மாருதி விக்டோரிஸுக்குப் போட்டியாக நாளை வெளியாகிறது புதிய எஸ்யூவி.. என்ன கார் அது?
நிஸானிடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு கார் என்றால் அது டெக்டான் தான். கடந்தாண்டு தான் இந்தப் பெயர் கொண்ட புதிய காரை வெளியிடவிருப்பதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வாடிக்கையாளர்கள் அதிகம் குமியும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் பிரிவில் இந்தப் புதிய எஸ்யூவியை நிஸான் வெளியிடவுள்ளது.
ஹூண்டாய் கிரெட்டா, மாருதி விக்டோரிஸ் உள்ளிட்ட கார்களுக்குப் போட்டியாக இந்தக் கார் இருக்கும். இதுவே டெக்டான் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. நாளை (ஜூலை 9) இந்தப் புதிய எஸ்யூவியை நிஸான் வெளியிடவிருக்கும் நிலையில், இந்தப் புதிய காரில் வாடிக்கையாளர்களாக நாம் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதனை இந்தக் கட்டுரையில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அடிப்படையில் இது சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் வெளியான ரெனோவின் டஸ்டர் எஸ்யூவியை அடிப்படையாகக் கொண்ட கார் தான். டஸ்டரில் இருக்கும் அம்சங்களே பெரும்பான்மையாக இந்த டெக்டானிலும் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். எனினும் நிஸானுக்கு இந்தியா சந்தையில் மீண்டும் அழுத்தமாகக் கால் பதிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்த டெக்டான் இருக்கிறது.
எனவே, டஸ்டரின் ரீபேட்ஜ் என்று சொல்ல வகையில் புதிய டெக்டானை வடிவமைக்க வேண்டும் என்பதில் நிஸான் மெனக்கெட்டு வருவதாகத் தெரிகிறது. சர்வதேச அளவில் நிஸானின் பெயர் சொல்லும் கார் என்றால் அது பேட்ரோல் (Patrol) எஸ்யூவி தான். 8 பேர் அமரும் வகையிலான, நல்ல இடவசதி கொண்ட, மிகவும் சொகுசான ஒரு எஸ்யூவி பேட்ரோல்.

அந்தப் பேட்ரோலின் மினி வெர்ஷன் என சொல்லும் வகையில் டெக்டான் இருக்கும் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறது நிஸான். அதாவது பேட்ரோல் பின்னணியிலும், டெக்டான் நிழலாக முன்னணியிலும் இருக்கும் வகையிலான ஒரு டீசர் புகைப்படத்தை சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தது அந்நிறுவனம். இதுவும் புதிய டெக்டான் எஸ்யூவி மீதான ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
மேலே கூறியது போல டஸ்டர் எஸ்யூவியில் தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் (100 hp பவர்) மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் (163 hp பவர்) இன்ஜின் தேர்வுகளே புதிய நிஸான் டெக்டானிலும் இருக்கும். கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் எந்த மாற்றமும் இருக்காது. அடுத்த சில மாதங்களில் டஸ்டரில் கொடுக்கப்படவிருக்கும் 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைபிரிட் பவர்ட்ரெயின் தேர்வையும் டெக்டானில் நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் இப்போது இல்லை.
டஸ்டரில் கொடுக்கப்பட்டிருப்பதை விட சில கூடுதல் அம்சங்களை டெக்டானில் நிஸான் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் டிசைனும் டஸ்டரில் இருந்து முற்றிலும் வேறுபட்டே இருக்கும் எனத் தெரிகிறது. இதன் மூலமே ஏன் டஸ்டருக்கு இருந்து டெக்டான் வேறுபட்டது என்பதை நிஸான் காட்ட முயலும், காட்டவும் முடியும்.
இவற்றையும் மீறி வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் புதிய அம்சங்களை டெக்டான் கொண்டிருக்குமா என்பது தான் இப்போதைய கேள்வி. அப்படி இருக்கும் பட்சத்தில் நிஸானின் ஸ்பெஷல் தயாரிப்பாக டெக்டான் பார்க்கப்படும். இல்லையென்றால் ரீபேட்ஜாகவே தெரியும். புதிய டெக்டான் எப்படிப் பட்டதாக இருக்கும் என்பது நாளை தெரிந்துவிடும்.
ரெனோவின் டிரைபரை அடிப்படையாகக் கொண்டு தான் இந்தாண்டு தொடக்கத்தில் நிஸான் கிராவைட் வெளியானது. ஆனால், டிரைபரை விட சற்று குறைவான விலையில் கிராவைட்டை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தியது நிஸான். அதேபோல், டஸ்டரை விட கொஞ்சம் குறைவான விலையை புதிய டெக்டான் கொண்டிருக்குமா என்பது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
டஸ்டர் எஸ்யூவியானது 10.49 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மிகவும் விலை குறைவான மிட்-சைஸ் எஸ்யூவிக்களில் ஒன்றாக இதனை நாம் கூறலாம். டெக்டான் இதனை விடக் குறைவான விலையில் வெளியாகுமா என்பதை நாம் நாளை (ஜூலை 9) தெரிந்து கொள்ளலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பல ஆண்டுகளுக்குப் பிறகு நிஸானின் கார் வெளியீடு ஒன்று அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக மாறியிருக்கிறது. இதனை நிஸான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் அடுத்தடுத்து இந்திய சந்தையில் மேலேற முடியும். எனினும் தற்போதைக்கு இந்தியாவில் நிஸான் ரெனோவையே அதிகம் சார்ந்திருக்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் வகையில் நிஸானின் சொந்தத் தயாரிப்புகளாக புதிய வெளியீடுகள் எதுவும் தென்படவில்லை. டெக்டான் எப்படியிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications