டஸ்டருக்குப் போட்டியாக வெளியாகும் தரமான இன்னொரு எஸ்யூவி.. இதோட டிசைன் தான் ஹைலைட்டே!
நீண்ட கால எதிர்பார்ப்பிற்குப் பின்பு இந்தியாவில் தங்களது எஸ்யூவி வரிசயை விரிவாக்கம் செய்யவுள்ளது நிஸான் (Nissan). கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் வாடிக்கையாளர்கள் வாங்கும் வகையில் மேக்னைட் (Magnite) என்ற ஒரேயொரு சப்-காம்பேக்ட் எஸ்யூவி காரை மட்டுமே நிஸான் விற்பனை செய்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், இரண்டாவது காராக கிராவைட்டை (Gravite) விற்பனைக்குக் கொண்டு வந்தது.
தற்போது அதனைத் தொடர்ந்து இந்தியாவில் தற்போது மூன்றாவது காராக டெக்டான் (Tekton) என்ற மிட்-சைஸ் எஸ்யூவி காரை விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது. இதனை ஜூலை 9ம் தேதியன்று இந்தியாவில் வெளியிடவுள்ளது நிஸான். இந்தாண்டு பிப்ரவரி மாதமே இந்த டெக்டான் கார் வெளியாக வேண்டியது. ஆனால் பல்வேறு காரணங்களினால் இதன் வெளியீடு தள்ளிப்போய் இப்போது ஜூலை 9ம் தேதிக்கு வந்து நிற்கிறது.

டெக்டான் என்பது வேறெதுவும் இல்லை, ரெனோ டஸ்டரை (Renault Duster) அடிப்படையாகக் கொண்ட ஒரு மிட்-சைஸ் எஸ்யூவி தான். ரெனோவின் டிரைப்ர எம்பிவியை அடிப்படையாகக் கொண்டு எப்படி கிராவைட் என்ற எம்பிவி காரை நிஸான் உருவாக்கி வெளியிட்டதோ, அதே போலவே டஸ்டரை அடிப்படையாகக் கொண்டு இந்த டெக்டான் எஸ்யூவியை உருவாக்கியிருக்கிறது.
டஸ்டரை அடிப்படையாகக் கொண்ட கார் தான் என்றாலும், டெக்டானுக்கென்று தனி லுக் மற்றும் தனித்துவமான கேரக்டர் வேண்டும் என்பதற்காக சற்று கூடுதலாகவே உழைத்து வருகிறது நிஸான். குறிப்பாக டிசைனில் ரெனோ கூடுதல் முரட்டுத்தனத்தைக் காட்டும் நிலையில், தங்களுடைய கார் ப்ரீமியமான உணர்வைத் தர வேண்டும் என நிஸான் நினைக்கிறது. இதனால் பெரிய கிரில், கூடுதல் குரோம் பயன்பாடு, குறைவான கருப்பு நிற எலமென்ட்கள் என விகிதங்களை மாற்றியிருக்கிறது.

வெளிப்புறம் புதிய டிசைன், புதிய 18 இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்படுவதைப் போலவே, காரின் உட்புறமும் டஸ்டரில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் வகையில் புதிய வடிவிலான டேஷ்போர்டை நிஸான் கொடுக்கலாம் எனத் தெரிகிறது. 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், பவர்டு மற்றும் வென்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்கள், பனோரமிக் சன்ரூஃப், பவர்டு டெயில்கேட் உள்ளிட்ட வசதிகளை டெக்டானில் எதிர்பார்க்கலாம்.
பாதுகாப்பிற்காக டஸ்டர் எஸ்யூவியில் கொடுக்கப்பட்டிருக்கும் லெவல் 2 ADAS பாதுகாப்பு அம்சங்கள், 360 டிகிரி கேமரா, ஆட்டோமேட்டிக் முகப்பு விளக்குகள் மற்றும் வைப்பர்கள் ஆகியவை அப்படியே டெக்டான் காரிலும் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. மெக்கானிக்கலாக நாம் தனியாக சொல்ல வேண்டியதில்லை. டஸ்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளே புதிய நிஸான் டெக்டானிலும் இருக்கும்.
டஸ்டர் எஸ்யூவியில் பண்டிகை காலத்தையொட்டி 1.8 லிட்டர் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார், பேட்டரி கொண்ட ஹைபிரிட் பவர்ட்ரெயினை கொடுக்கவிருப்பதாக ரெனோ தெரிவித்திருக்கிறது. டஸ்டரைத் தொடர்ந்து நிஸானின் புதிதாக வெளியிடப்படவிருக்கும் டெக்டானிலும் அதே ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொடுக்கப்படும் என்ற கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே போட்டி நிறைந்ததாக இருக்கும் இந்திய மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் டெக்டான் 15வது காராக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீண்ட காலத்திற்குப் பின்பு வெளியான மேம்படுத்தப்பட்ட டஸ்டர் எஸ்யூவிக்கு வாடிக்கையாளர்கள் நல்ல வரவேற்பையே கொடுத்து வருகிறது. அனைத்து தரப்பிலிருந்து பாஸிட்டிவ்வான விமர்சனங்களையே பெற்று வருகிறது ரெனோ டஸ்டர். அதே அளவில் இல்லையென்றாலும், குறிப்பிடத்தக்க அளவு வெற்றியை நிஸான் இந்த டெக்டான் எஸ்யூவியும் பெறும் என்றே நாங்கள் நினைக்கிறோம். என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications