விடிஞ்சா கல்யாணத்த வெச்சுகிட்டு நைட் பொண்ண காணோம்னு சொன்ன மாதிரி இருக்கு! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (New-gen Renault Duster) கார், வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரில் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன.
அவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகியவை ஆகும். இதை தொடர்ந்து மூன்றாவதாக 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் தீபாவளி பண்டிகை சமயத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆரம்பத்தில் இந்த 3 இன்ஜின் ஆப்ஷன்களுமே நிஸான் டெக்டான் (Nissan Tekton) காரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது வெளியாகி வரும் தகவல்கள் வேறு விதமாக உள்ளன. நிஸான் டெக்டான் நாளை (ஜூலை 9) அறிமுகம் செய்யப்படவுள்ள மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார் ஆகும். ரெனால்ட் மற்றும் நிஸான் ஆகிய 2 நிறுவனங்களும் கூட்டணியில் இருந்து வருகின்றன. இதன் காரணமாக ரெனால்ட் நிறுவனத்தின் கார்களின் அடிப்படையில் நிஸான் நிறுவனத்தின் கார்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன.
சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நிஸான் க்ராவைட் (Nissan Gravite) இதற்கு ஒரு உதாரணம் ஆகும். ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) காரின் அடிப்படையில்தான் நிஸான் க்ராவைட் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது ரெனால்ட் ட்ரைபர் காரின் இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் வசதிகள் போன்றவை அப்படியோ நிஸான் க்ராவைட் காரிலும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வரிசையில் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் அடிப்படையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள ஒரு கார்தான் நிஸான் டெக்டான். ஆரம்பத்தில் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனாகதான் நிஸான் டெக்டான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகி வரும் தகவல்கள் வேறு விதமாக உள்ளன. முக்கியமாக இன்ஜின் ஆப்ஷன்களில் நாம் நினைத்ததற்கு மாறாக நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
அதாவது முதலில் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் 3 இன்ஜின் ஆப்ஷன்களும் அப்படியே நிஸான் டெக்டான் காரிலும் வழங்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகி வரும் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் மட்டுமே நிஸான் டெக்டான் காரில் வழங்கப்படும் என தெரிகிறது.
புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன், நிஸான் டெக்டான் காரில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என கூறப்படுகிறது. அதேபோல் வசதிகளிலும் ஒரு சில மாற்றங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த தகவல்கள் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இந்த சந்தேகங்களுக்கு நாளை நடைபெறவுள்ள நிஸான் டெக்டான் காரின் அறிமுக நிகழ்ச்சியில் நமக்கு பதில் கிடைக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தற்போது வெளியாகியுள்ள தகவல் உண்மை என்றால், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) கார்களின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் மாடல்களுக்கு எதிராக புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் மட்டுமே நேரடியாக போட்டியிடும். நிஸான் டெக்டான் டர்போ பெட்ரோல் எஸ்யூவி காராக மட்டுமே இருக்கும்.


Click it and Unblock the Notifications