பெட்ரோல், டீசல் கார்கள் வாங்குவதை வெகுவாக நிறுத்திக் கொண்ட மக்கள்! ஒரே மாதத்தில் நடந்த மாற்றம்!
இந்தியாவில் பெட்ரோல், டீசல் எரிபொருளுக்கு மாற்றாக CNG, ஹைப்ரீட் மற்றும் எலெக்ட்ரிக்கில் இயங்கக்கூடிய வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்றால், மேற்கூறப்பட்ட மூன்று எரிபொருட்களில் இயங்கக்கூடிய பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கை மட்டுமே ஒட்டுமொத்த பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கையில் சுமார் 40%-க்கும் மேல் கடந்த ஜூன் மாதத்தில் பதிவாகி உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெயின் அளவை குறைக்கும் முயற்சியாக மாற்று எரிபொருட்களில் இயங்கக்கூடிய வாகனங்களை மத்திய அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. இதன் மூலமாக சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது. இதன் காரணமாகவே, கடந்த சில வருடங்களில் CNG, ஹைப்ரீட் மற்றும் எலெக்ட்ரிக் கார் மாடல்களின் எண்ணிக்கையும், அவற்றின் விற்பனையும் வெகுவாக அதிகரித்துள்ளது.

எந்த அளவிற்கு என்றால், கடந்த 2026 ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஒட்டுமொத்த பயணிகள் வாகனங்களில் சுமார் 40 சதவீதத்திற்கும் மேல் CNG, ஹைப்ரீட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகும். அதாவது, மீதி 60% மட்டுமே பெட்ரோல், டீசல் பயணிகள் வாகனங்கள் ஆகும்.
பயணிகள் வாகனங்கள் எனும்போது, பயணிகளை அழைத்துச் செல்லக்கூடிய கார்கள் மற்றும் சிறிய ரக வேன்கள் அதில் அடங்குகின்றன. இதில், பெரும்பான்மையானவை கார்கள் ஆகும். ஆதலால், பெட்ரோல், டீசல் கார்களுக்கு இணையாக, CNG, ஹைப்ரீட் மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் கடந்த ஜூன் மாதத்தில் 40% விற்பனை செய்யப்பட்டுள்ளன என சொல்லலாம்.

இந்த 40 சதவீதம் ஆனது, கடந்த 2025ஆம் ஆண்டின் இதே ஜூன் மாதத்தில் வெறும் 33.3% ஆக மட்டுமே இருந்தது. கடந்த மே மாதத்திலும் இது 38.02% ஆகவே பதிவாகியது. ஆனால், கடந்த ஜூன் மாதத்தில் 40% என்கிற மைல்கல்லை தாண்டி 40.2% ஆக பதிவாகி உள்ளது. இதில், CNG வாகனங்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.
கடந்த மாதத்தில், மொத்தத்தில் விற்பனையான பயணிகள் வாகனங்களில் 24.3% CNG வாகனங்கள் ஆகும். மீதி 8.3% ஹைப்ரீட் வாகனங்களாகவும், 7.8% எலெக்ட்ரிக் வாகனங்களாகவும் உள்ளன. இந்த விற்பனை சதவீதங்களில் வணிக பயன்பாட்டிற்கான கமர்ஷியல் CNG, ஹைப்ரீட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எலெக்ட்ரிக் பயணிகள் வாகனங்கள் மட்டும் கடந்த ஜூன் மாதத்தில் 31 ஆயிரத்து 823 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒரு மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட அதிகப்பட்ச எலெக்ட்ரிக் பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கை இதுவாகும். ஒட்டுமொத்தமாக கடந்த மாதத்தில் 4 லட்சத்து 10 ஆயிரத்து 853 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இது கடந்த 2025 ஜூன் மாதத்தை காட்டிலும் சுமார் 28.6% அதிகமாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஒரு மாதத்தில் பெட்ரோல், டீசல் பயணிகள் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை 60 சதவீதத்திற்கும் கீழ் குறைந்திருப்பது இதுவே முதல்முறையாகும். இதில் இருந்து இந்தியாவில் கார் வாங்குபவர்கள் அதிக எரிபொருள் திறன் மற்றும் குறைவான இயக்க செலவை வழங்கும் CNG, ஹைப்ரீட் மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் பக்கம் நகர்ந்து வருவதை அறிய முடிகிறது.
பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக கொண்டுவரப்படும் இவை மூன்றும் வெவ்வேறான எரிபொருட்களில் இயங்கக்கூடியவை ஆகும். CNG வாகனங்கள் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கக் கூடியவைகளாகவும், ஹைப்ரீட் வாகனங்கள் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் என இரண்டிலும் இயங்கக் கூடியவைகளாகவும் உள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்கள் முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கக்கூடியவை ஆகும். மேற்கூறப்பட்ட புள்ளி விபரங்கள் அனைத்தும் FADA வெளியிட்டவை ஆகும்.


Click it and Unblock the Notifications