பெட்ரோல் காரில் சிஎன்ஜி கிட் பொருத்துவதற்கு முன்பு மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்!
மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் (West Asia War) காரணமாக இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை (Petrol Price) ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தமிழக தலைநகர் சென்னையில் கடந்த மே 14ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை வெறும் 100.80 ரூபாயாக மட்டுமே இருந்தது.
ஆனால் அதே சென்னையில் இன்று (ஜூன் 8) ஒரு லிட்டர் பெட்ரோல் 107.88 ரூபாய்க்கு விற்பனையாகி கொண்டுள்ளது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 7.08 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் கார்களை பயன்படுத்தி கொண்டிருப்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பொருளாதார ரீதியில் மிகப்பெரிய நெருக்கடிகளை அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே தங்கள் பெட்ரோல் கார்களை சிஎன்ஜி கார்களாக மாற்றலாமா? என பலரும் யோசித்து கொண்டுள்ளனர். இதற்கு 2 மிக முக்கியமான காரணங்கள் உள்ளன. பெட்ரோல் உடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி விலை (CNG Price) குறைவு என்பது முதல் காரணம்.
சென்னையில் இன்று ஒரு கிலோ சிஎன்ஜியின் விலை 96 ரூபாய் மட்டுமே. அதாவது பெட்ரோல் உடன் ஒப்பிடும்போது 11.88 ரூபாய் குறைவு. எனவே சிஎன்ஜியை நீண்ட காலம் பயன்படுத்தும்போது மிகப்பெரிய தொகையை சேமிக்க முடியும். இதுதவிர பெட்ரோல் மூலம் இயங்கும் கார்களை விட சிஎன்ஜி மூலம் இயங்கும் கார்கள் அதிக மைலேஜ் (Mileage) தரும்.

நீங்கள் ஒரு கிலோவிற்கே சுமார் 8-9 கிலோ மீட்டர் அதிக மைலேஜை எதிர்பார்க்கலாம். அதாவது ஒரு லிட்டர் பெட்ரோலில் உங்கள் கார் 20 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது என்றால், அதுவே சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது 28-29 கிலோ மீட்டர் மைலேஜ் வரை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனவேதான் தங்கள் பெட்ரோல் காரை சிஎன்ஜி காராக மாற்றி கொள்ளலாமா? என பலரும் யோசித்து கொண்டுள்ளனர். கரூரை சேர்ந்த பாலமுருகனும் இதே சந்தேகத்தில்தான் உள்ளார். அவர் தனது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) பெட்ரோல் காரை சிஎன்ஜி காராக மாற்றுவது குறித்து யோசித்து கொண்டுள்ளார்.
உடனடியாக நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்பாக, பெட்ரோல் காரை சிஎன்ஜி காராக மாற்றும்போது என்னென்ன விஷயங்களை எல்லாம் பரிசீலனை செய்ய வேண்டும்? என, டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திடம், அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவருக்கான பதில்தான் இந்த செய்தி. இது பாலமுருகனுக்கு மட்டுமல்லாது, இதே சந்தேகத்தில் உள்ள இன்னும் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் நம்புகிறது.
பாலமுருகன், முதலில் உங்கள் பெட்ரோல் கார், சிஎன்ஜி மூலம் இயங்குவதற்கு உகந்ததா? என்பதை பரிசோதிக்க வேண்டும். சிஎன்ஜி மூலம் இயங்குவதற்கு இணங்க கூடியதாக இருந்தால் மட்டுமே உங்கள் எண்ணம் ஈடேறும். உங்கள் காரின் ஓனர் மேனுவல் (Owner Manual) மூலம் இந்த கேள்விக்கு விடையை கண்டறியலாம்.
இந்த கேள்விக்கான விடையை கண்டறிய மாற்று வழிகளும் உள்ளன. உங்கள் காரை தயாரித்த நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சிஎன்ஜி கன்வெர்ஷன் சென்டர்களை (CNG Conversion Centres) நீங்கள் அணுகலாம். உங்கள் கார் சிஎன்ஜி மூலமாக இயங்குவதற்கு இணங்க கூடியதாக இருந்தால் மட்டுமே, அடுத்த விஷயங்களை பரிசீலனை செய்ய வேண்டும்.
இதற்கு அடுத்தபடியாக 'சிஎன்ஜி கிட்' பொருத்துவதற்கு ஆகும் செலவுகளை பரிசீலனை செய்ய வேண்டும். 'சிஎன்ஜி கிட்' வகை மற்றும் 'லேபர்' ஆகிய காரணிகளை பொறுத்து, இதற்கு ஆகும் செலவு மாறுபடலாம். அனேகமாக ஆர்டி (RTO) கட்டணங்கள் உள்பட இதற்கு 70 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் செலவு ஆகலாம். ஆனால் இது தோராயமான தொகை மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மற்ற பல்வேறு காரணிகளை பொறுத்து, செலவு மாறுபடலாம்.
இதற்கு அடுத்தபடியாக நீங்கள் வாரண்டியை பரிசீலனை செய்ய வேண்டும் பாலமுருகன். உங்கள் பெட்ரோல் காரை சிஎன்ஜி காராக மாற்றினால், உங்கள் கார் தயாரிப்பு நிறுவனம் வழங்கிய வாரண்டி பலனில்லாத ஒன்றாக மாறலாம். எனவே அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னால், உங்கள் கார் தயாரிப்பு நிறுவனம் அல்லது டீலர் உடன், வாரண்டி குறித்து கலந்தாலோசனை செய்யுங்கள்.
சிஎன்ஜிக்கு மாற்றுவது என்ற உங்கள் முடிவு, வாரண்டி மட்டுமல்லாது, காப்பீட்டிலும் (Insurance) பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். அதாவது சிஎன்ஜி கிட் காரின் மதிப்பு மற்றும் பாதுகாப்பில் தாக்கங்களை ஏற்படுத்தும். இதன் காரணமாக இன்சூரன்ஸ் பிரீமியம் உயரலாம். 'க்ளைம்' நடைமுறைகளின்போது சிக்கல்கள் ஏற்படுவதை தடுக்க, சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்டிருப்பது தொடர்பான தகவல்களை, உங்கள் காப்பீட்டு நிறுவனத்திடம் தெரிவிப்பது மிகவும் முக்கியமானது.
இதற்கு அடுத்தபடியாக சிஎன்ஜி கிடைப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் பெட்ரோல், டீசல் போல் சிஎன்ஜி எளிதாக கிடைக்காது. இருப்பினும் அரசின் முயற்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக நகர பகுதிகளில் தற்போது சிஎன்ஜி ஓரளவிற்கு எளிதாக கிடைக்கிறது.
இங்கே ஒரு வார்த்தையை நினைவில் கொள்ளுங்கள். ஓரளவிற்கு! நகர பகுதிகள் என்றாலும், அங்கு சிஎன்ஜி ஸ்டேஷன்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் உள்ளன. எனவே நீங்கள் சிஎன்ஜி நிரப்ப சில சமயங்களில் ஒரு மணி நேரம் வரை கூட வரிசையில் காத்திருக்க நேரிடலாம். இதுவே கிராம பகுதிகள் என்றால், நிலைமை மிகவும் மோசம். எனவே நன்றாக யோசித்து இறுதி முடிவெடுப்பது நல்லது.
இதற்கு அடுத்தபடியாக, காரின் செயல்திறனில் சிஎன்ஜி பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்வது சிறந்தது. பெட்ரோல் மூலமாக இயங்கும்போது கிடைக்கும் பவர் மற்றும் டார்க் அவுட்புட் உடன் ஒப்பிட்டால், சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது கிடைக்கும் பவர் மற்றும் டார்க் அவுட்புட் மிகவும் குறைவாக இருக்கும். இது காரின் ஆக்ஸலரேஷனில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அத்துடன் மலைகளில் ஏறும்போதும், நெடுஞ்சாலைகளில் ஓவர்டேக் செய்யும்போதும், இன்ஜின் பவர் குறைந்தது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்படும். அத்துடன் சிஎன்ஜி கிட் பொருத்தினால், காரின் பராமரிப்பு பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஸ்பார்க் பிளக் மற்றும் ஃபில்டர்கள் போன்றவற்றை பராமரிக்க கூடுதல் உழைப்பை கொடுக்க வேண்டியிருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெட்ரோலில் இருந்து சிஎன்ஜிக்கு மாறுவதற்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இவைதான். இது போன்ற விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு 'ஓகே' என்றால், சிஎன்ஜிக்கு மாறலாம். விலை குறைவு, அதிக மைலேஜ் போன்ற சிறப்பம்சங்கள் உடன், சிஎன்ஜியில் இன்னும் ஏராளமான நன்மைகள் உள்ளன.
பெட்ரோல் மற்றும் டீசல் உடன் ஒப்பிடும்போது, சிஎன்ஜி கார் தீப்பிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. அத்துடன் இது சுற்றுச்சூழலுக்கு நட்பானது. எனவே சிஎன்ஜி-க்கு மாறுவது என்பது சிறப்பான ஒரு முடிவுதான். ஆனால் உங்கள் தேவைகள் மற்றும் சூழலை பொறுத்து இறுதி முடிவு எடுப்பது சிறந்தது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications