ரெனால்ட் கம்பெனி ஒரு முடிவோட தான் இருக்கு... இலாபத்தை பார்க்காமல் சலுகையை வாரி வழங்கி இருக்கு!
ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் அதன் குறிப்பிட்ட கார்களுக்கு இந்த ஜூலை மாதத்தை முன்னிட்டு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் ரெனால்ட் கைகர், டிரைபர் மற்றும் க்விட் கார்களுக்கு இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கைகர் கார் அதிகப்பட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலான சலுகைகளை பெற்றுள்ள நிலையில், இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
அவ்வப்போது கார்களுக்கு சலுகைகளை அறிவிக்கும் நிறுவனங்களுள் ரெனால்ட் ஒன்றாகும். பிரெஞ்சு நாட்டை சேர்ந்த இந்த நிறுவனத்தில் இருந்து சில மாதங்களுக்கு முன்னர் புதிய டஸ்டர் கார் அறிமுகம் செய்யப்பட்டது. மேம்படுத்தப்பட்ட அந்த புதிய டஸ்டரை தவிர்த்து, இந்தியாவில் தனது மற்ற அனைத்து கார் மாடல்களுக்கும் ஜூலை மாத சலுகைகளை தற்போது ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே கூறியதுபோல், அதிகப்பட்ச ரூ.1.25 லட்சம் வரையிலான சலுகையை கைகர் என்கிற ரெனால்ட்டின் SUV வகையைச் சேர்ந்த கார் பெற்றுள்ளது. இருப்பினும், ரூ.1.25 லட்சம் வரையிலான இந்த சலுகையை அனைவராலும் பெற முடியாது. கேரளாவில் கைகர் காரை வாங்குபவர்களால் மட்டுமே பெற முடியும்.
ரெனால்ட் நிறுவனம் தனது கைகர், டிரைபர், க்விட் கார்களுக்கு ஜூலை மாத சலுகைகளை கேரளா, குஜராத் மாநிலங்களுக்கு தனித்தனியாகவும், நாட்டின் பிற மாநிலங்கள் அனைத்திற்கும் சேர்த்து ஒரு மாதிரியாகவும் அறிவித்துள்ளது. இதில், கேரளா மாநிலத்தில் கைகர் காருக்கான சலுகையாகவே ரூ.1.25 லட்சம் வரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரூ.1.25 லட்சத்தில், கைகரின் குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு ரூ.50,000 வரையிலான பணம் தள்ளுபடி, ரூ.50,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரெனால்ட்டின் RELIVE ஸ்க்ராபேஜ் திட்டத்தின் கீழ் ரூ.25,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் உள்ளிட்டவை கிடைக்கும். இது இல்லாமல், லாயலிட்டி போனஸ், பரிந்துரைப்பு சலுகைகள் மற்றும் கார்ப்பிரேட் போனஸ் உள்ளிட்டவையும் அடங்குகின்றன.
RELIVE ஸ்க்ராபேஜ் திட்டம் என்பது பழைய காரை முறையாக அழித்து, அப்புறப்படுத்தி புதிய கைகர் வாங்குவது ஆகும். இந்தியாவில் எந்த பகுதியில் இருந்து இந்த ஸ்க்ராபேஜ் திட்டத்தின் கீழ் ரெனால்ட் காரை வாங்கினாலும் ரூ.25,000 வரையிலான சலுகைகள் கிடைக்கும். கேரளா, குஜராத்தை தவிர்த்து இந்தியாவின் மற்ற பகுதிகளில் கைகருக்கான பணம் தள்ளுபடி சலுகை ரூ.20,000 வரையிலும், எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.25,000 வரையிலும் ஆகும்.
ரெனால்ட் டிரைபருக்கு கேரளா, குஜராத்தை தவிர்த்து இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு ரூ.30,000 வரையிலான சலுகைகள் மற்றும் RELIVE ஸ்க்ராபேஜ் திட்டத்தின் கீழ் ரூ.25,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன. அதுவே, கேரளாவில் ரூ.60,000 வரையிலான சலுகைகள் உடன் டிரைபரை வாங்கலாம். இது இல்லாமல், கார்ப்பிரேட் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெனால்ட்டின் ஹேட்ச்பேக் ரக காரான க்விட் RELIVE ஸ்க்ராபேஜ் திட்டத்தின் கீழ் ரூ.25,000 இல்லாமல் ரூ.30,000 வரையிலான சலுகைகளை பெற்றுள்ளது. ஆனால், இதற்கு நீங்கள் 2026ஆம் ஆண்டிற்கான அப்கிரேடை பெற்ற க்விட் காரை வாங்க வேண்டும். பழைய ஜென்ரேஷன் க்விட் காருக்கு ரூ.15,000 வரையில் மட்டுமே சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இருப்பதிலேயே அதிகப்பட்ச சலுகையை பெற்றுள்ள ரெனால்ட் கைகர் காரில் தமிழ்நாட்டில் ரூ.70,000 வரையிலான சலுகைகளை பெறலாம். க்விட் காருக்கு மேலே குறிப்பிடப்பட்ட சலுகைகள் கேரளா, அசாம், கர்நாடகா, ஒடிசா, உத்தரகாண்ட், தெலுங்கானா, சத்தீஸ்கர், அருணாச்சல மற்றும் ஆந்திர பிரதேசம் மாநிலங்களுக்கு என்று தனியாக அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications