மணிக்கு 311 கிமீ வேகத்தில் செல்லும் காரை இந்தியாவில் அசால்ட்டாக வெளியிட்டுள்ள நிறுவனம்
இந்தியாவில் 2026ம் ஆண்டிற்கான மேம்படுத்தப்பட்ட 911 GT3 காரை வெளியிட்டுள்ளது போர்ஷே (Porsche). இது சில ஆண்டுகளக்கு முன்பு சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட 911 GT3 காரின் 992.2 வெர்ஷன் தான், தற்போது இது இந்தியாவிலும் வெளியாகியுள்ளது. 3.33 கோடி ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த சூப்பர் காரை இந்தியாவில் வெளியிட்டுள்ளது போர்ஷே. இந்தக் காருக்கான முன்பதிவையும் தற்போது அந்நிறுவனம் தொடங்கியிருக்கிறது.
போர்ஷேயின் லைன்-அப்பில் நேச்சுரலி அஸ்பிரேட்டட் (NA) இன்ஜினைக் கொண்டிருக்கும் ஒரு சில கார்களில் இந்த 911 GT3 992.2 வெர்ஷனும் ஒன்று. இந்தக் காரில் 4.0 லிட்டர் NA ப்யூர் பெட்ரோல் பிளாட் சிக்ஸ் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 9,000 rpm-ல் 510 hp பவரையும், 450 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

சர்வதேச அளவில் இந்த இன்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளைக் கொடுத்து வருகிறது போர்ஷே. ஆனால் இந்தியாவில் இந்த காரை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் மட்டுமே போர்ஷே விற்பனை செய்யவுள்ளது. இது ரியர் வீல் டிரைவ் மட்டுமல்ல ரியர் ஸ்டீயர் காரும் கூட. ஆம், இதன் ஸ்டீயரிங் வீல் முன்பக்க சக்கரங்களை இயக்காது, பின்பக்க சக்கரங்களையே இயக்கும்.
இந்தப் பவர்ட்ரெயினுடன் மிகச் சிறப்பான பெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்தக்கூடிய கார்களில் ஒன்றாக இந்த போர்ஷே 911 GT3 இருக்கிறது. இந்தக் கார் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை 3.4 நொடிகளில் எட்டும் திறனைக் கொண்டிருக்கும் நிலையில், அதிகபட்சமாக மணிக்கு 311 கிமீ வேகத்தில் செல்லும் திறனையும் கொண்டுள்ளது.

911 கரேராவின் ஸ்போர்ட்டியான டிசைன் மற்றும் பிற அம்சங்களை இந்த 911 GT3 காரிலும் போர்ஷே கொடுத்துள்ளது. காரின் முன்பக்கம் 20 இன்ச் வீல்களும், பின்பக்கம் 21 இன்ச் வீல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஸ்போர்ட்டியான டயர்களையும் போர்ஷே பயன்படுத்தியிருக்கிறது. இரட்டை எக்சாஸ்ட் டிப்கள் காரின் பின்பக்கம் நடுவில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
காரின் உட்புறம் வழக்கமான கியர் நாப், டேஷ்போர்டின் மேலே அனலாக் ஸ்டாப் வாட்ச் மற்றும் தனித்துவனமான அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் ட்ரிம் பீஸ்கள் கவனம் ஈர்க்கின்றன. குறிப்பாக ப்ரீமியமான மற்றும் ஸ்போர்ட்டியான காருக்கான ஃபீலை இவை கொடுக்கின்றன. இந்தக் காரில் ரியர் சீட்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெர்ஃபாமன்ஸுக்கு முக்கியத்துவனம் கொடுக்கப்பட்டிருக்கும் 911 GT3 992.2 வெர்ஷன் காரில் இரண்டு சீட்கள் மட்டுமே.
இதுதவிர 10.9 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.6 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே, 8 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்டு சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் பேடு, டூயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், 4 வே பவர்டு ஸ்போர்ட் சீட் ஆகிய அம்சங்களையும் இந்தக் காரில் போர்ஷே கொடுத்துள்ளது.
இந்த 911 GT3-யுடன் விங்லெஸ் டூரிங் எக்டீரியர் பேக்கேஜை இந்திய வாடிக்கையாளர்களுக்கு போர்ஷே வழங்கவில்லை. மாறாக, எடையைக் குறைக்கும் வகையில் வெய்சாக் பேக்கேஜையே வழங்குகிறது. இந்த பேக்கேஜை 43.9 லட்சம் ரூபாய் என்ற விலையில் தனியாக வாடிக்கையாளர்கள் வாங்கலாம். இந்த பேக்கேஜின் கீழ் கார்பன் ஃபைபர் பானெட், ரூஃப், மற்றும் வெளிப்புற ட்ரிம் பீஸ்கள் கொடுக்கப்படுவதுடன், எடை குறைவான டோர்கள் மற்றும் 6 பாயிண்ட் சீட்பெல்ட்களையும் கொண்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் போர்ஷே விற்பனை செய்யும் நான்கு 911 மாடல்களில் ஒன்றாக இந்த GT3 இருக்கிறது. மேலும் இரண்டாவது விலையுயர்ந்த போர்ஷே 911 மாடல் இது தான். பெர்ஃபாமன்ஸை விரும்பும் பணக்கார வாடிக்கையாளர்களுக்கான தேர்வாக இந்த போர்ஷே 911 GT3 இருக்கும்.


Click it and Unblock the Notifications