பரனூர் டோல்கேட்டில் தடையற்ற சுங்க வசூல்... இனி வாகனங்கள் நிற்காமல் செல்லலாம்!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு பெரிய நல்ல செய்தி வந்துள்ளது. செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் தமிழகத்திலேயே முதல்முறையாக வாகனங்கள் நிற்காமல் சுங்கக் கட்டணம் செலுத்தும் தடையற்ற கட்டண வசூல் முறை இன்று முதல் (அக்டோபர் 1, 2026) நடைமுறைக்கு வந்துள்ளது.
வழக்கமான சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் குறிப்பிட்ட தடத்தில் சென்று, ஃபாஸ்டேக் கணக்கை சரிபார்த்து பணத்தை எடுக்கும் வரை காத்திருக்க வேண்டும். குறிப்பாக வார இறுதி நாட்கள், பண்டிகைக் காலங்களில் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பது வழக்கமாக இருந்தது. குறிப்பாக, பரனூர் சுங்கச்சாவடி வார இறுதி மற்றும் பண்டிகை நாட்களில் மிக நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்று சுங்கக்கட்டணம் செலுத்தும் நிலை இருந்தது. இனி அந்த நிலை முற்றிலுமாக மாற்றப்படுகிறது. தற்போதைய புதிய முறையில் வாகனங்கள் சுங்கச்சாவடியை கடக்கும்போது நிற்காமல் தொடர்ந்து செல்ல முடியும்.

பரனூர் சுங்கச்சாவடியில் இருந்த பாரம்பரிய கட்டண வசூல் மையங்களுக்கு பதிலாக உயரமான கண்காணிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வாகனங்களை அடையாளம் காணும் கருவிகள், ரேடார் கருவிகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி வாகன பதிவு எண் கண்டறியும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வாகனம் அந்தப் பகுதியை கடக்கும் போது, அதில் பொருத்தப்பட்டுள்ள பாஸ்டேக் அடையாளம் கண்டறியப்படும். அதே நேரத்தில் கேமரா வாகனத்தின் பதிவு எண்ணையும் தானாக பதிவு செய்யும். இந்த இரு தகவல்களும் இணைக்கப்பட்டு, வாகன வகைக்கு தக்கவாறு சுங்கக் கட்டணம் வாகனத்துடன் இணைக்கப்பட்டுள்ள பாஸ்டேக் கணக்கிலிருந்து தானாக வசூலிக்கப்படும்.
இதனால் ஓட்டுநர்கள் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்காக வாகனத்தை நிறுத்தவோ, பணம் செலுத்தும் மையத்தில் காத்திருக்கவோ தேவையில்லை. பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் அல்லது பாஸ்டேக் கணக்கில் போதுமான பணம் இல்லாத வாகனங்களையும் கேமராக்கள் கண்காணிக்கும்.
பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், விதிமுறைகளுக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும். எனவே, பரனூர் வழியாக செல்லும் வாகனங்களில் பாஸ்டேக் சரியாக செயல்படுகிறதா, போதிய தொகை இருப்பில் உள்ளதா என்பதை முன்கூட்டியே உறுதி செய்து பயணிப்பது அவசியம்.
பரனூர் சுங்கச்சாவடி தினசரி சுமார் 46,500 வாகனங்களை கையாளும் நிலையில், இந்த புதிய வசதி வாகன ஓட்டிகளுக்கும், இந்த சாலையில் பயணிப்பவர்களுக்கும் வரப்பிரசாதமாக அமையும். குறிப்பாக சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே தினசரி பயணம் செய்வோருக்கு நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
செங்கல்ப்பட்டு, பரனூர் சுங்கச்சாவடியில் சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ள இந்த தடைகள் இல்லா சுங்கக்கட்டண வசூல் வழித்தட திட்டத்தை தொடர்ந்து, சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள நெமிலி மற்றும் சென்னசமுத்திரம் சுங்கச்சாவடிகளிலும், சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளிலும் விரைவில் இத்தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பரனூர் சுங்கச்சாவடி மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இந்த Multi-Lane Free Flow (MLFF) எனப்படும் தடையில்லா சுங்கக் கட்டண வசூல் முறையை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வரும் 2027 மார்ச் மாதத்திற்குள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் உள்ள சுங்கச் சாவடிகளில் இந்த முறையை கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில் கூறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications


