மேஜிக் மாதிரி இருக்கு! 67 சதவீதம் உயர்ந்த டாடா கார் விற்பனை! இதுக்கு உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
இந்திய சந்தையில் கடந்த ஜூன் மாதம் மிகவும் அதிகமான கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் வழக்கம் போல மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் 1,47,187 கார்களை விற்பனை செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 62,076 கார்களை விற்பனை செய்திருக்கிறது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெறும் 37,083 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

அதாவது இம்முறை 24,993 கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகமாக விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனையில் 67.40 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியின் மூலமாக இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயர்ந்திருப்பதற்கு காரணம் என்ன? என்பதை உங்களுக்கு விளக்க டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கடமைப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது தனது கார்களை தொடர்ச்சியாக அப்டேட் செய்து கொண்டே வருகிறது.

டாடா பன்ச் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Tata Punch Facelift) மாடல் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Tata Punch EV Facelift) மாடல் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
அதேபோல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் டியாகோ (Tata Tiago) மற்றும் டியாகோ இவி (Tata Tiago EV) எலெக்ட்ரிக் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல்களின் வருகை, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.
அத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சியரா (Tata Sierra) காரை, கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்போது ஒவ்வொரு மாதமும் சுமாராக 7,000-8,000 டாடா சியரா கார்கள் விற்பனையாகி வருகின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தியதில் சியராவிற்கு மிக முக்கியமான பங்கு உண்டு.
கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் டாடா சியரா விற்பனையிலேயே இல்லை. ஆனால் தற்போது அதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு 7,000-8,000 விற்பனை எண்ணிக்கை கிடைத்து கொண்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை உயர்ந்திருப்பதற்கு பின்னால் உள்ள காரணம் உங்களுக்கு புரிந்திருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்த டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.65 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 9.69 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.
டாடா பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் மாடலை நீங்கள் பாஸ் (BaaS) முறையிலும் வாங்கலாம். இந்த முறையை தேர்வு செய்தால் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 6.49 லட்ச ரூபாய் மட்டுமே. ஆனால் ஒரு கிலோ மீட்டருக்கு 2.6 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.
மறுபக்கம் டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை வெறும் 4.69 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையும் கூட 6.99 லட்ச ரூபாய் மட்டுமே. பாஸ் முறையை தேர்வு செய்தால் இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டை வெறும் 4.69 லட்ச ரூபாய் என்ற விலையிலேயே வாங்க முடியும். ஆனால் ஒரு கிலோ மீட்டருக்கு 2.6 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.
இந்த வரிசையில் டாடா சியரா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 11.49 லட்ச ரூபாயாக உள்ளது. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 18.79 லட்ச ரூபாயாக இருக்கிறது. டாடா சியரா இவி எலெக்ட்ரிக் காருக்கு பாஸ் திட்டம் வழங்கப்படவில்லை என்பதும், இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே டாடா மோட்டார்ஸின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்புகளாக இவை கருதப்படுகின்றன. எனவே இந்த கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அத்துடன் வழக்கம் போல டாடா நெக்ஸான் (Tata Nexon) போன்ற கார்களும் தொடர்ந்து சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மிகவும் பிரம்மாண்டமான வளர்ச்சியை தேடி தந்துள்ளன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை வரும் மாதங்களில் மேலும் உயரலாம் என்று டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது. ஏனெனில் டாடா சியரா இவி (Tata Sierra EV) எலெக்ட்ரிக் கார் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து, டாடா டிகோர் (Tata Tigor) மற்றும் டாடா டிகோர் இவி (Tata Tigor EV) ஆகியவற்றின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. எனவேதான் டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை வரும் மாதங்களில் மேலும் உயரலாம் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications