நிஸான் அர்பன் எஸ்யூவி மற்றும் டெரானோ ஹைபிரிட் கார்கள் அறிமுகம்!

சீனாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்களைத் தொடர்ந்து ஹைபிரிட் கார்களுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது. அதுவும் ஸ்ட்ராங் ஹைபிரிட் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் என்றால் வாடிக்கையாளர்கள் பாய்ந்து வந்து வாங்குகிறார்களாம். எனவே புதிய ஹைபிரிட் கார் மாடல்களை அங்கே வெளியிடுவதில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

அப்படி சீனாவில் ஹைபிரிட் கார்களை அதிகம் விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டும் முக்கிய நிறுவனமாக உள்ளது ஜப்பானைச் சேர்ந்த நிஸான். நேற்று (ஏப்ரல் 24) சீனாவின் தலைநகரில் தொடங்கி நடைபெற்று வரும் பெய்ஜிங் ஆட்டோ ஷோவில் இரண்டு புதிய பிளக்-இன் ஹைபிரிட் கார்களின் கான்செப்ட் வடிவங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது நிஸான். இந்த கான்செப்ட் கார்களைப் பற்றித் தான் இங்கே நாம் பார்க்கப் போகிறோம்.

Nissan Terrano Concept

அர்பன் எஸ்யூவி (Urban SUV) மற்றும் டெரானோ (Terrano) ஆகிய இரண்டு பிளக்-இன் ஹைபிரிட் கான்செப்ட் கார் மாடல்களையே தற்போது சீனாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது நிஸான். அர்பன் எஸ்யூவியை நகரப் பயன்பாட்டை மையப்படுத்திய ஒரு கார் மாடலாகவும், டெரானோவை ஒரு முழுமையான ஆஃப்-ரோடு எஸ்யூவி மாடலாகவும் உருவாக்கியிருக்கிறது அந்நிறுவனம்.

டெரானோ என்ற பெயரைக் கேட்டவுடன் இந்தியாவில நிஸான் விற்பனை செய்த ஒரு கார் மாடல் நினைவுக்கு வரலாம். 2013 முதல் 2020ம் ஆண்டு வரை டெரானோ என்ற பெயரில், அப்போது விற்பனையில் இருந்த ரெனோ டஸ்டரை அடிப்படையாகக் கொண்ட மிட்-சைஸ் எஸ்யூவி ஒன்றை நிஸான் இந்தியாவில் விற்பனை செய்து வந்தது. அதற்கும், இப்போது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் டெரானோவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது முற்றிலும் புதிய கார் மாடல்.

Nissan Urban SUV Concept

நிஸான் அர்பன் எஸ்யூவி கான்செப்ட்:

பார்த்தவுடன் விலையைக் கூட கேட்காமல் வாங்கத் தோன்றும் அளவிற்கு ஸ்டைலான ஒரு கார் மாடலாக இருக்கிறது நிஸானின் புதிய அர்பன் எஸ்யூவி. இது கான்செப்ட் வடிவம் என்பதால் ஃப்யூச்சரிஸ்டிக்கான டிசைன்களை அள்ளித் தெளித்திருக்கிறது நிஸான். காரின் முன்பக்கம் ஒளிரும் நிஸான் லோகோ கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு இரண்டு பக்கமும் காரின் ஓரங்களில் LED முகப்பு விளக்குகளும், DRL-களும் அடங்கிய செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹைபிரிட் என்றாலும் காரை இயக்குவது எலெக்ட்ரிக் மோட்டராகவே இருக்கும் எனத் தெரிகிறது. எனவே கிரில் இல்லாமல் எலெக்ட்ரிக் கார் போன்ற முகப்புப் பக்கத்தையே இந்த அர்பன் எஸ்யூவி கார் கொண்டிருக்கிறது. கருப்பு நிறத்தில் கொஞ்சம் ரக்கடான பம்பர்களும், அதிலேயே ஏர் கர்டெயின்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பக்கவாட்டில் பிளாக்டு அவுட் பில்லர்களும், கருப்பு நிறத்தில் ரூஃபும் கொடுக்கப்பட்டுள்ளது. அவுட்சைடு ரியர் வியூ மிரர்களுக்குப் பதிலாக புதிய காரில் கேமராவைக் கொடுத்துள்ளது நிஸான்.

காரின் பின்பக்கம் பாடி பேனல்கள் மற்றும் டெய்ல்கேட்டுடன் இன்டகிரேட் செய்தது போலான பின்பக்க விளக்கு செட்டப் கனெக்டடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு கீழேயே சிவப்பு நிறத்தில் ஒளிரும் வகையில் நிஸான் என்ற எழுத்துக்கள் லோகோவுக்குப் பதிலாக வேர்டுமார்க்காகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கீழ் ஸ்மார்ட்டான பின்பக்க பம்பர் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.

நிஸான் டெரானோ கான்செப்ட்:

பாக்ஸியாக, மிரட்டும் தோரணையிலான டிசைன் கொண்ட ஒரு ஆஃப்-ரோடு எஸ்யூவியாக டெரானோவை வடிவமைத்திருக்கிறது நிஸான். காரின் முன்பக்கம் செக்மெண்டட் முகப்பு விளக்குகள், நிஸான் லெட்டரிங், மஸ்குலரான பம்பர் மற்றும் பானெட் ஸ்கூப்புடன் மிகவும் ரக்கடாகக் காட்சியளிக்கிறது புதிய டெரானோ எஸ்யூவி. பக்கவாட்டில் போதுமான அளவில் கருப்பு நிறத்தில் கிளாடிங் கொடுக்கப்பட்டிருப்பதோடு, அது ஸ்கொயர்டு ஆஃப் செய்யப்பட்ட டிசைனில் இருக்கிறது. இது காரின் முரட்டுத்தனத்தை மேலும் கூட்டிக் காட்டுகிறது.

ஆஃப்-ரோடுக்கு மட்டுமே பயன்படுத்தும் வகையிலான முரட்டுத்தனமான பெரிய டயர்களுடன், காரின் பின்பக்கம் டெயில்கேட்டில் ஸ்பேர் வீல் வைக்கும் வகையிலான டிசைனையும் புதிய டெரானோவிற்கு நிஸான் கொடுத்திருக்கிறது. ஸ்பேர் வீல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய பெரிய பீம் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பீமைச் சுற்றி நான்கு ஓரங்களுக்கு மேலாகவும், கீழாகவும் பின்பக்க விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இத்துடன் பின்பக்கமும் மஸ்குலரான பம்பர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு கார்களிலுமே பிளக்-இன் ஹைபிரிட் பவர்ட்ரெயினை பயன்படுத்தப்படவிருப்பதை நிஸான் உறுதி செய்துள்ளது. ஆனால் கான்செப்ட் வடிவங்களே அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால், பவர்ட்ரெயின் உட்பட இரண்டு கார்களின் எந்தவிதமான தகவல்களையும் அந்நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை. அடுத்த ஓராண்டிற்குள் இந்த இரண்டு மாடல்களின் தயாரிப்பு நிலை வடிவங்களை அறிமுகப்படுத்தவிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இரண்டும் நிஸான் லைன்-அப்பில் சிறப்பான கார்களாகவே இருக்கும். ஆனால், இவை இந்தியாவில் வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு தான். தற்போதைக்கு இந்தியாவில் எரிபொருள் கார் மாடல்களை மட்டுமே நிஸான் திட்டமிட்டிருக்கிறது. அதுவும் ரெனோவின் கார்களை அடிப்படையாகக் கொண்ட மாடல்களையே அதிகளவில் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Saturday, April 25, 2026, 11:26 [IST]
English summary
Nissan urban suv and terrano concept phev cars unveiled in china
மேலும்... #nissan #hybrid car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+