ரெனால்ட் கம்பெனி காருக்கு சரியான போட்டி வந்தாச்சு... ஜெராக்ஸ் அடிச்ச மாதிரி எல்லாமே இருக்கு!
நிசான் நிறுவனத்தில் இருந்து புதியதாக டெக்டான் என்கிற SUV கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இது அப்படியே ரெனால்ட் டஸ்டர் காரின் ஜெராக்ஸ் ஆகும். கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய டஸ்டரை அடிப்படையாக கொண்டதாக புதிய டெக்டான் விளங்குகிறது.
இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இணைந்து ஒரு SUV காரை உருவாக்கி அதனை தங்களது பிராண்டில் சில மாற்றங்களுடன் ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன. ரெனால்ட்டும், நிசானும் கூட்டணியில் உள்ளன. இதனாலேயே, பாரத் NCAP கிராஷ் டெஸ்ட்டில் புதிய டஸ்டருக்கு முழு 5-ஸ்டார் ரேட்டிங் வழங்கப்பட்ட நிலையில், புதிய டெக்டான் காரை ஓட்டிப் பார்க்காமலேயே 5-ஸ்டார் ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

இன்னும் சொல்லப்போனால், டஸ்டரின் அதே CMF-B பிளாட்ஃபாரத்தில் தான் புதிய டெக்டானும் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நீங்கள் சற்று உற்றுக் கவனித்தீர்கள் என்றால், இந்த இரு கார்களுக்கும் இடையே சில வேறுப்பாடுகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
ஹிமாலயன் மலைதொடரின் டச்
டெக்டான் காரின் பெயரே முதலில் ஹிமாலயன் மலைதொடர்களை சுட்டிக்காட்டும் விதமாக சூட்டப்பட்டதே ஆகும். டஸ்டருக்கு என்று ஏற்கனவே ஒரு ரசிகர் கூட்டம் உள்ளதால், டெக்டானுக்கான மார்க்கெட்டை நிசான் நிறுவனம் அடிமட்டத்தில் இருந்து உருவாக்கி வருகிறது. பெயிண்ட்டின் நிறத்தில் இருந்து, பிரீமியம் டச் வரையில் எல்லாமே ஹிமாலயன் மலைதொடரை குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. அதேநேரம், டஸ்டரிலும் ஹிமாலயன் மலைதொடர் லோகோ வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பிரீமியம் தரத்தில் வெளிப்புறம்
புதிய நிசான் டெக்டான் கார் ஆனது டஸ்டர் காரை விடவும் பிரீமியம் தரத்திலான வெளிப்புற தோற்றத்தை பெற்றுள்ளது. டெக்டானை பார்க்கும்போது, உலகளவில் பிரபலமான நிசான் பேட்ரோல் கார் தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவிற்கு ஷார்ப்பான LED ஹெட்லைட்கள், இணைக்கப்பட்ட LED DRL-கள், டெக்டான் பேட்ஜ் மற்றும் முன்பக்க க்ரில்லின் மீது சிவப்பு நிறத்திலான கோடு வழங்கப்பட்டுள்ளது.
புத்துணர்ச்சியான கேபின்
டஸ்டர் மற்றும் டெக்டான் என இரண்டும் ஒரே டிசைன் தத்துவத்தில் உருவாக்கப்பட்டு இருப்பினும், டஸ்டரின் கேபின் அட்வென்ச்சரான லுக்கில் உள்ளது. அதுவே, புதிய டெக்டான் காரின் கேபின் கூடுதல் பிரீமியம் தரத்தில் காட்சியளிக்கிறது. அதற்கேற்ப, பர்பிள் மற்றும் பிரகாசமான பழுப்பு நிறத்தில் இந்த காரின் கேபின் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சன்ரூஃப் விளக்கு
டஸ்டரை மிஞ்சும் அளவிற்கு டெக்டான் காரினுள் விளக்குகளை நிசான் நிறுவனம் வழங்கியுள்ளது. காரினுள் பனோரமிக் சன்ரூஃப்-இல் கூட சொகுசு கார்களில் வழங்கப்படுவதை போன்று விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இது இரவு நேரத்தில் காருக்குள் இருந்து பார்த்தால் நிலா போன்றதான எஃபெக்ட்டை தருகிறது.
ஹைப்ரீட் ஆப்ஷன் இல்லை
ரெனால்ட் நிறுவனம் அதன் புதிய டஸ்டர் காரை கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்த போதே இந்த காரில் புதியதாக ஹைப்ரீட் என்ஜின் ஆப்ஷன் தீபாவளி சமயத்தில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், டெக்டான் காரில் ஹைப்ரீட் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக நிசான் நிறுவனம் இதுவரையில் தெரிவிக்கவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் சில வேறுப்பாடுகளை பார்த்தாலும், ரெனால்ட் டஸ்டரும், நிசான் டெக்டானும் கிட்டத்தட்ட ஒன்று என்றே சொல்ல வேண்டும். வெளிப்புற மற்றும் உட்புற தோற்றத்தில் டெக்டான் சற்று பிரீமியம் தரத்தில் காட்சியளிக்கிறது அவ்வளவுதான். மற்றப்படி, டஸ்டரில் ஹைப்ரீட் பவர்டிரெயின் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டால், அது டெக்டானுக்கும் வழங்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications