30 கிமீக்கும் அதிகமான மைலேஜ்! வெறும் 6 லட்சத்துக்கு புதிய கார்! டாடா, மாருதிக்கு மொத்தமா 'செக்' வெச்சுட்டாங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ரெனால்ட் பிரிட்ஜர் (Renault Bridger). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். இதில், மொத்தம் 5 பவர்ட்ரெயின் ஆப்ஷன்கள் (Powertrain Options) வழங்கப்படவுள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்: இதுதான் ரெனால்ட் பிரிட்ஜர் காரின் முதல் பவர்ட்ரெயின் ஆகும். இந்த 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் உடன் 4 சிலிண்டர் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 சிலிண்டர்கள் என்பதால், இன்ஜின் 'ஸ்மூத்' ஆக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

அத்துடன் 3 சிலிண்டர் இன்ஜின் கொண்ட கார்களை விட, இதன் என்விஹெச் (NVH - Noise, Vibration, Harshness) அளவுகளும் சிறப்பாக இருக்கும். அதாவது கேபின் உள்ளே சௌகரியமான பயணத்தை உறுதியாக எதிர்பார்க்கலாம். இந்த இன்ஜின், எம்பிஎஃப்ஐ (MPFi - Multi-Point Fuel Injection) தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதன் பவர் அவுட்புட் 80 முதல் 90 பிஹெச்பி என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்: இதுதான் ரெனால்ட் பிரிட்ஜர் காரின் 2வது பவர்ட்ரெயின் ஆகும். இது டர்போ பெட்ரோல் இன்ஜின் என்பதால், கார் ஆர்வலர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இதுவும் 4 சிலிண்டர்களைதான் கொண்டிருக்கும். இது ரெனால்ட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளது.
இந்த 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (New-gen Renault Duster) காரில் வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 120 பிஹெச்பி மற்றும் 200-220 என்எம் டார்க் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இன்ஜின் உடன் மேனுவல், டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் மற்றும் ட்யூயல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. செயல்திறன் மற்றும் மைலேஜ் என 2 அம்சங்களிலும் இந்த இன்ஜின் தலைசிறந்து விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1.2 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின்: இது ரெனால்ட் பிரிட்ஜர் காரின் 3வது பவர்ட்ரெயின் ஆகும். இது 1.2 லிட்டர் 3 சிலிண்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹைப்ரிட் இன்ஜின் என்பதால், மைலேஜ் சிறப்பாக இருக்கும். ஒரு லிட்டருக்கு அனேகமாக 30 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
1.2 லிட்டர் டர்போ சிஎன்ஜி: இது ரெனால்ட் பிரிட்ஜர் காரின் 4வது பவர்ட்ரெயின் ஆகும். இந்திய சந்தையில் தற்போது சிஎன்ஜி கார்களுக்கு நல்ல 'டிமாண்ட்' உள்ளது. இங்கு தற்போது 100 கார்கள் விற்பனை செய்யப்படுகிறது என்றால், அதில் சுமார் 22 கார்கள், சிஎன்ஜி மூலம் இயங்க கூடியவையாக உள்ளன. எனவே பிரிட்ஜர் காரில் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனையும் வழங்க ரெனால்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நாம் மேலே பார்த்த 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன்தான் சிஎன்ஜி ஆப்ஷனை ரெனால்ட் நிறுவனம் வழங்கவுள்ளது. இது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டின் மூலமாகவும் இயங்க கூடியதாக இருக்கும். இதுவும் மைலேஜ் மற்றும் செயல்திறன் என இரண்டு அம்சங்களிலும் தலைசிறந்து விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெனால்ட் நிறுவனம் பிரிட்ஜர் காரின் சிஎன்ஜி வெர்ஷனில், ட்யூயல் சிலிண்டர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளது. எனவே லக்கேஜ்களை வைத்து கொள்வதற்கான இடவசதியிலும் சமரசம் செய்ய வேண்டியதில்லை. ரெனால்ட் நிறுவனம் சிஎன்ஜி சிலிண்டர்களை காரின் பாடிக்கு (Body) கீழே வழங்கும் என தெரிகிறது. இதன் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 30 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ரெனால்ட் பிரிட்ஜர் இவி: ஆம், ரெனால்ட் பிரிட்ஜர் கார் எலெக்ட்ரிக் அவதாரத்திலும் விற்பனை செய்யப்படவுள்ளது. இதுதான் ரெனால்ட் பிரிட்ஜர் காரின் 5வது மற்றும் கடைசி பவர்ட்ரெயின் ஆகும். 35 kWh மற்றும் 55 kWh என ரெனால்ட் பிரிட்ஜர் இவி எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதில், 35 kWh பேட்டரின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 350 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம். அதே நேரத்தில் 55 kWh பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் 500 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம். இதுதான் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரெனால்ட் பிரிட்ஜர் கார் இந்திய சந்தையில் வரும் 2027ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் ஆரம்ப விலை வெறும் 6 அல்லது 7 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வருகை மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), டாடா நெக்ஸான் (Tata Nexon) போன்ற கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications