ஹூண்டாய் கிரெட்டாவுக்கு தலைவலி.. வருகிறது புதிய எஸ்யூவி.. கம்மி விலையில தான் வெளியிட போறாங்களாம்
நீண்ட காலத்திற்குப் பின்பு நிஸானிடமிருந்து முறையான ஒரு எஸ்யூவி காரைப் பார்க்கப் போகிறோம். இந்தாண்டு தொடக்கத்தில் தான் புதிதாக கிராவைட் என்ற சப்-காம்பேக்ட் எம்பிவி காரை இந்தியாவில் வெளியிட்டது அந்நிறுவனம். அதனைத் தொடர்ந்து புதிதாக டெக்டான் என்ற மிட்-சைஸ் எஸ்யூவியை அடுத்த மாதம் வெளியிடவுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தப் புதிய எஸ்யூவியை நிஸான் வெளியிடும் நிலையில், தற்போது இறுதிக்கட்ட சோதனையை நடத்தப்பட்டு வருகிறது.
டெக்டானும் நிஸானின் சொந்தத் தயாரிப்பா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கிராவைட்டைப் போலவே டெக்டானும் ரெனோ எஸ்யூவியின் ரீபேட்ஜ்டு மாடல் தான். கிராவைட் எம்பிவியானது, ரெனோவின் டிரைபர் காரின் ரீபேட்ஜ்டு மாடலாக இருக்கும் நிலையில், டெக்டான் எஸ்யூவியானது ரெனோவின் பிரபலமான டஸ்டரின் ரீபேட்ஜ்டு மாடலாக வெளியாகவுள்ளது.

ரீபேட்ஜ் தான் என்றாலும் அப்படியே டஸ்டரைப் போலவே புதிய நிஸான் டெக்டான் இருக்காது. தங்களுடைய எஸ்யூவிக்கு தனித்துவமான அடையாளத்தைக் கொடுக்க நிறையவே மெனக்கெட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை நாம் பார்த்த ஸ்பைஷாட் புகைப்படங்கள் மற்றும் நிஸான் வெளியிட்ட சில டீஸர் புகைப்படங்களும் அதற்கு ஆதரவளிக்கும் வகையிலேயே உள்ளன.
கிராவைட்டுடன் பிப்ரவரி மாதமே புதிய டெக்டானையும் வெளியிட நிஸான் திட்டமிட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களினால் அந்தத் திட்டம் நடைபெறாமல், ஆறு மாதங்களுக்குப் பின்பு ஜூலை 9ம் தேதியன்று வெளியாகவுள்ளது. ஆனால் இதுவும் நல்லது தான். கிராவைட்டுடன் சேராமல், டெக்டானுக்கென்று தனி லைம்லைட் கிடைக்கும். இது வாடிக்கையாளர்களிடம் இந்தக் காரைக் கொண்டு சேர்க்கவும் உதவியாக இருக்கும்.

டஸ்டர் எஸ்யூவியானது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்யும் வகையிலேயே இருக்கும் நிலையில், புதிய டெக்டான் எஸ்யூவியும் வாடிக்கையாளர்களைக் கவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெக்டான் எஸ்யூவி நிஸானின் மாதாந்திர விற்பனையை அதிகரிப்பதோடு, நிஸான் பிராண்டு இமேஜையும் இந்திய வாடிக்கையாளர்களிடையே உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரீபேட்ஜ் என்பதால் டிசைனைத் தவிர மற்ற அம்சங்களில் டஸ்டரில் இருந்து டெக்டான் வேறுபட்டிருக்கும் என எதிர்பார்க்க முடியாது. அந்த வகையில் டஸ்டரில் கொடுக்கப்பட்டிருக்கும் அதே அம்சங்களையே டெக்டான் எஸ்யூவியிலும் நாம் எதிர்பார்க்கலாம். டஸ்டரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரண்டு இன்ஜின் தேர்வுகளைக் கொடுத்துள்ளது ரெனோ.
அதே இன்ஜின் தேர்வுகளே டெக்டானிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் டஸ்டரில் அதிக மைலேஜ் மற்றும் பவரைக் கொடுக்கும் வகையில் புதிதாக 1.8 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் பவர்ட்ரெயின் ஒன்றையும் ரெனோ கொடுக்கும் நிலையில், அதற்கு அடுத்து வரும் அப்டேட்டில் நிஸான் டெக்டான் எஸ்யூவியிலும் அதே ஹைபிரிட் பவர்ட்ரெயினை நாம் எதிர்பார்க்கலாம்.
மிகவும் போட்டி நிறைந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் நுழைகிறது நிஸான் டெக்டான். சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவை விட போட்டி நிறைந்ததாக மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவு மாறி வருவதாகத் தெரிகிறது. இந்தப் பிரிவில் தான் தற்போது ஹூண்டாய் கிரெட்டா, மாருதி விக்டோரிஸ், கியா செல்டோஸ், மாருதி கிராண்டு விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வாகன் டைகூன், ஹோண்டா எலிவேட், டாடா சியரா மற்றும் ரெனோ டஸ்டர் ஆகிய அனைத்து கார்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் அனைத்து பிரிவுகளையும் சேர்த்து மொத்தமாகவே 9 செடான் மாடல்கள் மட்டுமே தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கின்றன. ஆனால், மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் மட்டும் டெக்டான் இல்லாமல் சுமார் 10 மாடல்கள் விற்பனையில் இருக்கின்றன. இதனைத் தவிர்த்து சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்கள், 4.5 மீட்டருக்கு மேலான அளவிலான எஸ்யூவிக்கள் எனக் குறைந்தபட்சம் 20 எஸ்யூவிக்களாவது இன்னும் கூடுதலாக இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிஸானின் புதிய எஸ்யூவி வாடிக்கையாளர்களைக் கவரும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இந்தியாவில் நிஸான் ஒரு வெற்றிகரமான ஆட்டோமொபைல் நிறுவனம் என்று சொல்ல முடியாது. பல்வேறு காரணங்களினால் நிஸான் பிராண்டுடன் வாடிக்கையாளர்கள் கனெக்ட் ஆகவில்லை என்றே தோன்றுகிறது. அதிகபட்சமாக இந்தியாவில் ஒரே மாதத்தில் நிஸான் விற்பனை அளவு 7,000 யூனிட்டுகள் தான். அதுவும் பத்து ஆண்டுகளுக்கு முன்னர்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இருக்கும் ஒரு ஆட்டோமொபைல் நிறுவனம் மாதத்திற்கு 10,000 யூனிட்டுகள் என்ற விற்பனை அளவைக் கூட எட்டாதது பெரிய ஆச்சரியம் தான். டெக்டான் சிறப்பான ஒரு எஸ்யூவியாகவே இருக்கும். ஆனால் வாடிக்கையாளர்களை அது எந்தளவிற்கு வாங்கும் முடிவிற்குத் தள்ளும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications