ரூ.1.90 கோடியில் புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் டுவென்டி எடிஷன் அறிமுகம்: சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஆடம்பர எஸ்யூவி ரகத்தில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை வைத்துள்ள லேண்ட் ரோவர் நிறுவனம், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மாடலின் 20வது ஆண்டு நிறைவை ஒட்டி சிறப்பு பதிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய மாடல் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் டுவென்டி எடிஷன் என்ற பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த லிமிடெட் எடிஷன் எஸ்யூவிக்கு ரூ.1.90 கோடி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டு உலக அளவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மாடல், கடந்த 20 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற சொகுசு எஸ்யூவி மாடலாக உள்ளது. இந்த சிறப்பான தருணத்தை கொண்டாடும் வகையில், 2004ஆம் ஆண்டு டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட ரேஞ்ச் ஸ்டார்மர் கான்செப்ட் மாடலின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய டுவென்டி எடிஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த லிமிடெட் எடிஷன் மாடலில் வெளிப்புற தோற்றம் மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றப்பட்டுள்ளது. சான்டோரினி பிளாக் மற்றும் ஓஸ்டுனி பேர்ல் வொயிட் என்ற பிரத்யேக கருப்பு-வெள்ளை ஆகிய நிறங்களுடன், ரேஞ்ச் ஸ்டார்மர் கான்செப்ட் காரை நினைவூட்டும் வகையில் சாங்குயினெல்லோ ஆரஞ்ச் என்ற பிரத்யேக வண்ணத் தேர்வும் வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் விருப்பத்தின்பேரில் காரின் கூரை மற்றும் கண்ணாடிகளுக்கு கருப்பு வண்ணத்திலான சிறப்பு பேக் தேர்வு செய்து கொள்ளலாம். இதன் மூலம் காரின் தோற்றம் கவர்ச்சிகரமாக இருக்கும். காரின் குறிப்பிட்ட வெளிப்புறப் பகுதிகளில் டுவென்டி என்ற பிரத்யேக எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும், 23 அங்குல அளவிலான ஸ்பார்க்கிள் சில்வர் என்ற வண்ணத்தில் அலாய் வீல்கள் காரின் கம்பீரத்தை கூட்டுகின்றன. மேலும், பளபளப்பு பூச்சுடன் கூடிய கருப்பு நிற அலாய் வீல்களும் கிடைக்கின்றன.
காரின் உள்பகுதியில் கதவுகளின் கீழ் பகுதியில் டுவென்டி எடிஷன் என ஒளிரும் பிராண்டிங் செய்யப்பட்டுள்ளது. சென்டர் கன்சோலில் டுவென்டி என்ற பிராண்டு எழுத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விலை உயர்ந்த வேரியண்ட்டில் வழங்கப்படும் எபோனி வின்ட்சர் என்ற சொகுசு இருக்கைகள் இருக்கைகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இவை நீண்ட தூரப் பயணங்களிலும் மிகச் சிறந்த சொகுசு மற்றும் சாய்வு வசதியை வழங்கும்.
கேபினின் மேல் பகுதி கருப்பு நிற விசேஷ அப்ஹோல்ஸ்ட்ரியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேட்டிக் ஏர் சஸ்பென்ஷன் போன்ற உயர் தொழில்நுட்ப வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த மாடலில் மிக சக்திவாய்ந்த 4.4 லிட்டர் டுவின்-டர்போ வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது மைல்ட்-ஹைபிரிட் சிஸ்டம் தொழில்நுட்பத்துடன் இணைந்து இயங்கக்கூடியது. இந்த ஆற்றல்மிக்க எஞ்சின் அதிகபட்சமாக 537 எச்பி பவரையும், 750 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதனுடன் 8-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் நான்கு சக்கரங்களுக்கும் சக்தி அனுப்பப்படுகிறது.
இந்த பிரம்மாண்டமான எஸ்யூவி வெறும் 4.5 விநாடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து 100 கி.மீ வேகத்தை எட்டிவிடும். அனைத்து சக்கரங்களுக்கும் திரும்பும் திறன் வழங்கும் ஆல்-வீல் ஸ்டீயரிங் மற்றும் ஆஃப்ரோடு பயன்பாட்டுக்கான டெரெய்ன் ரெஸ்பான்ஸ் கட்டுப்பாட்டு அம்சங்களுடன் கரடுமுரடான சாலைகளிலும் மிகச் சிறந்த கையாளுதலை வழங்கும்.
புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் டுவென்டி எடிஷன் மாடலுக்கான டெலிவிரிப் பணிகள் அக்டோபர் மாதம் முதல் தொடங்க உள்ளன. இந்தியாவில் சொகுசு எஸ்யூவி பிரியர்களுக்கு இந்த சிறப்புப் பதிப்பு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications