ரூ.7 லட்சத்தில் வரும் மிரட்டலான புதிய ரெனோ பிரிட்ஜர் எஸ்யூவி... நெக்ஸான், பிரெஸ்ஸாவுக்கு புதுப் போட்டி!
இந்தியாவில் தனது வர்த்தகத்தை வலுவாக மாற்றும் முயற்சியில் ரெனோ கார் நிறுவனம் தீவிரமாக இறங்கி உள்ளது. அந்த வகையில், மிக அதிக வர்த்தக வாய்ப்பு இருக்கும் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த தயாரிப்பை விரைவில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், 4 மீட்டருக்குள் உருவாக்கப்பட்டுள்ள புதிய பிரிட்ஜர் (Bridger) எஸ்யூவியை வரும் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளது. இது இந்தியாவுக்காக வடிவமைத்து உருவாக்கப்படும் புதிய தலைமுறை நகர்ப்புற எஸ்யூவியாக வர இருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் பிரிட்ஜர் எஸ்யூவியின் மாதிரி மாடல் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த எஸ்யூவியை பார்த்தாலே, வழக்கமான நகர்ப்புற எஸ்யூவிகளிலிருந்து இது சற்று மாறுபட்ட டிசைன் தாத்பரியத்தில் மிரட்டலான தோற்றத்தில் உருவாக்கப்படுவது தெரிகிறது. பெட்டி போன்ற வடிவமைப்பு, உயரமான தோற்றம், பெரிய அளவிலான சக்கர வளைவுகள் மற்றும் பின்புற கதவில் பொருத்தப்பட்ட ஸ்பேர் வீல் ஆகியவை இதற்கு ஒரு முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகின்றன. மேலும், கான்செப்ட் மாடலில் 18 அங்குல சக்கரங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்த புதிய எஸ்யூவி நான்கு மீட்டருக்குள் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், பின்புற பயணிகளுக்காக 200 மிமீ முழங்கால் வைப்பதற்கான அதிக இடவசதி வழங்கப்பட்டுள்ளதாக ரெனோ தெரிவித்துள்ளது. அதேபோல், 400 லிட்டர் கொள்திறன் கொண்ட பொருட்கள் வைக்கும் இடவசதியும் கொடுக்கப்படும். எனவே, சிறிய எஸ்யூவி வாங்க விரும்பும் குடும்பங்களுக்கு நடைமுறை பயன்பாட்டை முக்கியமாகக் கொண்டு இது உருவாக்கப்படலாம்.
இந்த புதிய எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுவதுடன், மற்றொரு தேர்வாக புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை இந்த காருக்காக வழங்க ரெனோ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால், 4 மீட்டருக்குள் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுடன் இருந்தால், வரிச்சலுகையை பெற வழிவகுக்கும். அத்துடன், விலையையும் போட்டியாளர்களுக்கு சவாலாக நிர்ணயிக்க முடியும்.

புதிய பிரிட்ஜர் எஸ்யூவி பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் மட்டுமின்றி, ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன்களிலும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.7 லட்சம் முதல் ரூ.11 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த கார் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையை முதன்மையாக கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இந்த புதிய எஸ்யூவி சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவும் ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சந்தைப் போட்டி மிக வலுவாக இருக்கும் 4 மீட்டருக்கும் குறைவான எஸ்யூவி சந்தைக்குள் நுழையும் இந்த கார் டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், மாருதி பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO மற்றும் ஸ்கோடா கைலாக் போன்ற கார்களுடன் இது போட்டியிடும். குறிப்பாக, அதன் முரட்டுத்தனமான வடிவமைப்பு தனித்துவமான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் இருக்கலாம்.

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் அழுத்த கண்காணிப்பு வசதி, 360 டிகிரி கேமரா போன்ற வசதிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், உயர்தர வேரியண்ட்டுகளில் பெரிய டச்ஸ்க்ரீன் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அடாஸ் போன்ற உயர் வகை தொழில்நுட்பங்கள் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications



