நிசான் கம்பெனியை இப்போதுதான் மக்கள் கண்டுக்கொள்ள ஆரம்பித்து இருக்காங்க! விற்பனை 129% அதிகரிப்பு!
நிசான் நிறுவனம் இந்தியாவில் நடந்து முடிந்த கடந்த 2026 ஜூன் மாதத்தில் மொத்தம் 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. மற்ற கார் நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கைகள் உடன் ஒப்பிடுகையில் நிசானின் இந்த எண்ணிக்கை குறைவாக தெரிந்தாலும், 2025 ஜூன் மாதத்தை காட்டிலும் இந்தியாவில் நிசான் கார்களின் விற்பனை சுமார் 129% அதிகரித்துள்ளது.
ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான நிசான், இந்திய கார்கள் சந்தையில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாக போராடி வருகிறது. இருப்பினும், இந்த நிறுவனத்தால் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலையில், கடந்த மாத நிசான் கார்கள் விற்பனை எண்ணிக்கை நம்மை சற்று ஆச்சிரியப்படுத்தி உள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் நிசானில் இருந்து மொத்தம் 3 ஆயிரத்து 6 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2025ஆம் ஆண்டின் இதே ஜூன் மாதத்தை காட்டிலும் சுமார் 129% அதிகமாகும். ஏனெனில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெறும் யூனிட் கார்களை மட்டுமே நிசான் நிறுவனம் விற்பனை செய்து இருந்தது.
இந்த எண்ணிக்கைகள் யாவும், இந்திய சந்தையில் நிசான் விற்பனை செய்த எண்ணிக்கைகள் ஆகும். இந்த ஜப்பானிய நிறுவனம் இந்தியாவை கார்கள் விற்பனை செய்யும் மார்க்கெட்டாக பார்ப்பதை விட, கார்களை உற்பத்தி செய்யும் மையமாகவே பார்க்கிறது. ஏனெனில், அந்த அளவிற்கு உள்நாட்டு விற்பனையை காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான நிசான் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கடந்த ஜூன் மாதத்திலும், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட நிசான் கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாக, 5 ஆயிரத்து 340 நிசான் கார்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் பார்த்தால், ஒட்டுமொத்தமாக 8 ஆயிரத்து 346 கார்களை நிசான் மோட்டார் இந்தியா (NMI) நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் விற்பனை செய்துள்ளது.
இந்த எண்ணிக்கை ஆனது 2025 ஜூன் மாதத்தை காட்டிலும் 16% அதிகமாகும். இந்த அதிகரிப்புக்கு இந்தியாவில் நிசான் கார்களின் விற்பனை அதிகரித்து இருப்பது முக்கிய காரணம் ஆகும். தொடர்ந்து நான்காவது மாதமாக இந்தியாவில் கடந்த 2025ஆம் ஆண்டை காட்டிலும் நிசான் கார்களின் விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து நிசான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சவுரப் வட்சா கூறுகையில், நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவது, எங்களது தயாரிப்புகள் மீது வாடிக்கையாளர்கள் வைக்கும் நம்பிக்கை அதிகரித்து வருவதையும், மார்க்கெட்டிற்கான யுக்திகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்பதையும் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த ஜூன் மாதத்தில் நிசான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை அதிகரித்து இருப்பது, இந்திய சந்தையில் நிசான் கார்களின் விற்பனை மேம்பட்டு வருவதையும், வெளிநாடுகளில் மேட்-இன்-இந்தியா நிசான் கார்களுக்கான மதிப்பையும் காட்டுகிறது. இந்திய சந்தையில் நிசான் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சிக்கு மேக்னைட் கார் மிக முக்கியமானது ஆகும்.
கடந்த 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட மேக்னைட் ஆனது இந்தியாவில் நிசான் நிறுவனத்திற்கு இரண்டாவது இன்னிங்ஸை ஏற்படுத்தி தந்தது என சொன்னால் அதில் சந்தேகம் இல்லை. அதனை, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய நிசான் கிராவைட் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்தியாவில் நிசான் நிறுவனம் அடுத்ததாக டெக்டன் காரை வருகிற ஜூலை 9ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications