இந்த கார் நிறுவனம் இந்தியாவை விட்டு காலி பண்ண வேண்டியதுதான்னு சொன்னாங்க! ஷோரூம்களில் கூட்டத்தை சேர்க்குது!
நிசான் மோட்டார் (Nissan Motor) நிறுவனம் இந்தியாவில் கார்கள் விற்பனையில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாகவே போராடி வருகிறது. இந்த நிலையில், கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் எத்தனை கார்களை நிசான் விற்பனை செய்துள்ளது என்பது குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. அதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ஜப்பானில் இருந்து வந்து இந்திய மார்க்கெட்டில் பல கார் நிறுவனங்கள் வெற்றிப் பெற்றுள்ளன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், சுஸுகி (Suzuki), டொயோட்டா (Toyota) நிறுவனங்களை சொல்லலாம். அதேநேரம், வெற்றி பெறாமல் போன நிறுவனங்களுக்கும் உதாரணமாக டட்சன் (Dutsun) நிறுவனத்தை சொல்லலாம்.

இவற்றிற்கு இடையில், இந்திய கார்கள் மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க தத்தளித்துவரும் நிறுவனம் நிசான் ஆகும். இந்தியாவில் நிசான் கார்களின் விற்பனை அதிகரிக்கிறது என்பது உண்மைதான்; இருப்பினும் அந்த வளர்ச்சியின் வேகம் மிகவும் மெதுவாகவே உள்ளது. இருப்பினும், கடந்த ஏப்ரல் மாதத்தில் நிசான் கார்களின் விற்பனை வழக்கத்தை விட சற்று அதிகமாக சுமார் 75% அதிகரித்துள்ளது.
அதாவது, 2025 ஏப்ரலை காட்டிலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 75% அதிகமான கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் நிசான் மோட்டார் இந்தியா நிறுவனத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 388 ஆகும்.

மற்ற கார் நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கைகளுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை குறைவாக தெரிந்தாலும், நிசானின் இந்த விற்பனை எண்ணிக்கை 2025 ஏப்ரலை விட சுமார் 75% அதிகமாகும். அப்படியென்றால், அந்த மாதத்தில் எவ்வளவு குறைவான எண்ணிக்கையில் கார்களை நிசான் விற்பனை செய்திருக்கும் என்று யோசித்து பாருங்கள்.
கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ள 5,388 கார்களில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை 3 ஆயிரத்து 203 யூனிட்கள் ஆகும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை மீதி 2 ஆயிரத்து 185 யூனிட்கள் ஆகும். அதாவது, இந்தியாவில் நிசான் செயல்படுவதற்கு அது வெளிநாடுகளுக்கு அனுப்பும் மேட்-இன்-இந்தியா கார்கள் முக்கிய காரணியாக விளங்குகின்றன.
நிசான் கார்களின் விற்பனை கடந்த மாதத்தில் அதிகரித்து இருப்பதில், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிசான் கிராவைட் (Gravite) முக்கிய பங்காற்றியுள்ளது. நிசானின் புதிய 7-சீட்டர் எம்பிவி (MPV) வகை காரான கிராவைட், ரெனால்ட் (Renault) நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, ரெனால்ட்டின் எம்பிவி காரான டிரைபரும், நிசான் கிராவைட்டும் ஒன்றே ஆகும்.
விற்பனையில் அடைந்துள்ள வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள நிசான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சவுரப் வட்சா, "புதிய 2026-27ஆம் நிதியாண்டின் நேர்மறையான தொடக்கத்தை கண்டு நாங்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளோம். முற்றிலும்-புதிய நிசான் கிராவைட் கார் மாடலுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைத்துள்ள அமோக வரவேற்பானது, இந்திய வாடிக்கையாளர்களின் மாறிவரும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவே எங்கள் தயாரிப்புகளை வழங்குவோம் என்ற எங்களின் அணுகுமுறையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக உருவெடுக்க கடந்த பல வருடங்களாகவே நிசான் முயற்சித்து வருகிறது. ஆனால், ஒன்றும் நடந்த பாடில்லை. புதிய கிராவைட் கார் அறிமுகத்தினால் ஆவது இந்த நிலை மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். கடந்த ஏப்ரல் மாதத்தில் 5,388 கார்களை மட்டுமே விற்பனை செய்திருப்பினும், விற்பனையில் 75% வளர்ச்சி என்பது நிசான் மோட்டார் இந்தியா நிறுவனத்திற்கு பெரிதும் ஊக்கமளிக்கக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications