30 நிமிஷத்துல 8000 புக்கிங்.. 1,450 கிமீ ரேஞ்சு கொண்ட கார்.. அசத்தலான வசதிகளுடன் வெளியானது!
உயர்தர வசதிகள் கொண்ட புத்தம் புதிய N8 எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியிட்டுள்ளது நிஸான். ஆனால் இந்தியாவில் இல்லை, சீனாவில். அந்நாட்டைச் சேர்ந்த டாங்ஃபெங் என்ற ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறது நிஸான். சீனாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்களுக்கும், ஹைபிரிட் கார்களுக்கும் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. எனவே, மேம்பட்ட வசதிகளுடன் புதிதாக NX8 என்ற எஸ்யூவி மாடலை, எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் பவர்ட்ரெயின்களுடன் வெளியிட்டுள்ளது நிஸான்.
4,870 மிமீ நீளம், 1,920 மிமீ அகலம், 1,680 மிமீ உயரம் மற்றும் 2,917 மிமீ நீள வீல்பேஸுடன் மிகவும் விசாலமான இடவசதி கொண்ட எலெக்ட்ரிக் காராக இருக்கிறது நிஸான் NX8. ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவில் பிரம்மாண்டமான காராக இருக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனரை விட உயரத்தைத் தவர மற்ற அனைத்து அளவுகளிலும் இந்த NX8 எஸ்யூவியே பெரிதாக இருக்கிறது. வீல்பேஸ் 167 மிமீ வரை நீளமாக இருக்கிறது.

பார்த்தவுடனேயே எலெக்ட்ரிக் கார் என்றும் சொல்லும் வகையில் மினிமலிஸ்டிக்கான டிசைனைக் கொண்டுள்ளது இந்தப் புதிய எஸ்யூவி. குறிப்பாக முன்பக்கம் குளோஸ்டு ஆஃப் கிரில், காரின் முழு அகலத்திற்கும் நீளும் DRL செட்டப், ஸ்பிளிட் முகப்பு விளக்கு செட்டப், ஸ்லீக்கான பின்பக்க OLED விளக்குகள், ஏரோடைனமிக் அம்சங்களுக்காக ஸ்மூத்தான பாடி பேனல்கள், ஃப்ளஷ் ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள் ஆகிய டிசைன் அம்சங்களை புதிய NX8 எஸ்யூவி கார் மாடலில் வழங்கியிருக்கிறது நிஸான்.
நல்ல இடவதியுடன், அனைத்து விதமான சொகுசு வசதிகளையும் கொண்டிருக்கும் வகையிலேயே இந்த எலெக்ட்ரிக் காரின் உட்புறத்தை நிஸான் வடிவமைத்திருப்பதை பார்த்தவுடனேயே தெரிந்து கொள்ள முடிகிறது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்காக இரண்டு 15.6 இன்ச் டிஸ்பிளேக்கள், ஒரு 10.25 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், குவால்கம் ஸ்னாப்டிராகன் 8295ச சிப்செட், பெரிய ஆக்மென்டட் ரியாலிட்டி ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, பின்பக்க இருக்கைகளுக்கும் எண்டர்டெயின்மென்ட் ஸ்கிரீன் ஆகிய அம்சங்களை இந்த எலெக்ட்ரிக் கார் மாடலில் கொடுத்துள்ளது நிஸான்.

எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் என இரண்டு வகையான பவர்ட்ரெயின்களையும் இந்தக் காரில் நிஸான் கொடுத்திருப்பதாக மேலே குறிப்பிட்டிருந்தேன். முழுமையான பேட்டரி எலெக்ட்ரிக் மாடலில், 288 hp பவர் மற்றும் 335 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்புடன், 81 kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது 650 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டுள்ளது.
463 kW வரையிலான அதிவேக சார்ஜிங் திறனைக் கொண்டிருக்கும் இந்தக் காரின் பேட்டரியை 10% முதல் 80% வரை வெறும் 12 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது நிஸான். ஹைபிரிட் என்பது ரேஞ்சு எக்ஸ்டென்டர் ஹைபிரிட்டாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன், 335 hp பவரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதில் இருக்கும் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டு நேரடியாக காரை இயக்க முடியாது. மாறாக அதனை ஜெனரேட்டர் போலப் பயன்படுத்தி, காரில் இருக்கும் பேட்டரியை சார்ஜ் செய்து, அந்த பேட்டரியின் மூலமே எலெக்ட்ரிக் காராக இந்தக் கார் இயக்கப்படும். பெட்ரோல் இன்ஜினின் உதவியில்லாமல், முழுவதுமாக பேட்டரியில் மட்டும் 310 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொண்டுள்ளது இந்த நிஸான் NX8 ஹைபிரிட் கார்.
சீனாவில் இந்த எலெக்ட்ரிக் காரின் டெலிவரியை ஏற்கனவே தொடங்கிவிட்டது அந்நிறுவனம், ஹைபிரிட் காரின் டெலிவரி விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காருக்கு அங்கே ஹெவி டிமாண்டு வேறு. முன்பதிவு தொடங்கிய 30 நிமிடங்களிலேயே சுமார் 8,000 வாடிக்கையாளர்கள் இதனை முன்பதிவு செய்திருக்கிறார்கள். இந்திய மதிப்பிற்கு சுமார் ரூ.20 லட்சம் முதல் 27 லட்சம் வரையிலான விலையில் சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது நிஸான் NX8.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறைவான விலையில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பதை விட அதிக வசதிகள் கொண்ட காராக இந்த NX8-ம் இருக்கிறது. இந்தியாவில் இதேபோல ரூ.20 லட்சம் மதிப்பிற்கு இத்தனை வசதிகள் கொண்ட கார நாம் எதிர்பார்க்க முடியாது. இந்தியாவில் குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் விலையையாவது இந்தக் கார் கொண்டிருக்கும்.


Click it and Unblock the Notifications








