ஜூலை 9ஆம் தேதிக்கு பிறகு ஒட்டுமொத்த இந்தியாவும் வாங்க போகும் நிசான் கார்! புதிய படம் வெளிவந்தது!
நிசான் நிறுவனம் அதன் புதிய டெக்டன் என்கிற மிட்-சைஸ் SUV காரை பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வருகிற ஜூலை 9ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த நிலையில், புதிய டெக்டன் காரின் பின்பக்க தோற்றத்தை வெளிக்காட்டும் புதிய படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
நிசான் நிறுவனம் இந்தியாவின் SUV கார் மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாகவே போராடி வருகிறது. அதன்படி நிசானின் அடுத்த முயற்சியாக புதிய டெக்டன் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மிக விரைவில் வருகிற ஜூலை 9ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள டெக்டன் கார் தொடர்ந்து இந்திய சாலைகளில் தீவிர சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த சோதனை ஓட்டங்களின் போது எடுக்கப்பட்ட படங்களும், வீடியோக்களும் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது 'பையாஜிகாடி' என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள புகைப்படம் ஒன்றில், நிசான் டெக்டன் காரின் பின்பக்க பகுதி எந்தவொரு மறைப்பும் இல்லாமல் அப்பட்டமாக காட்சியளித்துள்ளது.
டெக்டன் காரின் டிசைன் ஸ்கெட்ச்கள் மற்றும் டீசர்களை நிசான் நிறுவனம் முன்னதாக ஒருமுறை வெளியிட்டு இருந்தது. அப்போது காரின் பின்பகுதியாக அவற்றில் குறிப்பிடப்பட்டு இருந்த அதே தோற்றத்தில் டெக்டனின் பின்பகுதி இந்த ஸ்பை படத்தில் காட்சியளிக்கிறது. அதாவது, டெக்டனின் டிசைனில் அப்போது இருந்த அதே நிலைப்பாட்டில் தான் இப்போதும் நிசான் உள்ளது என்பது தெளிவாகிறது.

பொதுவாக, சோதனை ஓட்டங்களில் காரை முழுவதுமாக மறைத்த நிலையில் தான் ஓட்டிப் பார்ப்பார்கள். ஏனெனில், காரின் தோற்றம் அறிமுகத்திற்கு முன்னதாக யாருக்கும் தெரிந்துவிட கூடாது என்றே எந்தவொரு கார் நிறுவனமும் விரும்பும். ஆனால், தற்போது இணையத்தில் கசிந்துள்ள படத்தில் கார் எந்தவொரு மறைப்பும் இல்லாமல் இருப்பதற்கு காரணம், இந்த படம் ஆனது டெக்டனின் விளம்பர வீடியோவிற்கான படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.
காரின் அறிமுக தேதி நெருங்கி வருவதால், டெக்டனின் விளம்பர வீடியோக்களை தொலைக்காட்சிகளிலும், மொபைல் போன்களிலும் இனி அடிக்கடி பார்க்கலாம். பல்வேறு கலர் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தப்படும் டெக்டனை நிசான் நிறுவனம் அடர் நீல நிறத்தில் விளம்பரப்படுத்துகிறது. தற்போது வெளியாகி இருக்கும் படத்தில், டெக்டனின் பின்பக்கத்தில் காரின் முழு அகலத்திற்கு LED லைட் பார் வழங்கப்பட்டு உள்ளதை பார்க்க முடிகிறது.
இந்த லைட் பார் ஆனது இரு டெயில்லைட்களையும் இணைக்கும் வகையில், டெயில்கேட்டின் மீது வழங்கப்பட்டுள்ளது. இதே செட்-அப் தான் சமீபத்தில் வெளியிடப்பட்டு இருந்த டீசரிலும் டெக்டனின் பின்பக்கத்தில் பார்க்க முடிந்தது. பின்புற கதவின் மத்தியில் நிசான் லோகோ வழங்கப்பட்டு இருக்க, அதற்கு கீழாக 'TEKTON' என்கிற எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.
டெக்டனின் பின்பக்கத்தில் மேற்கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா மற்றும் பின்பக்க பம்பர் உடன் ஒருங்கிணைக்கப்பட்ட சில்வர் நிறத்திலான ஸ்கிட் பிளேட்டையும் பார்க்க முடிகிறது. பின்பக்க பம்பரின் கார்னர்களில் வழங்கப்பட்டுள்ள ஒளி எதிரொலிப்பான்கள் இந்த காருக்கு மேலும் முரட்டுத்தனமான லுக்கை வழங்கியுள்ளன. ஒட்டுமொத்தத்தில் டெக்டன் நன்கு நிமிர்ந்த தோற்றத்தை பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ரெனால்ட் டஸ்டர் காரின் அதே பிளாட்ஃபாரத்தில் தான் நிசான் டெக்டனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டெக்டன் முற்றிலும் புதுமையான வெளிப்புற தோற்றத்தை பெற்று வருகிறது. அதற்கு, தற்போது வெளியாகியுள்ள இந்த காரின் பின்பக்கத்தின் தோற்றத்தின் படம் தான் சாட்சியாகும். இதேபோல், டெக்டன் காருக்கு உள்ளேயும் பல புதிய அம்சங்களை எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications