத் தெரிகிறது. கிளிம்ஸ் வீடியோவில் அப்படித்தான் காட்டியிருக்கிறது நிஸான். மேலும், வீடியோவின் முடிவில் 'பேபி பேட்ரோல்' (Baby Patrol) எனவும் புதிதாக வெளியிடப்படவிருக்கும் டெக்டானை குறிப்பிட்டுள்ளது நிஸான். இது புதிய நிஸான் கார் மீதான வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது.

டெக்டானில் குறிப்பாக இந்தந்த அம்சங்கள் இருக்கும் என்று தான் எதிர்பார்த்து வருகிறோம். அதுவும் ரெனோ டஸ்டரின் பிளாட்ஃபார்மில் அதன் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டிருக்கும் கார் என்பதால், வாடிக்கையாளர்களை சர்ப்ரைஸ் செய்யும் அளவிற்கு எந்த வசதியும் இந்தக் காரில் கொடுக்கப்பட்டிருக்காது என்றே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. ஆனால் அதனையும் மீறி, பேபி போட்ரோல் என்று அழைப்பதற்காக தகுதியாக சில அம்சங்களை டெக்டானிஸ் நிஸான் கொடுக்கும் எனில், அதனை விட இந்த எஸ்யூவிக்கு வேறு மார்க்கெட்டிங் தேவையில்லை.
பல ஆண்டுகளுக்குப் பிறகு நிஸானிடமிருந்து குறிப்பிடும் வகையிலான, பெயர் சொல்லும் வகையிலான ஒரு கார் வெளியாகவிருக்கிறது. பேட்ரோல் எஸ்யூவியை ஃபார்முலாவுக்குள் கொண்டு வந்து சரியான நூலைப் பிடித்திருக்கிறது நிஸான். இதுவரை நிஸானின் புதிய கார் மீது பெரிய ஆர்வமில்லாத வாடிக்கையாளர்களையும் இந்த செய்தி கண்டிப்பாக ஈர்க்கும்.
மேலே கூறியது போல டஸ்டர் எஸ்யூவியின் ரீபேட்ஜாக டெக்டான் இருக்கக்கூடாது என ரொம்பவே மெனக்கெடுகிறது நிஸான். அதற்கு பலன் இருக்குமா என்பது அடுத்த சில வாரங்களில் நமக்குத் தெரிந்துவிடும். வசதிகள் மற்றும் பவர்ட்ரெயினைப் பொறுத்தவரை ரெனோ டஸ்டரில் இருக்கும் அதே அம்சங்களே நிஸானின் புதிய டெக்டான் எஸ்யூவியிலும் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் பெரியளவில் எந்த மாற்றங்களும் இருக்காது என்றே தெரிகிறது.
இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் கிரெட்டா, மாருதி விக்டோரிஸ், கியா செல்டோஸ், மாருதி கிராண்டு விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வாகன் டைகூன், டாடா சியரா, ரெனோ டஸ்டர் உள்ளிட்ட மிட்-சைஸ் எஸ்யூவிக்களுக்குப் போட்டியாக புதிய நிஸான் டெக்டான் விற்பனை செய்யப்படவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 'பேபி பேட்ரோல்' என டெக்டானை நிஸான் அழைத்திருப்பது சரியான மார்க்கெட்டிங் ஸ்ட்ராட்டஜி தான். டஸ்டரின் ரீபேட்ஜ் என்ற பெயரை மடைமாற்ற இது உதவும். மேலும், மேலே கூறியது போல புதிய கார் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கவும் இது உதவும். எனினும் காரை எப்படி வடிவமைத்திருக்கிறது மற்றும் என்னென்ன அம்சங்களைக் கொடுத்திருக்கிறது என்பதே விற்பனைக்கு உதவும். இந்த மார்க்கெட்டி ஸ்ட்ராடஜி மூலம் கிடைக்கும் கவனத்தை தக்கவைத்துக் கொள்ளும் திறன் டெக்டானுக்கு இருக்கிறதா என்பது சில வாரங்களில் தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications