ஓரங்கட்டேய்.. 1,156 எச்பி பவருடன் போர்ஷே கயென் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்!
ஜெர்மனியை சேர்ந்த சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான போர்ஷே, தனது புகழ்பெற்ற கயென் எஸ்யூவியின் மின்சார மாடலை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. டைகன் மற்றும் மசான் எலக்ட்ரிக் மாடல்களுக்குப் பிறகு, போர்ஷே இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரும் மூன்றாவது மின்சார கார் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய எலெக்ட்ரிக் கார் மாடலானது கயென் எலக்ட்ரிக் மற்றும் கயென் டர்போ எலக்ட்ரிக் என இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இதில், கயென் எலக்ட்ரிக் மாடலுக்கு ரூ.1.77 கோடி எக்ஸ்ஷோரூம் விலையாகவும், அதிக செயல்திறன் கொண்ட டர்போ எலக்ட்ரிக் பதிப்பின் விலை ரூ.2.28 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடம்பர எலக்ட்ரிக் காரின் டெலிவிரி கொடுக்கும் பணிகளும் தற்போது இந்தியாவில் தொடங்கி உள்ளன.

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் மேம்படுத்தப்பட்ட 800V பிரீமியம் பிளாட்ஃபார்ம் எலக்ட்ரிக் (PPE) என்ற பிரத்யேக கட்டமைப்பின் அடிப்படையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. காரின் அடிப்புறத்தில் 113kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் மூலம் நான்கு சக்கரங்களுக்கும் சக்தியை வழங்கும் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் இதில் ஸ்டாண்டர்டாக கிடைக்கிறது.
அடிப்படை எலக்ட்ரிக் வேரியண்ட் 408 எச்பி பவரையும் 750 என்எம் டார்க் திறனையும் வழங்கக்கூடியது. லான்ச் கன்ட்ரோல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது இதன் திறன் 442 எச்பி பவர் மற்றும் 835 என்எம் டார்க் என்ற அளவிற்கு அதிகரிக்கும். அதிக விலை கொண்ட டர்போ பதிப்பில் லான்ச் கன்ட்ரோல் பயன்படுத்தினால் அதிகபட்சமாக 1,156 எச்பி பவரையும், 1,500 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்குகிறது. இதன் மூலம் டர்போ மாடல் வெறும் 2.5 வினாடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிமீ வேகத்தை எட்டிப்பிடித்து விடும் வல்லமை கொண்டது.

அதிவேகமாக முந்தி செல்லவும், மலைப் பாதைகளில் எவ்விதத் தயக்கமுமின்றி சொகுசாகப் பயணிக்கவும் இந்த அபாரமான டார்க் திறன் பெருமளவில் உதவும். பேட்டரியில் முழுமையான சார்ஜில் அடிப்படை வேரியண்ட் 642 கிலோமீட்டர் தூரமும், டர்போ வேரியண்ட் 623 கிலோமீட்டர் தூரமும் (WLTP) பயணிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
சார்ஜிங் வேகத்தைப் பொறுத்தவரை, 390kW டிசி அதிவேக சார்ஜிங் வசதியை இந்த காரின் பேட்டரி சப்போர்ட் செய்யும். ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தும்போது, காரின் பேட்டரியை 10 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் வரை வெறும் 16 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். நீண்ட தூர நெடுஞ்சாலைப் பயணங்களின் போது இது நிச்சயம் பயன்தரும் விஷயமாகவும், கால விரயத்தை தவிர்க்கும் அம்சமாகவும் இருக்கும்.
வெளிப்புற வடிவமைப்பில் மசான் எலக்ட்ரிக் காரின் சாயலை இதில் காண முடிகிறது. மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், சற்றே சரிந்த ஸ்போர்ட்டியான கூரை அமைப்பு மற்றும் காரின் பின்பக்கம் முழுவதும் நீளும் எல்இடி லைட் பார் ஆகியவை கயென் எலக்ட்ரிக் மாடலுக்கு அட்டகாசமான தோற்றத்தை அளிக்கின்றன. காரின் முன்பக்க பானட் கீழ் 90 லிட்டர் கொள்ளளவு கொண்ட கூடுதல் ஸ்டோரேஜ் அமைப்பும் (Frunk) கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கார் 4,985 மிமீ நீளமும் 3,023 மிமீ வீல்பேஸ் நீளமும் கொண்டுள்ளதால், காரின் உட்புறத்தில் பயணிகள் தாராளமாக அமர்ந்து பயணிக்கும் வகையில் விசாலமான லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம் வசதிகள் உள்ளன. 781 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளதால் குடும்பத்துடன் நீண்ட தூர பயணங்கள் செல்லும்போது அதிக அளவிலான லக்கேஜ்களை சுலபமாக எடுத்துச் செல்ல முடியும்.
உட்புற கேபினில் 14.5 அங்குலத்தில் வளைந்த ஓஎல்இடி தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் அமைப்பு, 14.25 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே மற்றும் முன்பக்கப் பயணியருக்கான 14.9 அங்குல பொழுதுபோக்குத் திரை என்று தொழில்நுட்ப வசதிகள் நிறைந்துள்ளன. மேலும், 4 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ஓட்டுநருக்கு உதவும் அடாஸ் (ADAS) பாதுகாப்பு அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்தியச் சாலைகளுக்கு ஏற்றவாறு சொகுசான ரைடிங் அனுபவத்தையும், ஜெர்மன் பொறியியலின் உச்சகட்ட வேகத்தையும் எதிர்பார்க்கும் சொகுசு கார் பிரியர்களுக்கு இந்த புதிய போர்ஷே கயென் எலக்ட்ரிக் ஒரு வலுவான தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications


